நீண்ட தூர காசா ரொக்கெட் மத்திய இஸ்ரேலை தாக்கியது | தினகரன்

நீண்ட தூர காசா ரொக்கெட் மத்திய இஸ்ரேலை தாக்கியது

ஏழு பேர் காயம்; பதற்றம் அதிகரிப்பு

காசாவில் இருந்த வீசப்பட்ட நீண்ட தூரம் செல்லும் ரொக்கெட் குண்டு மத்திய இஸ்ரேலில் வீடு ஒன்றை நேற்று தாக்கியுள்ளது. ஏழு பேர் காயமடைந்த இந்த தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு தனது அமெரிக்க பயணத்தை பாதியில் நிறுத்திக் கொண்டு இஸ்ரேல் திரும்பவுள்ளார்.

ஹமாஸ் இஸ்லாமிய அமைப்பின் ஆட்சியில் இருக்கும் காசாவில் இருந்து இந்த தாக்குதல் இடம்பெற்றதாக இஸ்ரேல் இராணுவம் உறுதி செய்துள்ளது. வரும் ஏப்ரல் 9 ஆம் திகதி இஸ்ரேலில் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் இந்த தாக்குதல் இரு தரப்புக்கும் இடையில் மற்றொரு மோதல் வெடிக்கும் அச்சுறுத்தலை அதிகரித்துள்ளது.

நேற்று வொஷிங்டனில் இருந்த நெதன்யாகு அமெரிக்க ஜனாதிபதி டொனால் டிரம்ப்பை சந்தித்த பின்னர் நாடு திரும்பவுள்ளார். இன்று இஸ்ரேல் ஆதரவு பிரசார அமைப்பின் வருடாந்த மாநாட்டை அவர் ரத்துச் செய்து விட்டே இஸ்ரேல் திரும்பவுள்ளார்.

இஸ்ரேல் முற்றுகையில் இருக்கும் காசா பகுதிக்கு மக்கள் மற்றும் பொருட்கள் செல்வதை மூடி இருக்கும் இஸ்ரேல் மத்தியதரைக் கடலில் பலஸ்தீன மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்ட வலயத்தை குறைத்துள்ளது.

டெல் அவிவில் இருந்து 20 கிலோமீற்றர்கள் வடக்காக மிஷ்மெரட் பகுதியில் உள்ள வீடொன்றையே ரொக்கெட் குண்டு தாக்கி இருப்பதாக இஸ்ரேலிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மிஷ்டெரட் பகுதி காசாவில் இருந்து 80 கிலோமீற்றர் தொலைவில் இருப்பதோடு அத்தனை தூரத்திற்கு ரொக்கெட் தாக்குதல் இடம்பெறுவது மிக அரிதான ஒன்றாகும்.

இந்த ரொக்கெட் குண்டினால் ஷரோன் மற்றும் எமெக் பிராந்தியங்களில் சைரன் ஒலி எழுப்பப்பட்டது.

இதில் காயமடைந்த நான்கு பெரியவர்கள் மற்றும் மூன்று சிறுவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதோடு இவர்கள் சிறு தீக்காயம் மற்றும் வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இவ்வாறு காயமடைந்தவர்களில் ஆறு மாதக் குழந்தை ஒன்று இருப்பதோடு ஆறு பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர். ரொக்கெட் குண்டு தாக்குதலில் வீடு சேதமாகி இருப்பதோடு அருகில் இருக்கும் மரங்களும் தீயில் கருகியுள்ளன.

“இஸ்ரேலிய தேசத்தின் மீதான குற்றவியல் தாக்குதல் ஒன்று இடம்பெற்றிருப்பதோடு படைகள் கொண்டு பதில் தரப்படும்” என்று நெதன்யாகு குறிப்பிட்டார்.

பாதுகாப்பு தொடர்பான சம்பவம் காரணமாக எனது அமெரிக்க பயணத்தை பாதியில் நிறுத்திக்கொள்ள தீர்மானித்துள்ளேன் என்ற நெதன்யாகுவின் வீடியோ அறிவிப்பு ஒன்றை அவரது அலுவலகம் வெளியிட்டுள்ளது.

“ஒருசில மணி நேரத்தில் ஜனாதிபதி (டொனால்ட்) டிரம்பை நான் சந்திப்பேன். அதனைத் தொடர்ந்து நடவடிக்கைகளை நெருக்கமாக வழிநடத்துவதற்கு இஸ்ரேலுக்கு திம்புவேன்” என்று குறிப்பிட்டார்.

எனினும் இது தொடர்பில் ஹமாஸ் அல்லது காசாவின் ஏனைய போராட்டக் குழுக்களிடம் இருந்து உடன் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

ஒரு வாரத்திற்கு முன்னர் டெல் அவிவை நோக்கி இரு ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்டபோதும் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் இராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் நான்கு பலஸ்தீனர்கள் காயமடைந்தனர்.

காசா மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் கடந்த சில வாரங்களாக பதற்றம் அதிகரித்திருந்த சூழலிலேயே இந்த ரொக்கெட் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இஸ்ரேலில் இன்னும் 15 நாட்களில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. பாதுகாப்பு அமைச்சராகவும் செயற்படும் நெதன்யாகு இந்த தேர்தலில் கடும் போட்டியை சந்தித்துள்ளார். காசா போராளிகள் தொடர்பில் ஆக்கபூர்வ நடவடிக்கை எடுக்கத் தவறியதாக அவர் மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கு இடையில் நீண்டகால யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு எகிப்து, கட்டார் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை முயற்சி மேற்கொண்டு வருகின்றபோதும் உடன்பாடு ஒன்றை எட்ட தவறியுள்ளது.

அதநேரம் மேற்குக் கரையிலும் வன்முறைகள் அதிகரித்துள்ளன. துருப்புகள் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறி கடந்த வாரம் இரு பலஸ்தீனர்களை இஸ்ரேல் இராணுவம் சுட்டுக் கொன்றது.


Add new comment

Or log in with...