நுண்கடன் மீளச் செலுத்துவது இரத்து; வடக்கில் 5081 பெண்கள் நன்மை | தினகரன்

நுண்கடன் மீளச் செலுத்துவது இரத்து; வடக்கில் 5081 பெண்கள் நன்மை

பிரதமரிடம் விடுத்த கோரிக்கைக்கு பலன்

நுண்கடன் நிறுவனங்களினால் நாட்டின் 12 மாவட்டங்களில் 45 ஆயிரத்து 139 பெண்கள் பெற்றுக்கொண்ட 1255மில்லியன் ரூபா கடனைத் தள்ளுபடி செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதலின் பிரகாரம் நிதி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா இதன் மூலம் வடக்கில் 5081பெண்கள் தங்களின் நுண்கடனை மீள செலுத்த தேவையில்லை என தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு கிழக்கு மாகாணங்கள் உட்பட பல பாகங்களிலும் நுண்கடனை வழங்கிய நிதி நிறுவனங்கள் அதற்காக அதிக வட்டியை அறவிடுவதோடு அறவீடு என்னும் பெயரில் பெண்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி தொடர்பிலும் கடந்த 3ஆண்டுகளாக நாம் தொடர்ச்சியாக அரசிற்கு சுட்டிக்காட்டி வந்தோம்.

இதனையடுத்து நுண் நிதி நிறுவனங்களில் அதிக வட்டிக்கு அவசர தேவைகளுக்கு கடன்களை பெற்றவர்கள் அதனை மீள் செலுத்த முடியாமல் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருவதனால் அவற்றினை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்திருந்தோம். 

இதன் பிரகாரம் நாட்டின் 12மாவட்டங்களில் இந்த நுண் கடன் விவகாரம் காணப்படுவதாக நிதி அமைச்சு இனம்கண்டுகொண்டது. அதற்கமைய 12மாவட்டத்திலும் 37நிறுவனங்கள் ஊடாக மக்கள் பெற்றுக்கொண்ட நுண் கடன்களில் 1255மில்லியன் ரூபாவினை அந்த நிறுவனங்கள் மூலம் அரசு தள்ளுபடி செய்துள்ளது. அதேநேரம் 141.4மில்லியன் ரூபாவினை இந்த நிறுவனங்களிற்கு அரசு வரிச் சலுகை மூலம் ஈடு செய்கின்றது. 

குறித்த கடன் இரத்துச் செய்யப்படுவதன் மூலம் வடக்கு மாகாணத்தை பொறுத்த வரையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 1096 பெண்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 1580 பெண்களும் மன்னார் மாவட்டத்தில் 670 பெண்களும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 458 பெண்களும் நன்மை அடையும் அதேநேரம் வவுனியா மாவட்டத்தில் 1277,பெண்கள் உள்பட 5081பேர் நன்மை அடைகின்றனர்.  இதேபோன்று கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையில் 2,265 பேரும் , மட்டக்களப்பு மாவட்டத்தில் 2,608 பேரும் நன்மை அடைவதோடு அம்பாறையில் 4,169 பேர் தாம் பெற்ற கடனை மீளச் செலுத்த வேண்டிய தேவைப்பாடு கிடையாது என நிதி அமைச்சினால் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றார். 

(கோப்பாய் நிருபர்)


Add new comment

Or log in with...