'மதத்தை பிறர் மேல் திணிப்பது விரோதமான நடவடிக்கை' | தினகரன்


'மதத்தை பிறர் மேல் திணிப்பது விரோதமான நடவடிக்கை'

எந்தவொரு மதமாயினும், இன்னொருவர் மேல் திணிப்பது அம்மதத்திற்கும் சட்டத்திற்கும் விரோதமானது என வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார். 

வவுனியா சிறிபோதி தக்சினராமய விகாரதிபதி சங்கைக்குரிய சியம்பலாகஸ்வெவ விமலசாரநாயக்க தேரர் தலைமையில் நடைபெற்ற பௌத்த மாநாட்டில் கலந்துகொண்ட பின் நேற்று (29) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், எந்தவொரு மதத்தையும் இன்னொருவர் மேல் திணிப்பது அந்த மதத்திற்கும் விரோதம். சட்டத்திற்கும் விரோதம். ஆகவே, வலுக்கட்டாயமாக யாரையும் இன்னொரு மதத்திற்கு திருப்புவது சட்டவிரோதமானது. அதேநேரம் அது நாகரீகமற்றதும் கூட.  மதத்தை தழுவிக்கொள்ள வேண்டுமே தவிர, மதத்தை நாங்கள் திணிக்கக் கூடாது.

அண்மையில் நான்கு இடங்களில் மத ரீதியான பிரச்சினை இடம்பெற்றது. அரச நீதி என்ன சொல்கிறதோ அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மன்னாரில் கிறிஸ்தவர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினை, நாயாற்றில் ஏற்பட்ட பிரச்சினை என்பன தொடர்பாக நீதிமன்றில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீதித்துறை என்ன சொல்கிறதோ அதை நடைமுறைப்படுத்த நான் தயாராகவுள்ளேன்.

மதத்தின் ரீதியாக யாரும் மதமடையாக் கூடாது என்பது தான் எனது கருத்து.

வடமாகாணத்தில் இருக்கின்ற மொழி, மத, கலாசார வேற்றுமைகளை ஏற்றுக் கொள்கின்றோம். அடுத்தவர் தம்முடைய மத, மொழி, கலாசாரத்திற்கு எந்தளவு மரியாதை கொடுக்கிறாரோ அந்த மதிப்பையும், மரியாதையும் கொடுப்பதற்கு நாங்கள் இணங்குகின்றோம். எந்த ஒரு காரணத்திறகாகவேனும் மதத்தை இன்னொருவர் மீது திணிப்பதற்கோ, வலுக்கட்டாயப்படுத்துவதற்கோ நாங்கள் முன்வர மாட்டோம். எந்தவிதத்திலும் வன்முறையையும், இனத்துவேசத்தையும் வளர்க்க மாட்டோம் என்பதுவே பௌத்த மாநாட்டில் நாம் எடுத்துக்கொண்ட பிரகடனம் என்றார். 

(கே.வசந்தரூபன் -வவுனியா விசேட நிருபர்)


Add new comment

Or log in with...