Friday, April 19, 2024
Home » இலங்கையர்களுக்கு 2023 இல் அதிகளவு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை வழங்கிய நாடு சவூதி அரேபியா

இலங்கையர்களுக்கு 2023 இல் அதிகளவு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை வழங்கிய நாடு சவூதி அரேபியா

by damith
January 1, 2024 11:34 am 0 comment

கடந்த சில வருடங்களாக சுமார் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் வருடாந்தம் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைத் தேடிப் பயணிக்கும் நிலையில் 2023 இல் இலங்கையர்களுக்கு அதிக வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை வழங்கிய நாடாக சவூதி அரேபியா பதிவாகியுள்ளது.

குறிப்பாக இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்து அந்நிய செலாவணியின் கையிருப்பினை அதிகரித்துக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கும் இத்தருணத்தில், இவ்வாறான அதிக வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் இலங்கைப் பொருளாதாரத்தில் கணிசமான பங்களிப்பினைச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை.

இது தொடர்பாக சவூதிக்கான இலங்கைத் தூதுவர் பி.எம் அம்சா கடந்த சனிக்கிழமையன்று சவூதி ‘அரப்நியூஸ்’ நாளேடுக்கு அளித்த பேட்டியில், 2023 இல் மாத்திரம் சுமார் 7 பில்லியன் ​ெடாலர்களை இலங்கை அந்நிய செலாவணியாகப் பெற்றுள்ளது எனவும் வருடாந்தம் ஏழு தொடக்கம் எட்டு பில்லியன் டொலர் வரை கிடைக்கப்பெறும் அந்நிய செலாவணியில் சுமார் 15% தொடக்கம் 20% வீதத்தினை சவூதி அரேபியாவில் புலம்பெயர்ந்து வேலைவாய்ப்புகளில் ஈடுபடும் இலங்கையர்களின் மூலம் பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கையர்களுக்கு மிகப்பொருத்தமான வெளிநாட்டு வேலைவாய்ப்புச் சந்தையாக மத்தியகிழக்கு நாடுகள் திகழும் இவ்வேளையில் சவூதி அரேபியாவின் ‘2030 தூரநோக்கு’ திட்டத்திற்கமைய மேற்கொள்ளப்படும் பாரிய செயல்ற்திட்டங்களில் வெற்றிடமாகியுள்ள வேலைவாய்ப்புகளின் மூலம் சவூதி அரேபியா இலங்கையர்களின் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கான முக்கிய தலமாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இவ்வருட ஆரம்பத்தில் மார்ச் மாதத்தில் இலங்கை கல்வியமைச்சின் கீழ் இயங்கும் மூன்றாம் நிலைக்கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவுக்கும் சவூதி அரேபிய மனிதவள மற்றும் சமூக மேம்பட்டு அமைச்சின் கீழ் இயங்கும் தகாமுல் ஆணையத்திற்கும் இடையில் கொழும்பில் வைத்து கைச்சாத்திடப்பட்ட ‘திறன் உறுதிப்படுத்தல் செயற்திட்டம்’ (Skill Verification Program- SVP) சம்பந்தமான புரிந்துணர்வு உடன்படிக்கையின் மூலம் சவூதி அரேபிய வேலைவாய்ப்புச் சந்தையில் இலங்கையர்களுக்கான சந்தர்ப்பங்கள் அதிகரித்தன.

குறிப்பாக இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானியின் அயராத முயற்சியின் ஒரு அங்கமாக கைச்சாத்தாகிய மேற்படி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சுமார் 23 விதமான பிரதான திறன்சார் வேலைவாய்ப்புகள் இலங்கையர்களுக்காக அடையாளமிடப்பட்டன. அவற்றில் சென்ற வருடங்களுக்கு மாற்றமாக இவ்வருடம் பொறியியல், கட்டுமானத்துறைசார் வேலைவாய்ப்புகள், அதேபோன்று சுற்றுலாத்துறைசார் வேலைவாய்ப்புகள் இலங்கையர்களின் அதிக கவனத்தினை ஈர்த்துள்ளதாக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

மேற்கூறப்பட்ட ‘திறன் உறுதிப்படுத்தல் செயற்திட்டம்’ சம்பந்தமான உடன்படிக்கையின் வாயிலாக இலங்கையர்களுக்கு சுமார் 12,000 வேலைவாய்ப்புகள் சென்ற வருடங்களைவிட அதிகமாகக் கிடைத்துள்ளன எனவும் அரப்நியூஸ் நாளேடு குறிப்பிட்டுள்ளது.

புள்ளிவிபரங்கள் மற்றும் அறிக்கைகளின்படி 2023 இல் சவூதி அரேபியாவில் இலங்கையர்களுக்கான வேலைவாய்ப்புகள் எண்ணிக்கையிலும், தரத்திலும் மேம்பாட்டினைச் சுட்டிக்காட்டும் இத்தருணத்தில் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இந்நல்ல நிலையினை எதிர்வரும் வருடங்களிலும் குறிப்பாக 2030 வரை தக்கவைத்துக் கொள்வது அவைவரினதும் கடமையாகும். குறிப்பாக புலம்பெயர்ந்து வாழும் இலங்கை தொழில் சமூகம் மற்றும் அவர்களுக்கான ஏற்பாடுகளைச் செய்யும் பொறுப்புவாய்ந்த ஆணையங்கள் இச்சிறந்த முன்னேற்றத்தினைத் தக்கவைத்துக் கொள்ள வழிசெய்யும். அதன்மூலம் இருநாட்டு உறவுகளும் மேம்படவும் இலங்கையின் பொருளாதாரம் சீரடையவும் வழியேற்படும்.

கலாநிதி அம்ஜத் ராசிக் (சவூதி அரேபிய ஆய்வுகளுக்கான ஆர்வலர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT