ஓம் என்ற மந்திரமே இறைவன்...! | தினகரன்

ஓம் என்ற மந்திரமே இறைவன்...!

ஓம் என்ற இந்த மந்திரமே இறைவன். . இந்த மந்திரம் மேலானது.இந்த மந்திரத்தை அறிந்து யார் எதை விரும்புகிறானோ அவனுக்கு அது கிடைக்கிறது. உடம்பு, உயிர், ஆன்மா என்ற மூன்றின் சேர்க்கையே மனிதன்.நாம் பொதுவாக மரணம் என்று குறிப்பிடுவது உடம்பின் மரணத்தை மட்டுமே.

பழைய சட்டையைக் களைந்துவிட்டு புதிய சட்டை அணிந்து கொள்வதுபோல் ஜீவன் ஓர் உடம்பைக் களைந்துவிட்டு புதிய உடம்பை எடுக்கிறது. உடம்பைக் களைதலையே மரணம் என்கிறோம். ஆனால் நாம் ஆன்மா, நமக்கு மரணமில்லை. உடம்பின் மரணத்திற்குப் பிறகும் நாம் வாழ்கிறோம்.

என்றென்றும் நாம் வாழ்கிறோம். ஆன்மா பிறப்பதில்லை, இறப்பதும் இல்லை, இது எதிலிருந்தும் உண்டானதில்லை, எதுவும் இதிலிருந்தும் உண்டாவதில்லை. இது பிறப்பற்றது, என்றென்றும் இருப்பது. நிலையானது, பழமையானது; உடம்பு அழிக்கப்பட்டாலும் அழியாதது.தான் அடிப்பதாக நினைப்பவன், தான் அடிபட்டதாக நினைப்பவன் இருவருமே உண்மையை அறியாதவர்கள். ஆன்மா அடிப்பதும் இல்லை, அடிபடுவதும் இல்லை.

ஆன்மாவின் இயல்பு அறிவு, உணர்ச்சி இரண்டும் வெவ்வேறானவை, நமது வாழ்க்கை, இரண்டுடனும் பின்னிப் பிணைந்ததாக உள்ளது. அன்பு, ஆசை, கோபம், பயம், வெறுப்பு என்று பொதுவாக நமது வாழ்க்கையில் உணர்ச்சிகளே ஆதிக்கம் செலுத்துகின்றன.

அறிவின் செயல்பாடு மிகக் குறைவே. அதிலும் ஆன்மீகம், கடவுள், ஆன்மா போன்ற உண்மைகளை அறிவினால் ஆராய்ந்து புரிந்துகொள்ள முடியாது, உணர மட்டுமே இயலும்.ஆன்மா, கடவுள் போன்றவைபற்றி படிக்கும்போது இந்தக் கண்ணோட்டம் நமக்கு மிக முக்கியமானது.  அறிவுக்கு எட்டாதது என்பதை உணர்த்துவதற்கே நமது ரிஷிகள் முரண்பட்ட இயல்புகளால் அவற்றை விளக்க முயல்கின்றனர்.

தொடரும் மந்திரங்களை, சாதனைகள் செய்து உணர முடியுமே தவிர அறிவினால் விளக்கவோ அறியவோ முடியாது. அதற்கான ஒவ்வொரு முயற்சியும் நம்மை மேலும் குழப்பத்திலேயே ஆழ்த்தும்.அணுவைவிட அணுவானதும், பெரியதைவிடப் பெரியதுமான இந்த ஆன்மா உயிரினங்களின் இதயக் குகையில் இருக்கிறது. ஆசையற்றவன் அதனைக் காண்கிறான்.

மனத்தெளிவினால் ஆன்மாவின் மகிமையை உணர்கின்ற அவன் கவலைகளைக் கடந்து செல்கிறான்.

அணுவைவிட அணுவானதும், பெரியதைவிடப் பெரியதுமான இந்த ஆன்மா உயிரினங்களின் இதயக் குகையில் இருக்கிறது. ஆசையற்றவன் அதனைக் காண்கிறான்.மனத்தெளிவினால் ஆன்மாவின் மகிமையை உணர்கின்ற அவன் கவலைகளைக் கடந்து செல்கிறான். மரண நிலையைப் போன்றதொரு நிலையிலேயே ஆன்மாவை உணர முடியும்.இதன் பொருள் மரணத்தில் புலன்கள், மனம் எல்லாம் செயலிழக்கின்றன.

அதுபோல் புலன்களும் மனமும் செயலிழந்த, அதாவது புலன்களையும் மனத்தையும் கடந்த ஒரு நிலையில்தான் ஆன்மாவை உணர முடியுமே தவிர புலன்களாலோ மனத்தாலோ அதனை அறிய முடியாது என்பதை இங்கே குறிப்பால் உணர்த்துகிறான் எமதர்மன்.ஆன்மா உடல்களில் உடலற்றது; நிலையற்ற பொருட்களில் நிலையானது; பெரியது; எங்கும் நிறைந்தது.

புத்தி விழிப்புற்றவன் அதனை அறிந்து கவலைகள் நீங்கப் பெறுகிறான்.

ஆன்மா எல்லா உடல்களிலும் உறைகிறது. ஆனால் அதற்கென்று ஒரு தனியான உடலோ உருவமோ இல்லை. உடல்கள் உட்பட இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே நிலையற்றது, மாறுவது, தோன்றி மறைவது.

ஆனால் இந்த மாற்றங்கள் எதுவுமே இல்லாமல் நிலைத்திருப்பது ஆன்மா. நாளை உணவு கிடைக்காதோ என்ற எண்ணம் கவலையைத் தருகிறது. நாளை இறந்து விடுவோமோ என்ற பயம் கவலையைத் தருகிறது.

அதாவது, வாழ்க்கையில் நிகழும் மாற்றங்களே கவலையையும் பயத்தையும் தருகின்றன. ஆன்மா இந்த மாற்றங்கள் அனைத்தையும் கடந்தது. ஆதலால் அந்த நிலையை அடைபவன் கவலைகள் நீங்கப் பெறுகிறான்.


Add new comment

Or log in with...