உண்மை ஏற்றுக்கொள்ளப்படாமல் நல்லிணக்கம் ஏற்படப் போவதில்லை | தினகரன்

உண்மை ஏற்றுக்கொள்ளப்படாமல் நல்லிணக்கம் ஏற்படப் போவதில்லை

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் யாழ். மாவட்ட மாநாடு  நல்லூர் இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் கடந்த 16ஆம் திகதி நடைபெற்றபோது  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான  எம்.ஏ.சுமந்திரன் ஆற்றிய உரை      

இரு தரப்பும் குற்றம் இழைத்துள்ளதாகவும், 'மறப்போம், மன்னிப்போம்' என்றும் பிரதமர் கூறுவதோ அல்லது படையினரும் குற்றம் இழைத்திருக்கக் கூடுமென எதிர்க்கட்சித் தலைவர்  மஹிந்த கூறுவதோ நல்லிணக்கத்துக்குஒருபோதும் ஆதாரமாக இருக்கப் போவதில்லை

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணி மாநாடு யாழ் மாவட்டத்திலே நடக்கின்ற போது தமிழரசுக் கட்சியின் தலைவராக அண்ணண் மாவை சேனாதிராசா இங்கு அமர்ந்திருப்பது, பழைய நினைவுகளை மீட்டுகிறது. இன்றைக்கு கட்சியின் தலைவராக இருக்கின்ற அண்ணண் மாவை சேனாதிராசா இன்றைக்கும் வாலிபர் முன்னணியின் தலைவராகத்தான் எங்கள் மனங்களிலே தோற்றமிடுகின்றார்.  

அவரை நாங்கள் அடையாளம் கண்டு கொண்டதே மாணவர் பேரவையிலும் வாலிபர் முன்னணியிலும்தான். இளம் வயதிலேயே தன்னை முழுமையாக எங்களுடைய மக்களின் விடிவுக்காக அர்ப்பணித்து, நீண்ட காலம் சிறைவாசம் அனுபவித்தவர் அவர். அவருடைய வாழ்நாளிலே 80சதவீதமான வாழக்கை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்காகவும் தமிழ் மக்களின் விடிவுக்காகவும் முழுமையாக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.  

கிளிநொச்சியிலே பிரதமர் உரையாற்றியிருந்தார். பத்திரிகைகள் எல்லாவற்றிலும் பிரதானமான செய்தியாக அது வெளிவந்திருக்கிறது. அதில் 'நடந்தவற்றை மறப்போம், மன்னிப்போம்' என்று பிரதமர் கூறினார்.  

 இதில் இரு பகுதியும் குற்றம் இழைத்திருக்கிறார்கள். நாங்கள் உண்மையைச் சொல்லி முன்னேற வேண்டும் என்று ஒரு கருத்தையும் பிரதமர் முன்வைத்திருக்கிறார்.  

 இதுகால வரைக்கும் இலங்கை அரசாங்கத் தரப்பில் இருந்து 'எங்களுடைய படைவீரர்கள் எந்தக் குற்றமும் புரியாதவர்கள்' என்ற நிலைப்பாட்டைத்தான் சொல்லி வந்திருக்கிறார்கள்.  

 இரண்டு வாரங்களுக்கு முன்னர் மஹிந்த ராஜபக்ஷ, போர் வீரர்களும் குற்றம் இழைத்திருக்கிறார்கள் என்றொரு கூற்றை சொல்லியிருந்தார். அதுவும் செய்தியிலே வந்திருந்தது. ஆனால் முதற்தடவையாக உத்தியோகபூர்வமாக நாட்டின் பிரதமர் இரு தரப்பினரும் குற்றங்கள் புரிந்திருக்கிறார்கள் என்பதை பகிரங்கமாகச் சொல்லியிருக்கிறார்.  

அது வரவேற்கத்தக்கது. இதைச் சொல்ல பத்து வருடம் எடுத்திருக்கிறது. இப்பொழுதும் ஏன் அதைச் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதைப் பற்றியும் யோசித்துப் பார்க்க வேண்டும்.  

போர் முடிவடைந்த பிறகு சர்வதேச சமூகத்தினரிடையே நாங்கள் நீதி கேட்டுப் போன போது 2010ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மானமொன்றை நிறைவேற்றியது. பயங்கரவாதத்தை திறம்பட முடிவுக்குக் கொண்டு வந்ததற்காக இலங்கை அரசாங்கத்தைப் பாராட்டி தீர்மானத்தை நிறைவேற்றியது.  

போரின் இறுதிக் கட்டத்திலே யுத்தக் குற்றங்கள் இழைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை விசாரிக்க வேண்டுமெனக் கூறி ஐரோப்பிய ஒன்றியம் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வர அந்தத் தீர்மானத்தை மாற்றி கூடுதலான நாடுகள் சேர்ந்து இலங்கையைப் பாராட்டி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தன. யுத்தம் முடிந்து ஒரு வருட காலத்திலே இடம்பெற்றது அதுதான்.  

ஆனால் யுத்தம் முடிந்து பத்து வருட காலம் வருகிற பொழுது நாட்டின் பிரதமரே இலங்கை நாட்டின் போர் வீரர்களும் யுத்தக் குற்றங்கள் புரிந்திருக்கிறார்கள் என்பதை கிளிநொச்சியில் வைத்து ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியிருக்கிறார். இது எப்படி சாத்தியமானது என்பதை நாங்கள் சற்று பின்னோக்கிப் பார்க்க வேண்டும்.  

2010ம் ஆண்டு முழு உலகமும் சேர்ந்து பயங்கரவாதத்தை திறமையாகக் கையாண்டீர்கள் அதனை முடிவிற்கு கொண்டு வந்தீர்கள் என்று இலங்கை அரசாங்கத்தை பாராட்டிய பிறகு நான்கு வருடங்களின் பின்னர் அதாவது 2014ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்றதாகச் சொல்லப்படுகின்ற சர்வதேசக் குற்றங்கள் சம்பந்தமாக ஒரு சர்வதேச விசாரணை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருடைய அலுவலகத்தாலே நடத்தப்பட வேண்டுமென ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  

இந்த நான்கு வருடத்துக்குள்ளே என்ன நடந்தது? 2011ஆம் ஆண்டு முழு வருடமும் ஐனவரி 10ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் இறுதி வரைக்கும் 18தடவைகள் நாங்கள் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தோடு இனப்பிரச்சினைக்கான தீர்வு சம்பந்தமாக, அரசியலமைப்பு விவகாரம் சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தியிருந்தோம்.  

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருகிற பொழுது உலக நாடுகள் அனைத்தினுடைய ஆதரவையும் இலங்கை அரசாங்கம் பெற்றிருந்தது என்பதை நாங்கள் மறக்கக் கூடாது. ஆனால் அந்த ஆதரவைக் கொடுத்த போது இலங்கை அரசாங்கம் குறிப்பாக அப்போதைய ஐனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உலகுக்கு ஒரு வாக்குறுதியைக் கொடுத்திருந்தார்.  

'யுத்தத்தை நிறைவு செய்ய எனக்கு உதவி செய்யுங்கள், அது முடிந்த கையோடு முழுமையாக தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு நான் தீர்வை கொடுப்பேன். 13ஆம் அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக அமுல்ப்படுத்துவேன். அது மட்டுமல்ல அதற்கு அப்பாலும் சென்று அதிகாரப்பகிர்வை அர்த்தமுள்ளதாக ஆக்குவேன்' என்று பலவிதமான வாக்குறுதிகளை பல தடவைகள் கொடுத்தார். இந்தியாவுக்கு மட்டும் மூன்று தடவைகள் எழுத்திலே வாக்குறுதி கொடுக்கப்பட்டது.  

ஆனால் யுத்தம் முடிவடைந்த பிறகு 2010ஆம் ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களிலே அவரையும் எங்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தச் சொல்லி ஊக்குவித்து பல மாதங்களுக்கு பிறகு 2011ஆம் ஆண்டு ஐனவரி மாதம் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தோம். ஒரு வருட கால இழுத்தடிப்புக்கு பிறகு 2012ஆம் ஆண்டு ஐனவரி மாதம் முன்று தினங்களிலே பேச்சுவார்த்தைக்கு திகதி குறிப்பிடப்பட்டிருக்கத்தக்க நிலையில் அவர் பேச்சுவார்த்தையில் இருந்து விலகினார்.  

சர்வதேசத்திற்கு கொடுத்த வாக்குறுதியை இந்தவிதமாக ஏமாற்றி அதை இல்லாமல் பண்ணுவதற்கு மஹிந்த ராஜபக்ஷ எடுத்த முயற்சி சர்வதேசத்திலே எடுக்கப்பட்ட மாற்றத்திற்கு பிரதான காரணி. அது மாத்திரம் அல்லாமல் யுத்தத்திலே நடைபெற்ற பல விடயங்கள் அங்கே மக்களினாலும் வேறு பலரினாலும் காணொளிகளாகப் பதிவு செய்யப்பட்டு அது வெளியே எடுத்துச் செல்லப்பட்டு புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள் அவற்றை வெளிக்கொண்டு வந்த போது சாட்சிகளே இல்லாமல் நடத்தப்பட்ட இறுதிக்கட்ட யுத்தத்தில் இத்தனை கொடுமைகள் என்பன எல்லாம் இழைக்கப்பட்டது என்பதற்கு ஆதாரபூர்வமாக பல தடயங்கள் முன்வைக்கப்பட்டன.  

அவற்றைக் கண்டும் காணாமலும் இருந்துவிட சர்வதேசத்திற்கு முடியவில்லை. ஒரு காணொளியை வெளிப்படுத்தும் நிகழ்வில் ஜெனிவாவிலே நான் உரையாற்றினேன். அந்த மண்டபத்திலே அதைப் பார்த்தவர்கள் அந்தக் காணொளி முடிந்த பிறகு சில நிமிடங்கள் ஒருவராலும் வாய்திறந்து பேச முடியவில்லை. அப்படியாக அதிர்ந்து போயிருந்தார்கள். இலங்கைப் பிரதிநிதி உள்ளே வந்தவர் அப்படியே நழுவி வெளியே போய் விட்டார்.   அப்படி சாட்சியங்களும் இலங்கை அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளிலே இருந்து மீறுவதையும் சேர்ந்து சர்வதேச அழுத்தத்தை ஏற்படுத்தியது. அதன் காரணமாகத்தான் 2011ஆம் ஆண்டு அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துக்கு எங்களை அழைத்தார்கள். மூன்று நாட்கள் பல்வேறு தரப்புக்களோடு நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம். அங்கே தான் தீர்மானம் எடுக்கப்பட்டது.  

எந்த மனித உரிமைப் பேரவையிலே இலங்கைக்கு பாராட்டுத் தெரிவித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோ அதே மனித உரிமைப் பேரவையிலே இலங்கைக்கு கண்டனம் தெரிவித்தும் இந்தக் குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டுமெனவும் கூறி ஒரு தீர்மானம் கொண்டுவர அமெரிக்கா முன்வந்தது. அதன் காரணமாகத்தான் 2012ஆம் ஆண்டு ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானம் 2013ஆம் ஆண்டு திரும்பவும் நிறைவேற்றப்பட்டது.  

ஆனால் இரண்டு தடவைகள் நிறைவேற்றியும் இலங்கை அரசாங்கம் விசாரணைகள் எதுவும் செய்யாத காரணத்தினாலேதான் 2014ஆம்ஆண்டு காலத்திலே சர்வதேச விசாரணைக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சர்வதேச விசாரணை நடாத்தப்பட்டது. முழுமையான சர்வதேச விசாரணை நடாத்தப்பட்டது. 2015ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 16ஆம் திகதி அந்த அறிக்கை வெளிவந்தது. அதற்கு முன்னதாக 2011அம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தினாலே நியமிக்கப்பட்ட நிபுணர்களுடைய அறிக்கை வெளிவந்திருந்தது.  

இந்த இரண்டு அறிக்கைகளிலேயும் சில விடயங்கள் தெட்டத் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளன. இன்றைக்கு சர்வதேச விசாரணைக்கு நாங்கள் வலியுறுத்துகின்ற போது அதனை நாங்கள் மட்டுமல்ல தமிழ்த் தரப்புக்கள் அனைவரும் சர்வதேச விசாரணை என்று நாங்கள் வலியுறுத்துகின்ற போது இந்த இரண்டு அறிக்கைகளையும்தான் நாங்கள் மேற்கோள் காட்டுகிறோம்.  

தமிழ் இளைஞர்களிடத்திலே பேசுகின்ற பலர் பாதி உண்மையைத்தான் சொல்லுவார்கள். அரைவாசியைத்தான் சொல்வார்கள். ஊடகங்கள் இன்னமும் மோசம். அவர்களும் அரைவாசியைத்தான் சொல்வார்கள். இன்றைக்கு நான் இங்கு சொல்வதில் அரைவாசியைத்தான் நாளை சொல்வார்கள். அதாவது 'விடுதலைப் புலிகளும் போர்க் குற்றம் இழைத்தார்கள் என்று சுமந்திரன் சொன்னார்' என்பதை மட்டும்தான் இந்த ஊடகங்கள் எல்லாம் நாளை போடுவார்கள்.  

ஆனால் முழு உண்மையையும் நாங்கள் அறிந்து கொண்டிருக்க வேண்டும்.யுத்தக் குற்றங்கள் இழைக்காமல் உலகத்தில் எந்தப் போரும் நடைபெறுவதில்லை. சுத்தமான போர் என்பது ஒருகாலமும் ஒரு பொழுதும் சரித்திரத்திலே எங்கேயும் நடைபெறவில்லை. அது மட்டுமல்ல ஒரு தரப்பால் மட்டும்தான் குற்றமிழைக்கிற போரும் எங்கேயும் நடைபெறுவதில்லை. போர் என்றாலே அது கொடூரமானது. உயிர்களைப் பறிப்பது. மனித நேயத்திற்கு எதிரானது.  

 அடுத்தமாதம் அல்லது இந்த மாத இறுதியிலே ஐக்கிய நாட்கள் மனித உரிமைகள் பேரவையினுடைய இன்றொரு கூட்டத் தொடர் வருகிறது.இது வருகிற பொழுது திரும்பவும் மக்களைக் குழப்புகிற பலவிதமான பிரசாரங்கள் நேரடியாகவும் ஊடகங்கள் வாயிலாகவும் முன்னெடுக்கப்படும்.  

தென்னாபிரிக்காவிலே நடந்த விடயத்தையும் பிரதமர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இது சம்பந்தமாக தெளிவான விளக்கம் எங்களுக்கு இருக்க வேண்டும். உண்மை கண்டறியப்படுதல் அத்தியாவசியம். அதிலே மாற்றுக் கருத்து கிடையாது. உண்மை சொல்லப்படாமல் உண்மை ஏற்றுக் கொள்ளப்படாமல் எங்கேயும் எந்த நல்லிணக்கமும் ஒருகாலமும் ஏற்படப் போவதில்லை.  

முதற்தடவையாக உண்மையைச் சொல்ல தயார் என்று ஒரு வாக்கு சொல்லியிருக்கிறார். அதாவது இரண்டு பக்கமும் குற்றம் இழைக்கப்பட்டுள்ளது என்று கூறியிருக்கின்றார். ஆனால் அது போதாது. குற்றம் இழைத்தவர்கள் சம்பந்தமாக குற்றம் இழைத்தவர்களே முன்வந்து நாங்கள் இந்த இந்த விடயங்களைச் செய்தோம் என்று ஒப்புக் கொள்ள வேண்டும். உண்மையை மக்களுக்கு பகிரங்கமாகச் சொல்ல வேண்டும்.   

நேற்றைய தினம் பிரதம மந்திரி சொன்ன ஒரு கூற்றிலே ஒரு தவறு இருக்கிறது.அதாவது தென்னாபிரிக்காவிலே வழக்குகள் பதியப்படவில்லை என்று சொல்லியிருந்தார். அது தவறு. அங்கு ஏராளமான வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன. பலருடைய மன்னிப்பு விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அது ஏன் என்றால் முழுமையான உண்மையை அவர்கள் சொல்லவில்லை. என்பதால்தான். உண்மையாக நாங்கள் மனந்திருந்தியிருக்கிறோம், அதனால் தான் உண்மையைச் சொல்கிறோம் என்தை அந்த ஆணைக்குழு நம்பவில்லை. நாங்கள் நல்லிணக்கத்திலே முன்னேறுவதாக இருந்தால் அடிப்படையிலே உண்மை பேசப்பட வேண்டும்.  

மகிந்த ராஜபக்ச வாய் தவறி படையினரும் குற்றம் இழைத்திருக்க கூடும் என்று ஒரு இடத்தில் சொல்வதோ அல்லது பத்து வருடங்களுக்கு பிறகு பிரதமர் கிளிநொச்சியில் வைத்து இரு தரப்பும் குற்றம் இழைத்தார்கள் ஆனபடியால் மறப்போம் மன்னிப்போம் என்று சொல்வதோ நல்லிணக்கத்திற்கு ஆதாரமாக இருக்க முடியாது. இதனை நாங்கள் தெளிவாக பிரதமருக்கு சொல்லி வைக்க விரும்புகிறோம்.  

உண்மை வெளிக்கொண்டு வரப்பட வேண்டும்.உண்மையைப் பேசுவோம் என்று பிரதமர் சொல்லியிருக்கின்றார். ஆனால் உண்மையை வெளிப்படையாக முழுமையாக பேச வேண்டும். நான் இதனை இவ்வளவு அழுத்தமாக இலங்கை பிரதமருக்கு இதனைச் சொல்லுகிற அதேவேளையிலே எங்களுடைய தரப்புக்களும், எங்களுக்கும் இதனை நாங்கள் சொல்லிக் கொள்ள வேண்டும்.  

நாங்கள் நீண்ட கால சிறைக் கைதிகளை விடுவிக்குமாறு பலவிதமான பேச்சுவார்த்தைகளை நடாத்திக் கொண்டிருக்கிறோம். அரைவாசிப் பேரை நாங்கள் விடுவித்தும் இருக்கிறோம். இதனைப் பலர் சொல்லாமல் இருக்கின்ற உண்மை. 217 பேர் இருந்த நிலையில் 107 பேர் விடுவிக்கப்பட்டு விட்டனர். அதிலே விடுவிக்கப்படாமல் இருக்கிறவர்களைக் குறித்து நாங்கள் பேசுகிறோம். 

பருத்தித்துறை விசேட நிருபர்


Add new comment

Or log in with...