அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஐ.தே.கவிலேயே பொது வேட்பாளர் | தினகரன்

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஐ.தே.கவிலேயே பொது வேட்பாளர்

- 2015விடப் பலமான கூட்டணி அமையும்  

- விக்கி போட்டியிட்டாலும் தமிழர்கள் வாக்களிக்கப்போவதில்லை

இவ்வாண்டு இறுதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையில் அமைக்கப்படும் கூட்டணியானது 2015ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட கூட்டணியைவிடவும் பன்மடங்கு பலமுடையதாக இருக்கும் என்பதுடன், ஐ.தே.கவின் தலைவர்களில் ஒருவரே பொது வேட்பாளராக களமிறக்கப்படுவார் என்று தொலைத்தொடர்பு மற்றும் டிஜிற்றல் உட்கட்டமைப்பு அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.  

இதேவேளை, ஜனாதிபத் தேர்தலில் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் போட்டியிட்டால் அவருக்கு தமிழ் மக்கள் வாக்களிக்கப் போவதில்லை. தமிழ் மக்கள் மிகவும் அறிவாளிகள். தோல்வியடையும் வேட்பாளருக்கு அவர்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.  

சிறிலங்கா பொதுஜன பெரமுனையின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கவுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தமது அமெரிக்கக் குடியுரிமையை ரத்துசெய்வதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். அவர் வேட்பாளராக களமிறங்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பும். இலகுவாக தோற்கடிக்கக் கூடிய ஒரே நபராக அவரே உள்ளார் என்றும் அவர் கூறினார்.  

தொலைத்தொடர்பு மற்றும் டிஜிற்றல் உட்கட்டமைப்பு அமைச்சில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.  

அவர் மேலும் இங்கு சுட்டிக்காட்டியதாவது,  

அண்மைக்காலமாக ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலேயே நாட்டில் கருத்தாடல்கள் இடம்பெற்று வருகின்றன. தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் தேர்தலில் போட்டியிட விரும்பினால் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கான அழைப்பை விடுக்கலாம்.  

ஜனாதிபதி வேட்பாளராக எவரை களமிறக்குவதென ஐ.தே.முன்னணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடியே நாம் தீர்மானிப்போம். நாம் அமைக்கும் கூட்டணியானது 2015ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட கூட்டணியைவிட பலமடங்கு பலமுடையதாக அமையும். ஐ.தே.கவின் தலைவர்களில் ஒருவரையே வேட்பாளராக களமிறக்குவோம். அது குறித்து பங்களாகிக் கட்சிகளின் தலைவர்களுடன் ஜனநாயக ரீதியில் கலந்துரையாடல்கள் இடம்பெறும்.  

சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள சிலரும் எமக்கு முழுயான ஆதரவை வழங்குவர். வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பில் அவர்கள் பொதுஜன பெரமுனவுடன் இணைந்துச் செயற்பட்டிருக்கவில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அதேபோல் இ.தொ.காவின் தலைவர் தொண்டமான் போன்றோரும் 2015ஆம் ஆண்டு இருந்த நிலைப்பாட்டில் இன்று இல்லை.

(சுப்பிரமணியம் நிஷாந்தன்)    


Add new comment

Or log in with...