போராடி நலிவுற்ற தமிழ்ச் சமூகம் இன்னும் நாதியற்ற நிலையில்! | தினகரன்

போராடி நலிவுற்ற தமிழ்ச் சமூகம் இன்னும் நாதியற்ற நிலையில்!

யுத்தம் முடிவடைந்து 10வருடங்கள்; காலம் உருண்டோடுகிறது, ஆனாலும் மீண்டெழ முடியாத அவல வாழ்வு

இன்னும் இரண்டு மாதங்களில் ( 2019மே மாதத்துடன்) யுத்தம் முடிவடைந்து பத்து ஆண்டுகள் நிறைவடையப் போகின்றன. அதாவது ஒரு தசாப்த காலம் முடிகிறது.

விடுதலைப் புலிகள் இல்லாமல் பத்து ஆண்டுகள் கடந்து விட்டன. தமிழ் மக்களின் அரசியலைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுதந்திரமாக, பத்து ஆண்டுகளாகத் தன்னுடைய பொறுப்பில் வைத்திருக்கிறது. இது தவிர, நல்லாட்சி அரசு ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. நல்லாட்சி அரசாங்கத்தோடு தமிழ்க் கூட்டமைப்பு சேர்ந்து பயணிக்கத் தொடங்கியும் நான்கு ஆண்டுகள் முடிந்து விட்டன.

ஆகவே 2009மே மாதத்துக்குப் பிறகு ஐந்து ஆண்டுகளை எதிர்ப்பு அரசியலிலும் (மகிந்த ராஜபக்ஷ காலத்துக்குரியது) 2015ஜனவரிக்குப் பிந்திய காலத்தை (மைத்திரி – ரணில் விக்கிரமசிங்க காலத்துக்குரியது) இணக்க அரசியலிலும் கழித்திருக்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

தலைமைத்துவ மாற்றங்களோ கட்டமைப்பு மாற்றங்களோ ஏற்படாமல் ஒரே தலைமையின் கீழ், ஒரே கட்டமைப்பின் மூலமாக மேற்கொள்ளப்படும் அரசியலே தொடர்கிறது.

அப்படியென்றால் தொடரும் நடவடிக்கைகள் பற்றிய பொறுப்பும் இந்த ஒரே தலைமைக்கும் ஒரே கட்டமைப்பாக இருப்போருக்குமே உரியது. இடையில் வேறு தலைமைகளும் வேறு விதமான கட்டமைப்பும் ஏற்பட்டிருந்தால் தொடரும் நடவடிக்கையில் மாறுபாடுகள், இடறுப்பாடுகள் நிகழ வாய்ப்பிருந்திருக்கும் என்றொரு வாதத்தை வைக்கலாம். இங்கே அதற்கான சந்தர்ப்பமே இல்லை.

ஆகவே யுத்தத்துக்குப் பிந்திய பத்தாண்டுகளைப் பற்றிய மதிப்பீட்டை நாம் செய்தே ஆக வேண்டும். அப்படித் தமிழ்ச் சமூகம் ஒரு சுய மதிப்பீட்டைச் செய்ய வேண்டியுள்ள கட்டம் இதுவாகும். ஏனென்றால் தமிழ்ச் சமூகம் தொடர்ந்து சந்தித்து வரும் நெருக்கடிகள் அத்தனையும் அப்படியேதான் உள்ளன. காலம் கடந்து கொண்டிருக்கிறதே தவிர, நிலைமையில் முன்னேற்றமே இல்லை. தமிழர்களுடைய காலில் இருந்து தலை வரை உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் அவர்கள் எதிர்பார்க்கும் அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெறுவதற்கும் இந்தச் சுய மதிப்பீடு அவசியம். அப்பொழுதுதான் தொடர்ந்தும் இதே அரசியலை, இதே தலைமைத்துவத்தின் கீழ் முன்னெடுப்பதா? இதே கட்டமைப்பு இதற்கெல்லாம் உதவுமா? என்பதைக் கண்டுணரலாம். 

எந்த வகையான காழ்ப்போ எதிர்ப்புணர்வோ இல்லாமல் வரலாற்றுப் பிரக்ஞையோடும் மக்கள் மீதான பற்றோடும் அரசியலை அறிவுபூர்வமாக விளங்கக் கூடிய திறனோடும் இதைச் செய்ய வேண்டும். அதுவே சமனிலையுடைய ஆய்வாகவும் மதிப்பீடாகவும் இருக்கும். இதில் முக்கியமாகத் தொழிற்பட வேண்டியது, அறிவுபூர்வமான அணுகுமுறையே.

அப்படியென்றால் அத்தகைய சுய ஆய்வையும் (பரிசீலனைகளையும்) பத்தாண்டு கால மதிப்பீட்டையும் யார் செய்வது? எப்படி அதை முன்னெடுப்பது? என்ற கேள்விகள் எழுகின்றன.

ஏன் இந்தக் கேள்விகள் என்றால் அவ்வாறு சுயாதீனமாக ஒரு விடயத்தை அணுகும், ஆய்வு செய்யும், மதிப்பிடும் தரப்புகள் தமிழ்ச் சமூகத்திடம் துரதிருஷ்டவசமாக நலிந்தே இருக்கின்றன. படித்த சமூகம் என்று தன்னைச் சொல்லிக் கொண்டாலும் தமிழ்ச் சமூகத்தின் யதார்த்த நிலை இதுதான். அப்படித்தான் எங்காவது ஒரு அமைப்போ அல்லது சிலரே சுயாதீனமாக மதிப்பீடுகளைச் செய்ய முற்பட்டாலும் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவமோ அறிவோ தமிழர்களிடம் குறைவு. அவை குறித்து குறை மதிப்பீடும் சந்தேகமும் தவறான கற்பிதங்களுமே கொள்வதுண்டு.

இதனால்தான் தமிழர்களிடத்தில் அரசியல், பொருளாதாரம், அறிவுத்துறை, சூழியல் உள்ளிட்ட எந்தத் துறையிலும் புலமைத்துவம் சார்ந்த நிறுவனங்கள் எதுவும் வளர்ச்சியடையவில்லை.

இதுதான் கடந்த எழுபது ஆண்டு கால அரசியல் பிரச்சினை குறித்த மீள்பார்வைகளைக் கொடுக்க முடியாமல் இருப்பதற்கான காரணமாகும்.

முப்பதாண்டு கால ஆயுதப் போராட்டத்தின் சரி பிழைகளை மதிப்பிடவும் அது உண்டாக்கிய பெறுமானங்களை உணர்ந்து கொள்வதற்கும் எத்தகைய மதிப்பீடுகளும் கிடையாது.

யுத்தத்துக்குப் பிந்திய சூழலில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களையும் அவர்களுடைய பிரதேசங்களையும் மீளமைப்புச் செய்வதிலும் முறைப்படுத்தப்பட்ட திட்டங்கள் எதையும் தமிழ்ச் சமூகம் கொண்டிருக்கவில்லை. அரசாங்கம் தான் உருவாக்கிய நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மீள்குடியேற்றம், புனரமைப்பு, மீள்கட்டுமானங்களைத் தவிர, தமிழ்ச் சமூகத்தின் அடையாளங்கள் என்று சொல்லக் கூடிய செயற்பாடுகளோ சிந்தனைகளோ இல்லை. குறைந்த பட்சம் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் இடையீட்டைச் செய்யக் கூடிய அளவுக்குக் கூட தமிழ்ச் சமூகத்தினால் முடியவில்லை. அதாவது தமிழ் அரசியல் தலைமைகளாலும் தமிழ் அறிவுலகத்தினாலும் இயலவில்லை.

இந்த நிலை என்பது மிகப் பெரிய வீழ்ச்சியும் பின்னடைவுமாகும்.

இலங்கையில் மட்டுமல்ல புலம்பெயர்ந்திருக்கிற தமிழர்களாலும் இதைச் செய்ய முடியவில்லை. 2009பிற்பகுதியில் அல்லது 2010முற்பகுதியிலாக இருக்கலாம், போரினால் பாதிக்கப்பட்ட வடக்குக் கிழக்கில் பொருளாதாரக் கட்டுமானங்கள் என்ற சிந்தனையோடு ஒரு அணியினர் வந்திருந்தனர். அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இரண்டு நாட்கள் இது குறித்த சந்திப்பையும் ஆய்வரங்கொன்றையும் நடத்தியுமிருந்தனர். ஆனால், அது அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை.

எனவே இனியும் தாமதிக்காமல் இந்தக் குறைபாடுகளை நிவர்த்திக்க வேண்டியுள்ளது. இந்த இடத்தில் மீளவும் நினைவிற் கொள்ள வேண்டியது, புலிகள் இல்லாமல் பத்து ஆண்டுகள் கடந்து விட்டன. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கைகளில் பத்தாண்டுகள் கழிந்துள்ளன. யுத்தம் முடிந்து பத்து ஆண்டுகள் கடந்திருக்கின்றன என்பதை.

ஆகவே ஒரு நொடிப்பொழுதேனும் வீணடிக்காமல் புதிய திசைகளை நோக்கித் தமிழர்கள் தமது சிறகுகளை விரிக்க வேண்டும்.

அப்படிச் சிறகு விரிப்பதற்கே இப்பொழுது சுயாதீனமான மதிப்பீட்டு அமைப்புகள் அல்லது ஆய்வு மையங்கள் தேவை.

ஒரு நீண்ட அரசியல் போராட்டத்தை நடத்திய மக்கள் வெறும் கையர்களாகவும் எந்தப் பக்கம் திரும்புவது, எப்படி முன்னோக்கிப் பயணிப்பது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருப்பது என்பது எவ்வளவு கொடுமையானது!

யுத்தத்திற்குப் பிந்திய அரசியல் சூழல், பொருளாதார வளர்ச்சி, ஜனநாயக மேம்பாடு, ஊடக சுதந்திரம் என எதிலும் பெரிய வளர்ச்சியோ மாற்றங்களோ ஏற்படவில்லை.

யுத்தத்திற்குப் பிந்திய ஒரு தசாப்தகாலத்தில் நாட்டில் இன்னும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களோ நம்பிக்கைக்கான அடையாளங்களோ உருவாகவில்லை. மகிழ்ச்சிக்கான சமிக்ஞைகள் எதுவும் புலப்படவில்லை. கேள்விக்குறியின் முன்னே நாடும் மக்களும் நிறுத்தப்பட்டுள்ளதாகவே தோன்றுகிறது.

விலைவாசி உயர்வு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உயர்ந்து கொண்டு செல்கிறது. யுத்தம் முடிந்து விட்டால் எல்லாமே சரியாகி விடும் என்று நம்பியிருந்த மக்களுக்கு யுத்தத்துக்குப் பிறகும் வாழ்க்கைச் சுமையின் அழுத்தம் நீடிக்கிறது என்றால்...

படையினரின் கெடுபிடிகள் வெளிப்படையாகக் குறைந்திருந்தாலும் மக்களின் இருப்பிடங்களில் இன்னும் படைப்பிரசன்னம் நீடித்துக் கொண்டேயிருக்கிறது. ஊர்களை விட்டுப் போகும் படைகள் காடுகளில் நிரம்புகிறார்கள்.

இப்படியே இன்னொரு பத்தாண்டுகள் கடக்கப்போகிறதா?

(கருணாகரன்)


Add new comment

Or log in with...