யாழில் பெண்கள் கருத்தரிப்பு வீதம் குறைவு? | தினகரன்


யாழில் பெண்கள் கருத்தரிப்பு வீதம் குறைவு?

யாழ்ப்பாணத்தில் பெண்கள் கருத்தரிக்கும் வீதம் குறைவதற்கு, அங்கு நிலவும் குடிநீர் பிரச்சினை ஒரு காரணமாக இருக்கலாம் என்று தான் நம்புவதாக, வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.

அவரது அலுவலகத்தில் நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு கூறினார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,"யாழ்ப்பாணத்தில் குடிநீர் பிரச்சினை பாரிய பிரச்சினையாக இருப்பதோடு, நான் ஆளுநராக இருக்கும் காலப்பகுதியில் இதற்கு உரிய தீர்வைப் பெறுவதற்கான முயற்சியையும்  எடுத்துள்ளேன். யாழ்ப்பாணத்தில் பெண்களின் கருத்தரிப்பு வீதம் குறைந்து வருவதோடு,  இங்கிருந்து பலர் கருத்தரிப்பு மருத்துவத்திற்காக இந்தியாவிற்குச் செல்கின்றனர்.  இதற்கு குடிநீர் பிரச்சினையும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று நான் எண்ணுகின்றேன்" என்றார். 

மேலும், "இங்கு விநியோகிக்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட நீர்  தொடர்பாகக் கவனம் செலுத்தப்படுவதில்லை என்பதோடு, அதனைக் கண்காணிக்கும் பொறிமுறைகளும் இல்லை. எனவே, யாழ்ப்பாணத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக 6 திட்டங்களை முன்வைத்துப் பரிசீலிக்கின்றோம். அவற்றில் முதல் திட்டமாக, வடமராட்சிக் கிழக்குக் கடல் நீரேரியிலிருந்து நீர் கொண்டுவருவது தொடர்பாகக் கூடிய கவனம் செலுத்துகின்றோம்.

வடமராட்சி நீரேரியிலுள்ள நன்னீரைத் தேக்கிவைக்கும்  முகமாக பாரிய குளம் ஒன்றை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்பதோடு, 21ஆம் நூற்றாண்டில் கட்டப்படும் மிகப் பெரிய குளம் இதுவாகத் தானிருக்கும் என்றும் எண்ணுகின்றேன். இக்குளத்தின் சுற்றளவு சுமார் 9 கிலோ மீற்றர் என்பதோடு,  கொங்கிரீட் அணைக்கட்டுக்கள்  கட்டப்படவுள்ளன.

இதற்கு அடுத்த திட்டமாக 1956ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஆறுமுகத் திட்டத்தை தற்போதைய சூழலுக்கு ஏற்றவாறு 'அட்வான்ஸ் ஆறுமுகத் திட்டமாக மாற்றியமைப்பது தொடர்பாகவும் பரிசீலிக்கின்றோம். 

மூன்றவதாக பாலியாற்றுத் திட்டமும், நான்காவதாக மேல் பறங்கியாறு கீழ் பறங்கியாறு திட்டமும் பரிசீலனையில் உள்ளன.  ஐந்தாவது திட்டமாக, மத்திய மற்றும் சப்ரகமுவா மாகாணங்களிலிருந்து குழாய்கள் ஊடாக நீரைக் கொண்டுவருவது தொடர்பாகவும் பரிசீலிக்கின்றோம்.   

ஆறாவது திட்டமாக, இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு நீர் கொண்டுவரும் திட்டத்தை பரிசீலனைக்கு எடுக்கவுள்ளோம்" என்றார்.

(மயூரப்பிரியன் -யாழ். விசேட நிருபர்)


Add new comment

Or log in with...