Wednesday, April 24, 2024
Home » காசாவின் எகிப்து எல்லையை கைப்பற்ற இஸ்ரேல் திட்டம்: போர் பல மாதங்களுக்கு நீடிக்கும் வாய்ப்பு

காசாவின் எகிப்து எல்லையை கைப்பற்ற இஸ்ரேல் திட்டம்: போர் பல மாதங்களுக்கு நீடிக்கும் வாய்ப்பு

ரபாவில் அடைக்கலம் பெறும் மக்களுக்கு இடமில்லை

by damith
January 1, 2024 6:00 am 0 comment

காசாவில் தொடர்ந்து உக்கிர மோதல் நீடிக்கும் நிலையில் எகிப்துடனான காசா எல்லையை மீட்பதாக குறிப்பிட்டிருக்கும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இந்தப் போர் பல மாதங்கள் நீடிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் போர் உச்சத்தை தொட்டிருப்பதாக கடந்த சனிக்கிழமை (30) செய்தியாளர்களிடம் கூறிய நெதன்யாகு, எகிப்துடனான காசாவின் எல்லையை ஒட்டிச் செல்லும் இடை வலயப் பகுதி இஸ்ரேலின் கைகளில் இருக்க வேண்டும் என்றார்.

‘அந்தப் பகுதி மூடப்பட வேண்டும். நாம் எதிர்பார்க்கும் இராணுவமயமற்ற நிலையை எட்டுவதற்கு அதைத் தவிர வேறு வழி இல்லை’ என்று நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் விரிவாக எதுவும் குறிப்பிடாதபோதும், இது 2005 ஆம் ஆண்டு காசாவில் இருந்து இஸ்ரேல் வாபஸ் பெற்றதை மாற்றும் ஒரு செயலாக அமைவதோடு அது காசா பகுதியை முழுமையாக கட்டுப்படுத்தும் முயற்சியாக இருக்கும்.

காசாவில் இஸ்ரேலிய தரைப்படை தனது தாக்குதல்களை புதிய இடங்களுக்கு விரிவுபடுத்தி வரும் நிலையில் இந்தப் போர் பல மாதங்கள் நீடிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தெற்கு காசாவின் கான் யூனிஸில் உள்ள இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருக்கும் பாடசாலை ஒன்றை இலக்கு வைத்து இஸ்ரேல் நேற்று (31) நடத்திய பீரங்கி தாக்குதல்களில் குறைந்தது 10 பேர் காயமடைந்தனர்.

இஸ்ரேலிய இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை கான் யூனிஸ் மற்றும் ரபா பகுதிகளின் பல இடங்களை இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் அது தெற்கு காசாவில் அண்மைய நாட்களில் தனது படை நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மத்திய மற்றும் தெற்கு காசாவின் அல் புரைஜ், நுஸைரத், மகாசி மற்றும் கான் யூனிஸ் பகுதிகளை இலக்கு வைத்து கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியதாக அங்கிருக்கும் குடியிருப்பாளர்கள் மற்றும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

இதில் மத்திய காசாவில் உள்ள அகதி முகாம்களில் இஸ்ரேல் சனிக்கிழமை இரவு முழுவதும் நடத்திய வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களில் 25 பேர் கொல்லப்பட்டிருப்பதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது.

மேலும் தெற்காக எகிப்தை ஒட்டிய எல்லை நகரான ரபாவில் பெரும் எண்ணிக்கையான மக்கள் இஸ்ரேலின் தாக்குதலில் இருந்து பாதுகாப்புப் பெற அடைக்கலம் பெற்றபோதும் அங்கும் பலஸ்தீன போராளிகளுடன் மோதல் நீடித்து வருகிறது.

‘இந்தப் போர் போதும்! நாம் முற்றிலும் களைப்படைந்துவிட்டோம்’ என்று கான் யூனிஸில் உள்ள தனது விட்டில் இருந்து தப்பி வந்து ரபாவில் அடைக்கலம் பெற்றிருக்கும் 49 வயது அபூ கத்தர் தெரிவித்தார்.

‘இந்த குளிரான காலநிலைக்கு இடையே நாம் ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு தொடர்ச்சியாக இடம்பெயர்ந்து வருகிறோம். குண்டுகள் இரவு, பகல் பாராது எம்மீது விழுகின்றன’ என்றும் அவர் ஏ.எப்.பி. செய்தி நிறுவத்திடம் கூறினார்.

இஸ்ரேலின் வான் தாக்குதல் ஒன்றில் ஹமாஸ் ஆயுதப் பிரிவின் மூத்த உறுப்பினர் ஒருவரான அப்தல் பத்தா மாலி கொல்லப்பட்டதை அந்த அமைப்பு உறுதி செய்துள்ளது. மேற்குக் கரையைச் சேர்ந்த அவர் 2011 கைதிகள் பரிமாற்றத்தின்போது காசாவுக்கு வெளியேற்றப்பட்டிருந்தார். மறுபுறம் காசாவில் கொல்லப்பட்ட இஸ்ரேலிய துருப்புகளின் எண்ணிக்கை 172 ஆக உயர்ந்துள்ளது. இதில் காயமடைந்த 431 இஸ்ரேலிய இராணுவத்தினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் 44 பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலை அடுத்து ஆரம்பமான இந்தப் போரில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 21,672 ஆக அதிகரித்துள்ளது. இதில் மேலும் 56,165 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ரபாவில் குவியும் மக்கள்

காசாவின் குறுகிய நிலப்பகுதியின் 2.3 மில்லியன் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட அனைவரும் போல் தமது விடுகளை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கும் நிலையில் இடம்பெயர்ந்த பெரும்பாலான மக்கள் பூங்காக்களின் திறந்த பகுதிகளில் தங்கி இருப்பதாக பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிவாரண அமைப்பின் ஜூலியட் டூமா தெரிவித்துள்ளார். எகிப்துடனான எல்லைப் பகுதியாக உள்ள ரபாவுக்கு கடந்த சில நாட்களில் குறைந்தது 100,000 பேர் தப்பி வந்திருப்பதாக ஐ.நாவின் மனிதாபிமான அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. எனினும் ஐ.நாவால் மட்டுப்படுத்தப்பட்ட உதவிகளையே இவர்களுக்கு வழங்க முடியுமாக உள்ளது என்று டூபா குறிப்பிட்டுள்ளார். எனினும் காசாவின் மனிதாபிமான தேவைகள் பாரிய அளவில் அதிகரித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

உதவிகள் செல்வதை கட்டுப்படுத்தவில்லை என்று இஸ்ரேல் கூறியபோதும் அதன் உக்கிர தாக்குதல்கள் உதவி விநியோகத்திற்கு இடையூறை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ரபாவில் இருந்து பி.பி.சி. செய்தி நிறுவனத்திற்கு பேசிய ஐ.நா நிவாரண அமைப்பின் காசா பணிப்பாளர் டொம் வைட், இந்த நகரில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அடைக்கலம் பெற்றிருப்பதாக தெரிவத்தார். பாடசாலைகள் மற்றும் மாநகர சபை வசதிகள் என்று ரபாவில் உள்ள அனைத்து இடங்களிலும் அளவுக்கு அதிகமான மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் நிலையில் அங்கு மேலும் மக்கள் அடைக்கலம் பெறுவதற்கான இடம் தீர்ந்துவிட்டதாக டொம் வைட் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆயிரக்கணக்கான மக்கள் தற்போது திறந்த வெளியில் உறங்கி வருவதாக டூமா வழங்கிய கூற்றை பிரதிபலிப்பதாக இது உள்ளது. தெற்கு மற்றும் மத்திய காசாவில் உக்கிரமடைந்திருக்கும் தாக்குதல்கள் காரணமாகவே ரபா பகுதியை நோக்கி மக்கள் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் காசாவில் இடம்பெயர்ந்துள்ள மக்களிடையே தொற்று நோய்கள் பரவும் அச்சுறுத்தல் பற்றி உலக சுகாதார அமைப்பு மீண்டும் ஒருமுறை எச்சரித்துள்ளது.

காசாவில் கடந்த ஒக்டோபர் நடுப்பகுதியில் இருந்து டிசம்பர் நடுப்பகுதி வரையான காலத்தில் நோய் பரவல் அதிகரித்திருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டொக்டர் டெட்ரொஸ் அதனொம் கெப்ரியேசுஸ் குறிப்பிட்டுள்ளார். காசா பகுதியில் உள்ள முகாம்களில் சுமார் 136,400 வயிற்றுப்போக்கு, 55,400 சொறி மற்றும் சிராங்கு மற்றும் 126 மூளைக்காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிராந்திய பதற்றம்

இந்தப் போர் பிராந்தியத்தில் பரவும் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக லெபனான், ஈராக், சிரியா மற்றும் யெமனில் உள்ள ஈரான் ஆதரவு போராட்டக் குழுக்கள் இஸ்ரேல் மற்றும் அதன் கூட்டாளியான அமெரிக்காவை இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

சிரியாவில் இஸ்ரேல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் வான் தாக்குதல்களில் 23 பேர் கொல்லப்பட்டாக மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. சிரியாவின் அல் பொகாமால் பகுதி மீது நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்தத் தாக்குதல்களில் ஈரான் ஆதரவு ஆயுதக் குழுவைச் சேர்ந்தவர்களே கொல்லப்பட்டிருப்பதாக பிரிட்டனைத் தளமாகக் கொண்ட அந்த மனித உரிமை அமைப்பு கூறியுள்ளது.

முன்னதாக சிரியாவின் அலெப்போ நகரை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT