வரட்சிக் காலத்தில் மாத்திரம் வந்து போகும் ஞானோதயம்! | தினகரன்


வரட்சிக் காலத்தில் மாத்திரம் வந்து போகும் ஞானோதயம்!

நாட்டில் தற்போது கொடிய வரட்சி நிலவுகின்றது. இலங்கையின் பல்வேறு இடங்களிலும் உள்ள சிறிய குளங்கள் ஏறக்குறைய முற்றாகவே வற்றி விட்டன. பெரிய நீர்ப்பாசனக் குளங்களிலும், நீர்த் தேக்கங்களிலும் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து விட்டது.

மழை பெய்வது மேலும் தாமதமடைந்து கொண்டு செல்லுமானால் எதிர்வரும் போகத்துக்குரிய நெற்செய்கைக்கு நீர் கிடைக்காத நிலைமை ஏற்படலாம். அத்துடன் குழாய்நீர் விநியோகத்தையும் மட்டுப்படுத்த வேண்டிய நிலைமை ஏற்படலாம்.

இலங்கையைப் பொறுத்த வரை இன்றைய வரட்சி நிலைமையானது நெருக்கடியானதொரு கட்டம் எனலாம்.

நீர்த் தேக்கங்களில் நீர்மட்டம் பெருமளவு குறைந்து விட்டதனால் நீர்மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது. நாட்டில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுவதற்கு இதுவே காரணம்.

நுரைச்சோலை அனல்மின்சார நிலையம் மற்றும் திரவ எரிபொருள் மூலம் மின்னுற்பத்தி செய்யப்படும் நிலையங்களில் இருந்து மாத்திரம் முழு நாட்டுக்கும் மின்சாரம் வழங்குவதென்பது இலகுவான காரியமல்ல. எனவேதான் மின்வெட்டை அமுல்படுத்த வேண்டிய அவசியம் இலங்கை மின்சார சபைக்கு ஏற்படுகின்றது.

எமது மக்களில் பலர் இது போன்ற நெருக்கடியை சரிவரப் புரிந்து கொள்வதில்லை. மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படத் தொடங்கியதும் அரசாங்கத்தை வசைபாடுவது வழமையான பாரம்பரியம்! அனல் மின்சாரம் அல்லது எரிபொருள் மின்சாரத்தை தயாரிப்பதில் உள்ள செலவினம் மற்றும் நெருக்கடி குறித்து மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தாமல் விட்டது அரசாங்கத்தின் தவறென்றே கூற வேண்டும்.

இது ஒருபுறமிருக்க, நாட்டில் இவ்வாறாக வரட்சி ஏற்படுகின்ற வேளையில் மாத்திரமே நாமெல்லாம் தண்ணீர்ப் பற்றாக்குறை பற்றியும் மின்சார நெருக்கடி குறித்தும் உரத்துப் பேசுகின்றோம்.

தண்ணீரைச் சேமித்து வைப்பதிலும், அதனைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதிலும் எவ்வாறாக முன்னவதானம் செலுத்தலாம் என்பதையிட்டு அரசியல்வாதிகளும் துறைசார் நிபுணர்களும் ஊடகங்கள் ஊடாக மக்களுக்கு அறிவுரை கூறுகின்றார்கள்.

மழைநீரைத் தேக்கி வைத்துப் பயன்படுத்துவதற்காக மேலதிக குளங்களை அமைத்தல், வீடுகள் தோறும் பாரியளவில் மழைநீர்த் தாங்கிகளை அமைத்தல், சொட்டு நீர்ப்பாசனத் திட்டம், தண்ணீர் விநியோகத்தில் வீண்விரயங்களைத் தடுத்தல் போன்ற பயன்தரு திட்டங்கள் பற்றியெல்லாம் வரட்சிக் காலம் தொடங்கியவுடன் மாத்திரமே பரபரப்பாகப் பேசப்படுகின்றது.

அதேபோன்று மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவதற்கு எவ்வாறான வழிமுறைகளையெல்லாம் கையாள்வது,ஒவ்வொரு வீட்டிலும் மக்கள் தமது தேவைக்கான மின்சாரத்தைத் தயாரித்துக் கொள்வதற்காக சூரியப் படல் உபகரணத்தைப் பொருத்திக் கொள்வது, மக்கள் தங்களால் உற்பத்தி செய்யப்படுகின்ற மேலதிக மின்சாரத்தை இலங்கை மின்சார சபைக்கு விற்பனை செய்வதற்காக காற்றலை மற்றும் சூரியப் படல் மின்னுற்பத்தி உபகரணங்களைப் பொருத்திக் கொள்வது பற்றியெல்லாம் பயன்தருகின்ற திட்டங்கள் குறித்து இன்றைய கொடிய வரட்சிக் காலத்தில் அதிகம் பேசப்படுகின்றன.

பத்திரிகைகளிலும் இது பற்றிய ஆக்கங்கள் இப்போதெல்லாம் முன்னுரிமை கொடுத்து வெளிவருகின்றன.

இவையெல்லாம் சிறந்த பயன்தரு திட்டங்கள் என்பதில் எதுவித சந்தேகமும் கிடையாது. ஆனால் இவை பற்றியெல்லாம் நாம் வரட்சிக் காலங்களில் மட்டுமே பேசுவோம் என்பது மட்டும் உறுதி. வரட்சியைக் கடந்து சென்ற பின்னர் இவை பற்றிப் பேசப் போவதில்லை. வரட்சிக் காலத்தில் அனுபவித்த கொடுமைகளைப் பற்றியும் நாம் ஒருபோதும் பேசப் போவதில்லை.

இது எமது பொதுப் பண்பு !

மக்கள் மாத்திரமன்றி, அரசாங்கமும் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களும் கூட இத்தகைய பொதுப் பண்பைத்தான் கொண்டிருக்கின்றன.

நெருக்கடி வந்த பின்னர் மாத்திரமே அதுபற்றிப் பேசுவது, இனிமேல் நெருக்கடி ஏற்படாமலிருக்க என்ன செய்யலாமென ஆராய்வது போன்றனவெல்லாம் எமக்குரிய பொதுவான இயல்பு.

இவ்வாறான அலட்சியப் போக்கு காரணமாகவே நாட்டில் வருடாவருடம் தோன்றுகின்ற ஒவ்வாத காலநிலையின் போதெல்லாம் நாம் இவ்வாறு துன்பப்பட வேண்டியிருக்கிறது. ஒவ்வாத காலநிலையினால் ஏற்படப் போகின்ற நெருக்கடிகளை முன்கூட்டியே உணர்ந்து, அதற்கான உரிய திட்டங்கள் வகுத்துச் செயற்படுவோமாக இருந்தால் மின்நெருக்கடியும், தண்ணீர்ப் பற்றாக்குறையும் இத்தனை மோசமாக எமது மக்களைப் பாதிக்கப் போவதில்லை.

இவ்வாறான குறைபாடுகளுக்கெல்லாம் காரணங்கள் எவை?

துறைசார் நிபுணர்கள் எம்மிடம் நிறையவே உள்ளனர். பண்டைக் காலத்தில் இந்தியாவுக்கே நீர்வள நாகரிகத்தை கற்றுக் கொடுத்தவர்கள் இலங்கையர்களாவர். அவ்வாறிருக்கையில், விஞ்ஞான தொழில்நுட்பங்கள் விருத்தியடைந்த இன்றைய காலத்தில் நாம் இத்தனை சிரமமடைகிறோம் என்றால் தலைமைகளின் அலட்சியமே இதற்கெல்லாம் காரணம்.

அரசியலில் மாத்திரமே எமது நாடு கவனம் செலுத்துகிறது. அத்தியாவசிய துறைகள் மீது அலட்சியமே காண்பிக்கப்படுகின்றது. இத்தகைய நிலைமை மாற்றமடைய வேண்டும். காலநிலை மாற்றங்களால் உருவாகின்ற நெருக்கடிகளைச் சமாளிக்க உரிய திட்டமிடல்களும், நடைமுறைப்படுத்தல்களும் மிகவும் அவசியமாகும்.


Add new comment

Or log in with...