Saturday, April 20, 2024
Home » மானுடவியல்

மானுடவியல்

by damith
January 1, 2024 9:54 am 0 comment

அடியாரின் அழுக்கேறிய கச்சையைக் கண்டதும் திருக்குறிப்புத் தொண்டர் “ஐயா, தங்களுடைய கச்சை மிகவும் அழுக்காக உள்ளது. நான் இதனை உங்களுக்கு நன்கு சலவை செய்து தூய்மையாக்கி தருகிறேன். ஆதலால் அதனைத் தருகிறீர்களா?” என்று பணிவுடன் வினவினார்.

சிலநாட்களாக மழை ஓய்ந்து இருந்தபடியால் எப்படியும் பொழுது சாய்வதற்குள் சலவை செய்து உலர்த்தி அடியாரிடம் தந்து விடலாம் என்ற நம்பிக்கை திருக்குறிப்புத் தொண்டருக்கு இருந்தது.

திருக்குறிப்புத் தொண்டர் கூறியதைக் கேட்டதும் சிவனடியார் “அழுக்காக இருந்தாலும் இதுதான் எனக்கு கவசம். இந்த குளிர்காலத்தில் என்னுடைய உடலைப் போர்த்திக் கொள்ள இது பயன்படும். இதனைக் கொடுத்துவிட்டால் நான் இரவில் குளிரில் நடுங்க நேரிடும்.” என்றார்.

“ஐயா, நான் இரவு வருவதற்குள் இதனை சலவை செய்து உலர்த்தி உங்களுக்கு போர்த்திக் கொள்ள தயாராக தருகிறேன்.” என்று அடியவருக்கு தம்மால் ஆன தொண்டைச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் திருக்குறிப்புத் தொண்டர் கெஞ்சினார்.

“இரவு வருவதற்கு முன் இதனை சலவை செய்து உலர்த்தி தருகிறேன் என்று உறுதியளிப்பாதால் இதனைத் தருகிறேன். கண்டிப்பாக உலர்த்தித் தந்துவிட வேண்டும்.” என்றபடி திருக்குறிப்புத் தொண்டரிடம் அழுக்குக் கச்சையைக் கொடுத்தார்.

அதனை பெற்றுக் கொண்ட திருக்குறிப்புத் தொண்டர் நேரே சலவை செய்யும் இடத்திற்குச் சென்றார். வெள்ளாவியில் அழுக்குக் கச்சையை வேக வைத்தார். பின்னர் அதனைப் பிரித்து கச்சையை சலவை செய்ய ஆரம்பித்தார்.

அப்போது எதிர்பாராத வண்ணம் மேகங்கள் திரண்டு கருத்தன. முற்பகல் வேளையும் பிற்பகல் போல் இருந்தது. மழை கொட்டத் தொடங்கியது.

அதனைக் கண்டதும் திருக்குறிப்புத் தொண்டர் ‘இன்னும் சற்று நேரத்தில் மழை நின்று வானம் வெளுக்கும். அதுவரைப் பொறுத்திருப்போம்.’ என்று தம்மைத் தாமே தேற்றினார்.

ஆனால் மழை நிற்கவில்லை. அடைமழை பெய்ய ஆரம்பித்து விட்டது.பொழுது போய்க் கொண்டே இருந்தது. நேரம் செல்ல செல்ல திருக்குறிப்புத் தொண்டரின் உள்ளத்தில் புயல் புகுந்தது.

‘ஐயோ, இதனை முன்பே வெளுத்துக் கொண்டு போய் வீட்டில் காற்றாட உலர்த்தியிருக்கலாமே. நான்தான் சரியாகிவிடும் என்று நேரத்தைக் கடத்தி விட்டேன். (தொடரும்)

கலாநிதி சிவ கு.வை.க. வைத்தீஸ்வர குருக்கள் தலைவர், இந்துக் குருமார் அமைப்பு.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT