Wednesday, April 24, 2024
Home » நம்பிக்கை எதிர்பார்ப்புகளுடன் பிறந்திருக்கும் புத்தாண்டு

நம்பிக்கை எதிர்பார்ப்புகளுடன் பிறந்திருக்கும் புத்தாண்டு

by damith
January 1, 2024 6:00 am 0 comment

இலங்கையர் உட்பட முழு உலக மக்களும் மற்றொரு புதிய ஆண்டில் தற்போது பிரவேசித்துள்ளனர். கடந்த வருடங்களைப் போன்றல்லாது இப்புத்தாண்டு மிகவும் விமரிசையாகவும், கோலாகலமாகவும் வரவேற்கப்பட்டுள்ளது.

2019 ஆண்டின் இறுதிப் பகுதியில் தோற்றம் பெற்ற கொவிட் 19 தொற்று உலகிற்கு பெரும் சவாலானதோடு, கடந்த இரண்டு வருடங்களாகப் புத்தாண்டு வரவேற்பும் சோபை இழந்தே காணப்பட்டது.

அதிலும் இலங்கை மக்கள் எதிர்கொண்ட பாதிப்புகள் சற்று அதிகமென்றே கூற வேண்டும். இந்நாடு கொவிட் 19 தொற்றிலிருந்து மீண்டெழுந்த போதிலும், சிறிது காலப்பகுதியில் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டது. இப்பொருளாதார நெருக்கடியின் பின்புலத்தில் அரசியலும் கொதிநிலையை அடைந்ததோடு, ஆட்சித் தலைமையையே அது மாற்றியமைத்தது.

அன்றைய அரசியல் இந்நெருக்கடிக்குத் தீர்வு காணவும், பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாட்டை மீட்டெடுக்கவும் எவரும் முன்வராத சூழலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2022 நடுப்பகுதியில் நாட்டைப் பொறுப்பேற்றார்.

நாட்டின் தலைமையை ஏற்றதோடு பொருளாதார ரீதியில் நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டங்களையும் அவர் ஆரம்பித்தார். அதன் பயனாக பொருளாதார நெருக்கடியின் அழுத்தங்களும் பாதிப்புக்களும் கட்டம் கட்டமாக நீங்கியதோடு, வங்குரோத்து நிலையில் இருந்து நாடு மீட்சி பெறலானது. ஆளுமையான தலைமையை வழங்கி வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறார் ஜனாதிபதி.

இதன் விளைவாகப் பொருளாதார வீழ்ச்சிக்கு உள்ளாகி வங்குரோத்து நிலையை அடைந்திருந்த நாடு, குறுகிய காலப்பகுதியில் தலைநிமிர்ந்து நிற்கும் நிலையை அடைந்திருக்கிறது. அதனால் கடந்த சில வருடங்களாக சோபை இழந்து போயிருந்த புத்தாண்டுக் கொண்டாட்டம் இம்முறை கோலாகலம் நிறைந்ததாக அமைந்துள்ளது. அத்தோடு புதிய நம்பிக்கைகளுடன் புதிய ஆண்டில் பிரவேசிக்கவும் மக்களால் முடிந்துள்ளது.

வங்குரோத்து நிலையை அடைந்த நாட்டை குறுகிய காலப்பகுதிக்குள் மீளக்கட்டியெழுப்புவதற்கு சர்வதேச உதவிகள் பெரிதும் உதவியுள்ளன. என்றாலும் சர்வதேச உதவிகளைப் பயன்படுத்திக் கொள்கின்ற அதேவேளை, சுயமாக முன்னேற்றப்பாதையில் பயணிக்கவும் தவறக் கூடாது.

இந்தச் சூழலில் வரிகளை அதிகரிக்கக்கூடிய நிலை ஏற்படுவது தவிர்க்க முடியாததாகின்றது. பொருளாதார நெருக்கடியின் விளைவாக நம்பிக்கை அற்றிருந்த நாட்டில் நம்பிக்கையுடன் முன்னோக்கிப் பயணிக்கக்கூடிய நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் பொருளாதார நெருக்கடியின் தாக்கங்களில் இருந்து முழுமையாக மீட்சி பெறும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அவை மக்கள் மீது சுமையை ஏற்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் அல்ல. நாட்டினதும் மக்களினதும் நலன்களை முன்னிலைப்படுத்தியுள்ள திட்டங்களாகும். அதனால் இத்திட்டங்களின் நிமித்தம் மக்கள் பொறுமை காப்பது அவசியம். அது வளமானதும் சுபீட்சமானதுமான பொருளாதார வாழ்வைப் பெற்றுத்தர வழிவகுக்கக் கூடியதாகும்.

அந்த வகையில் இப்புத்தாண்டின் நிமித்தம் ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், ‘பல சவால்களுக்கும் எதிர்பார்ப்புக்களுக்கும் மத்தியிலேயே நாம் 2024 புதுவருடத்தை ஆரம்பிக்கிறோம். ஆயிரக்கணக்கிலான எண்ணங்களைப் பூர்த்தி செய்துகொள்ள, நம் நாடு தற்போது எதிர்கொண்டிருக்கும் நெருக்கடிகளில் இருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டும். பொருளாதார ஸ்திரத்தன்மைக்காக, அதே பாதையில் தொடர்ந்து பயணிக்க வேண்டியது அவசியம். அது மலர்ப்பாதையாக இல்லாமல், முட்களும், கற்களும் நிறைந்த பாதையாகவே அமைந்திருக்கிறது. அதனால், இலங்கையை மீளக்கட்டியெழுப்பும் போது எதிர்கொள்ளும் சவால்களைப் புரிந்துகொள்ள வேண்டியது இலங்கையராகிய எமது​ பொறுப்பாகும்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதுதான் உண்மை. இந்நாடு எவ்வாறான நிலையில் இருந்து தற்போதைய நிலையை அடைந்திருக்கிறது என்பதை இச்செய்தி எடுத்தியம்புகிறது. அதேநேரம் இந்நாடு அடைய எதிர்பார்க்கும் பாதையும் சவால்கள் நிறைந்தது. அதற்காக அர்ப்பணிப்புக்களுடன் செயற்பட வேண்டிய தேவையும் உள்ளது.

பொருளாதார மறுமலர்ச்சியின் நிமித்தம் நாடு நம்பிக்கையுடன் பயணிக்கத் தொடங்கிவிட்டது என்பது தெளிவானது. கடந்த வருடம் மாத்திரம் 15 இலட்சம் உல்லாசப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். அதிலும் டிசம்பர் மாத்திரம் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட உல்லாசப் பயணிகள் வருகை தந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஆகவே பொருளாதார முன்னேற்றத்திற்காக முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு மத்தியில் புதியதொரு ஆண்டில் பிரவேசித்து இருக்கும் இலங்கையராகிய நாம், இத்திட்டங்களுக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் நல்க வேண்டும். அது நாட்டின் அனைத்து பிரஜைகளதும் பொறுப்பாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT