Home » பணவீக்கம் தனிப் பெறுமதியில் பேணப்படுவதால் வர்த்தக சமூகத்தினருக்கு நம்பிக்கை

பணவீக்கம் தனிப் பெறுமதியில் பேணப்படுவதால் வர்த்தக சமூகத்தினருக்கு நம்பிக்கை

- 2022 இல் 70% ஆக இருந்த பணவீக்கத்தை 2024 இல் 5% ஆக மாற்ற எதிர்பார்ப்பு

by Rizwan Segu Mohideen
January 1, 2024 6:43 pm 0 comment

நாட்டின் பணவீக்கத்தை தனி பெறுமதியில் பேணுவதால் வர்த்தகச் சமூகத்தினர் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப முடிந்திருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

2023ஆம் ஆண்டு, மொத்த தேசிய உற்பத்திக்கு நிகராக அரச வருமானம் 11.2% ஆகக் காணப்படுவதாகவும் 2026 ஆம் ஆண்டில் அதனை 15% வரையில் அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (01) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க,

இந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 1.7% ஆக இருந்தது. அது 2023 இல் முழுமையான பொருளாதார வளர்ச்சியில் -3% ஆகும். அதன்படி, 2022 இல் முழுமையான பொருளாதார வளர்ச்சி -11% ஆகும்.

மேலும் முதன்மை கணக்கு இருப்பு தொடர்ந்தும் நேர்ப் பெறுமானத்தில் உள்ள போதிலும் 2022 ஆம் ஆண்டில், இது ரூபா 895 பில்லியன் எனும் மறைப் பெறுமானத்தில் இருந்தது. இது நவம்பர் மாத நிலவரப்படி ரூபா 333 பில்லியன் என்ற நேர்ப் பெறுமானமாக மாறியுள்ளது.

மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணையைப் பெற்ற பின்னர், வெளிநாட்டுக் கையிருப்பு 4 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்திலிருந்து 337 மில்லியன் அமெரிக்க டொலர்கள், ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 220 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் உலக வங்கியிடமிருந்து 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளன.

மேலும் பணவீக்கத்தை ஒற்றை இலக்கத்தில் பேணவும் முடிந்துள்ளது. 2022 இல் பணவீக்கம் 70% ஆக இருந்தது. இது 2024 இல் 5% அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நாட்டில் வணிக நம்பிக்கையை வளர்ப்பதற்கு இது ஒரு முக்கிய காரணமாகும்.

மேலும் 2023 ஆம் ஆண்டில் அரச வருமானம் 3110 பில்லியன் ரூபாவாகும். அதன்படி, 2023 ஆம் ஆண்டின் திருத்திய மதிப்பீடு 2850 பில்லியன் ரூபாவாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் இது அரசின் வருமானத்தில் 11.2% ஆகும். 2026 இல் 15% வளர்ச்சியை எட்ட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

இந்நாட்டு வரி கோப்பு எண்ணிக்கையின் வளர்ச்சி 2019 இல் பதிவு செய்யப்பட்ட மொத்த வரி செலுத்துவோர் எண்ணிக்கை 1,705,233 ஆகும். பல்வேறு கொள்கை ரீதியிலான முடிவுகளால், 2020 இல் 677,613 ஆகக் குறைந்துள்ளது. 2021 இல், அது 507,085 ஆக இருந்தது. 2022 இல் 437,547 ஆக இருந்த வரிக் கோப்புகளின் எண்ணிக்கையை ஒரு மில்லியனாக அதிகரிக்க முடிந்துள்ளது.

மேலும், நிலுவையில் உள்ள அனைத்து கொடுப்பனவுகளும் செலுத்தப்பட்டுள்ளன. தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த போது 350 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான கட்டணங்கள் செலுத்தப்படாமல் இருந்தன. 2023 டிசம்பர் 15, ஆகும்போது, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து திட்டங்களுக்கான கொடுப்பனவுகளையும் முழுமையாக செலுத்த முடிந்துள்ளது.

2024 முதல், ஒரு மாதத்திற்கு மேல் பணம் செலுத்துவதில் தாமதம் ஏற்படாத வகையில் கொள்கை ரீதியான இணக்கப்பாட்டுடன் அரசாங்கம் செயல்பட்டு வருகின்றது. மேலும், 2024 ஆம் ஆண்டிற்கான அஸ்வெசும கொடுப்பனவுகளுக்கான விண்ணப்பங்கள் ஜனவரி இறுதியில் அல்லது பெப்ரவரி மாதம் ஆரம்பத்தில் கோரப்படவுள்ளன. 1,410,064 பேருக்கு டிசம்பர் மாத கொடுப்பனவையும் எம்மால் செலுத்த முடிந்தது.

20 இலட்சம் பேருக்கு இந்த நிவாரணங்களை வழங்குவதே எமது இலக்கு. 2023 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சில குறைபாடுகளைத் தவிர்த்து நிவாரணங்களைப் பெற வேண்டிய குழுவைக் கண்டறிந்து அவர்களுக்கு சலுகைகளை வழங்க அரசாங்கம் தயாராகி வருகிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT