அரசியல் குழப்பத்துடன் அமுங்கிய யாப்பு முயற்சி! | தினகரன்

அரசியல் குழப்பத்துடன் அமுங்கிய யாப்பு முயற்சி!

ஒக்டோபர் மாதத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்துடன் புதிய அரசியலமைப்பு தயாரிக்கும் பணிகள் முடங்கிப் போயுள்ளன. இடைநிறுத்தப்பட்ட செயற்பாடுகளுக்கு புத்துயிர் அளிக்கப்படும் என்றும், விரைவில் புதிய அரசியலமைப்பு தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படும் என்றும் டிசம்பரில் மீண்டும் ஆட்சியைப் பிடித்த ஐக்கிய தேசிய முன்னணி கூறியது.

இருந்தபோதும் புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்படுவதாகத் தெரியவில்லை. அரசியலமைப்பைப் பொறுத்த வரையில் தென்னிந்திய நகைச்சுவை நடிகரின் திரைப்பட நகைச்சுவை வசனம் போல “வரும் ஆனால் வராது” என்ற நிலைமையே காணப்படுகிறது.  

இதற்கிடையில் தேர்தலுக்கான ஏற்பாடுகளில் இறங்கியிருக்கும் அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் இந்த அரசியலமைப்பு விவகாரத்தைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பதையும் காண முடிகிறது. தென்னிலங்கையில் மஹிந்தவும் அவருடன் இருப்பவர்களும் புதிய அரசியலமைப்பு முயற்சியானது நாட்டைப் பிளவுபடுத்தும் அல்லது நாட்டைத் துண்டாடும் முயற்சியெனக் காண்பித்து வருகின்றனர். இனவாத அரசியலில் ஊறித் திளைத்துப் போயிருக்கும் அவர்கள் கனகச்சிதமாக தமது பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர். 

மறுபக்கத்தில், அரசியலமைப்பு தயாரிப்பு செயற்பாடுகளில் பங்கெடுத்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிக்கின்றோம் என்ற போர்வையில் தென்னிலங்கை இனவாத சக்திகளுக்கு தூபமிடும் வகையில் விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் செயற்பட்டு வருவதையும் காணக் கூடியதாகவுள்ளது.  

வடக்கில் புதிய கட்சியொன்றை ஆரம்பித்துள்ள முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் புதிய அரசியலமைப்பு என்பது ஒரு நாடகம். தீர்வுக்கான முயற்சியின் மூலம் அடிப்படைக் கோட்பாடுகளைக் கைவிடச் செய்து, தீர்வே எமக்கு வேண்டாம் எனச் சொல்ல வைக்கும் நிலைமையை உருவாக்குவதே இந்த நாடகத்தின் பிரதான நோக்கம் என விமர்சித்திருந்தார். 

"தமிழர்களின் அடிப்படைகளைப் புறக்கணித்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த புதிய அரசியல் யாப்புக்கு ஒப்புதல் கொடுத்துள்ளது. சமஷ்டி வேண்டாம், வடக்கு,கிழக்கு இணைப்பு வேண்டாம், பௌத்தத்திற்கு முதலிடம் கொடுக்கலாம், சுயாட்சி தேவையில்லை என்று நாம் கூறுவதாக இருந்தால் வேறெந்த தீர்வை நோக்கிப் பயணப்படுகின்றனர்?" என்றும் அவர் கேள்வியெழுப்பியிருந்தார். 

யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் கிளிநொச்சி, யாழ் மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே விக்னேஸ்வரன் இந்தக் கருத்துக்களையும், குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்தார். 

புதிய அரசியலமைப்பு என்ற நாடத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முக்கிய பாத்திரம் ஏற்றுள்ளது. அவர்களுக்கு விரைவில் ஏதாவது கிடைக்க வேண்டும், தமது அரசியலைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கூட்டமைப்பினர் நாடகத்தில் நடித்து வருகின்றனர்.

மக்களைப் பற்றி அவர்களுக்கு எந்தக் கவலையும் கிடையாது. அரசாங்கங்களைப் புறக்கணித்து வெளியில் இருந்து தீர்வினைக் கொண்டு வரலாம் என உபதேசம் செய்யவில்லை. ஒரு நியாயமான தீர்வினை பெற்றுக் கொள்வதற்கு வெளிநாட்டு அழுத்தங்கள் அதாவது இந்தியா, ஐ. நா மற்றும் சர்வதேச அமைப்புக்களில் இருந்து அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும். ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை முழுமையாக நடைமுறைப்படுத்தாத அரசாங்கத்தைக் காப்பாற்றும் வகையில் கூட்டமைப்பு தொடர்ந்தும் செயற்படுகிறது. அரசாங்கம் எதையோ தமக்குத் தரும் என்ற நம்பாசை அவர்களைக் கவ்வியுள்ளது. 

இதனால் ஏற்படக் கூடிய ஆபத்துக்களைத் தடுக்க மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.

எதிர்வரும் தேர்தல்களின் மூலம் இந்த ஆபத்துக்களை முறியடிக்க தமிழ் மக்கள் தயாராக வேண்டும். கட்சி நலன்களைப் புறந்தள்ளி விட்டு அனைவரும் ஒன்றிணைந்து மக்களைத் தயார்படுத்த வேண்டும். 

ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வருவதற்கு தலைகீழாக நின்று பாடுபட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு அக்கட்யின் ஊடாக எமது பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்று விட முடியும் என்று நம்புகின்றதா? அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கோ, காணாமல் போனோர் சம்பந்தமாக விசாரணைகள் நடத்த வலியுறுத்தவோ, பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவதை தடுத்து நிறுத்துவதற்கோ இன்றைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திடம் வலியுறுத்தினால் மஹிந்த ராஜபக்சவுக்கு ஐக்கிய தேசிய கட்சியை விமர்சனம் செய்ய வாய்ப்பாக அது அமைந்து விடும் என்ற காரணத்துக்காகவே மௌனிகளாக இருக்க வேண்டிய நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இருக்கின்றது.

இதுவா பாராளுமன்றத்தின் ஜனநாயகத்தைப் பாதுகாத்து தமிழ் மக்களுக்கு நாம் பெற்றுக் கொடுத்துள்ள நன்மை? இதற்காகவா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது என்றும் அவர் கேள்வியெழுப்பியிருந்தார்.  

புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டால் தமிழ் மக்களுக்கு ஏற்படப் போகும் பல ஆபத்துக்கள் பற்றி மூடி மறைக்கப்பட்டுள்ளன.

பௌத்தத்துக்கு முன்னுரிமை அளிப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டு சமஷ்டி முறைமை மறுக்கப்பட்டுள்ளது. என்றென்றைக்கும் இலங்கை ஒரு ஒற்றையாட்சி நாடாகஇருக்கும் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

வடக்கு,- கிழக்கு இணைப்புக்கு நாம் போராடிவரும் நிலையில் தமிழர் தாயகம் துண்டாடப்படுவதற்கு வழி வகுக்கப்பட்டுள்ளது என்பது அவருடைய பகிரங்க குற்றச்சாட்டாக அமைந்தது. 

இவ்வாறான கருத்துக்கள் தென்பகுதியில் உள்ள இனவாத சக்திகளுக்கு செல்லும் பட்சத்தில் நிச்சயமாக முட்டுக்கட்டைகளே ஏற்படும்.

தமிழ் மக்களுக்கு தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென்பதில் அவர்கள் உண்மையில் அக்கறையுடன் உள்ளனரா என்ற கேள்வி இங்கு எழுகிறது.  எப்பொழுதும் எதிர்ப்பு அரசியல் செய்து பழகிவிட்ட தமிழ்த் தரப்புக்கள் தொடர்ந்தும் இதனையே செய்யப்போகின்றனர் என்பதைத் தீர்மானிக்க வேண்டிய காலம் ஏற்பட்டுள்ளது.

சாரங்கன் 
 

Add new comment

Or log in with...