தாயகம் மீதான ஏக்கம்! | தினகரன்

தாயகம் மீதான ஏக்கம்!

இலங்கையில் 1983 ஜுலைக் கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்டு இன்னும் மூன்று மாதங்களில் முப்பத்தாறு வருடங்கள் நிறைவடையப் போகின்றது. ‘கறுப்பு ஜூலை’ என்ற அவப்பெயரை இலங்கைக்கு சர்வதேச ரீதியில் பெற்றுக் கொடுத்த அந்த வன்முறையின் கறையை எமது நாட்டிலிருந்து இத்தனை காலம் கடந்த பின்னரும் துடைத்தெறிய முடியாதிருக்கிறது.

அதற்கான காரணம் இலங்கையின் அரசியல்!

கறுப்பு ஜூலைக்குப் பின்னர், சர்வதேச அளவில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்திய மூன்று தசாப்த கால யுத்தமும் நடந்து முடிந்து விட்டது.ஆனால் 83 கறுப்பு ஜூலையை இலங்கையர்கள் மாத்திரமன்றி சர்வதேசமும் இன்னும் மறந்து விடவில்லை. அதற்கான காரணம் ‘கறுப்பு ஜூலை’ என்பது அன்றைய ஆட்சிக்காலத்தின் போது மிகவும் கச்சிதமாகத் திட்டமிடப்பட்ட ஒரு இனஅழிப்பு வன்முறை!

சர்வதேசம் எமது நாடு மீது குத்திய அவப்பெயர் முத்திரையை இன்னும்தான் துடைத்துக் கொள்ள முடியாதிருக்கின்றது.தென்னிலங்கையின் பெரும்பான்மையின ஆட்சியாளர்கள் மனம் வைத்திருந்தால் 1983 ஜூலைக்குப் பின்னரான கடந்த மூன்றரை தசாப்த காலத்தில் இந்தக் கறையை நீக்கியிருக்க முடியும்.

வடக்கு, கிழக்கில் இளைஞர்கள் ஆயுதம் ஏந்த முற்பட்டதற்கான அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்து, அப்பிரச்சினைகளுக்கு அன்றைய காலயத்திலேயே நியாயமான தீர்வை வழங்கியிருப்பின் யுத்தத்தை ஆரம்பத்திலேயே ஒருதுளி இரத்தமுமின்றி முடிவுக்குக் கொண்டு வந்திருக்க முடியும்.

எமது நாடு இத்தனை உயிர்களை அநியாயமாக இழந்திருக்க வேண்டிய அவசியமில்லை. விலைமதிக்க முடியாத உடைமைகளை அழித்தொழித்து, நாட்டு மக்களில் ஒரு சாராரின் வாழ்க்கைத் தரத்தை நீர்மூலமாக்கியிருக்க வேண்டிய அவசியமில்லை. நாட்டின் மக்கள் வளம் அகதிகளாக உலகின் எங்கெங்கோ தேசங்களுக்கெல்லாம் புலம்பெயர்ந்து சென்றிருக்க வேண்டிய தேவையில்லை. குடும்பத் தலைவனை இழந்த பல்லாயிரம் பெண்கள் வடக்கு, கிழக்கிலும், தென்னிலங்கையிலும் இன்னுமே வேதனைக் கண்ணீருடன் வாழ வேண்டியதில்லை. யுத்தத்தில் உழைப்பாளிகளைப் பறிகொடுத்த எத்தனையோ குடும்பங்கள் குட்டிச்சுவராகிப் போயிருக்கும் அவலம் ஏற்பட்டிருக்காது.

தென்னிலங்கை பெரும்பான்மை அரசியல்வாதிகள் இனமுரண்பாட்டைத் தீர்த்து வைக்க வேண்டுமென்று உண்மையிலேயே விருப்பம் கொள்ளவில்லை. ஒருபுறம் இனவாதமும் வன்மமும்...மறுபுறம் அவர்களது அரசியலைத் தக்க வைத்துக் கொள்வதற்கு இவையே தேவையாக இருந்தன.

அவர்கள் சிறுபுள்ளியாகத் தோன்றிய இனமுரண்பாட்டை பூதாகரமாக மாற்றியிருக்கின்றனர். இப்பிரச்சினையை என்றுமே தீர்த்துக் கொள்ள முடியாதபடி சிக்கல் நிறைந்தாக மாற்றியமைத்துள்ளனர். இனமுரண்பாட்டை அடிப்படையாக வைத்தபடிதான் அவர்களது அரசியல் தங்குதடையின்றி ஓடிக் கொண்டிருக்கின்றது.

தாய்நாட்டுக்கு ஏற்பட்ட இத்தனை அவலங்கள் இத்தோடு முடியட்டும்! சுயஇலாப அரசியலை ஒரங்கட்டி வைத்து விட்டு, அனைத்து இனங்களையும் சமமாக மதித்து, தேசியப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வொன்றை ஏற்படுத்துவோமென்று தென்னிலங்கையின் அத்தனை அரசியல் தலைவர்களும் ஏகமனதாக முடிவெடுத்தால் போதும்.

எமது நாட்டின் அத்தனை சிக்கல்களுக்குமே நிரந்தரத் தீர்வைக் கொண்டு வந்து விட முடியும். நாட்டில் நிரந்தர அமையும் தோன்றி விடும்.

ஆனால் இவ்வாறெல்லாம் நேர்மைச் சிந்தையுடன் எமது அரசியல்வாதிகள் ஒருபோதுமே பொதுமுடிவொன்றுக்கு ஒருநாளுமே வரப் போவதில்லை. ஏனென்றால் இனவாதமும் மதவாதமுமே இலங்கையில் அரசியலுக்கான பிரதான துரும்புகளாகும். இலங்கையில் இனமுரண்பாட்டு வரலாற்றை எடுத்து நோக்குகின்ற போது, இங்கிருந்து புலம்பெயர்ந்து சென்றுள்ள தமிழர்களை மறந்து விட முடியாது. மேற்குலகை நோக்கிப் படையெடுத்த தமிழர்களில் பலர் அந்நாடுகளில் வசதியான வாழ்க்கைத் தரத்தை ஏற்படுத்தி அங்கு கால்பதித்துக் கொண்டுள்ளனரென்பது உண்மை. அவர்கள் எக்காலத்திலும் மீண்டும் தாய்நாட்டுக்குத் திரும்பி வந்து இங்கு நிரந்தரமாகக் குடியேறப் போவதில்லை. அதற்கான சூழலும் இலங்கையில் இன்னுமே தொன்றி விடவில்லை.

மனித உரிமைகளும் தனிமனித சுதந்திரங்களும் பேணப்படுகின்ற மேற்குலக சூழலுக்கு வாழ்ந்து பழக்கப்பட்ட அத்தமிழர்கள் மீண்டும் இங்கு திரும்பி இச்சூழலில் வாழ்வதற்கு ஒருபோதுமே விரும்பப் போவதில்லை. ஆனாலும் அவர்களிடமுள்ள தாய்நாடு மீதான கனவு என்றுமே நீங்கி விடப் பொவதில்லை என்பது மட்டும் உண்மை!

இது இவ்வாறிருக்க, தமிழ்நாட்டில் வாழ்கின்ற இலங்கைத் தமிழ் அகதிகளின் நிலைமை வேறுவிதமானது.1983 ஜூலைக் கலவரம் நடந்ததில் இருந்து தமிழர்களுக்கும் புலம்பெயரத் தொடங்கிய தமிழர்கள் 36 வருடங்கள் கடந்த பின்னரும் இன்னுமே தமது தாய்நாட்டுக்குத் திரும்ப முடியாமல் அங்கேயே வாழ வேண்டியுள்ளது.

இலங்கைத் தமிழ் அகதிகளை நாடு திரும்ப வைப்பதற்கான பல்வேறு முயற்சிகள் கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2009ம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரும் இவ்விடயம் தொடர்பாக அரசியல்வாதிகள் பலரும் அக்கறையுடன் பேசியதைக் கேட்க முடிந்தது. அதற்கேற்ப தமிழ்நாட்டில் இருந்து சொற்ப அகதிகள் மீண்டும் தாயகம் வந்து சேர்ந்தனர். ஆனால் தமிழகத்திலிருந்து இலங்கை அகதிகள் தாயகம் திரும்புவது அத்துடனேயே நின்று போனது.

இலங்கைக்கு மீண்டும் வந்து வாழ்வதற்கு அவர்கள் அச்சமும் தயக்கமும் கொண்டுள்ளனர் என்பதே உண்மை! தங்களது எதிர்காலப் பாதுகாப்பு குறித்து அவர்கள் இன்னுமே சந்தேகம் கொள்கின்றனர். வாழ்வாதாரத்துக்கான எந்தவித உத்தரவாதத்தை வைத்துக் கொண்டு இலங்கைக்கு மீண்டும் திரும்புவதென அவர்கள் எண்ணுகின்றனர்.

அவர்களது தயக்கத்தில் நியாயம் இல்லாமலில்லை. தமிழகத்தில் இருந்து ஏற்கனவே இலங்கை திரும்பிய அகதிகள் வடக்கில் அவலம் நிறைந்தபடியே இப்போது வாழ்கின்றனர். அகதிகள் மிள்குடியேற்றம் என்பதன் பேரில் சொந்த இருப்பிடங்களுக்குத் திரும்பிய அவர்கள், நிரந்தர வீடு இன்றி குடிசையிலும் வாழ்வதைக் காண முடிகின்றது.

இவ்வாறு வாழ்வதைப் பார்க்கிலும் தமிழ்நாட்டிலுள்ள அகதிமுகாம்களிலேயே வாழ்ந்திருக்கலாம் என்றுதான் அவர்களில் பலரும் நினைக்கின்றனர்.அம்மக்களின் மன ஏக்கங்களையும் தாயகக் கனவையும் அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் எமது நாட்டு மக்கள். அவர்களின் கண்ணீர் துடைக்கப்பட வேண்டும்.


Add new comment

Or log in with...