மதூஷுடன் கைதான மேலும் இருவர் நாடு கடத்தல் | தினகரன்

மதூஷுடன் கைதான மேலும் இருவர் நாடு கடத்தல்

பிரபல பாதாள உலகக் கோஷ்டித் தலைவர் மாகந்துரே மதூஷுடன் துபாயில் கைதுசெய்யப்பட்ட மேலும் இருவர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக, பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மாளிகாவத்தை வசிப்பிடமாகக் கொண்ட மொஹமட் நசீம் மொஹமட் பைஸர் (37) மற்றும் கொழும்பு -10 வசிப்பிடமாகக் கொண்ட மொஹமட் முபார் மொஹமட் ஜபீர் (30), ஆகியோரே இவ்வாறு துபாயில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டவர்களாவர்.

இவர்கள் நேற்றிரவு நாடுகடத்தப்பட்டுள்ளனர். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கியவர்களை விமான நிலைய குற்றப்புலனாய்வு திணைக்கள பிரிவு அதிகாரிகள் விசாரணைக்காக தடுத்துவைத்துள்ளனர்.

துபாயில் ஆடம்பர ஹோட்டலொன்றில் வைத்து கடந்த பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி மாகந்துர மதூஷ் உட்பட 31 பேர் துபாய் பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் 5 தடவைகளில் 15 பேர் துபாயிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். இதுவரை 3 பேர் விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் ஏனையோர் விசாரணைக்காக தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...