ரஷ்யாவுடன் இணைந்து சதிசெய்த குற்றச்சாட்டிலிருந்து டிரம்ப் விடுதலை | தினகரன்

ரஷ்யாவுடன் இணைந்து சதிசெய்த குற்றச்சாட்டிலிருந்து டிரம்ப் விடுதலை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் 2016 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தில் ரஷ்யாவுடன் இணைந்து எந்த சதியிலும் ஈடுபடவில்லை என்று அது குறித்து விசாரணை நடத்திய ரொபர்ட் முல்லரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கையில், டிரம்ப் சட்டவிரோதமாக நீதியில் தலையிட்டாரா என்பது பற்றி எந்த முடிவு வெளியிடப்படவில்லை.

இந்த அறிக்கையின் கூறுகள் சட்டமா அதிபர் வில்லியம் பார் கொங்கிரஸில் முன்வைத்தார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், “கூட்டு சதியும் இல்லை, நீதிக்கு எவ்வித தடையும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

முல்லரின் விசாரணையை அடிக்கடி பழிவாங்கும் நடவடிக்கை என்று விமர்சித்து வந்த டிரம்ப், “இதுபோன்ற விடயங்களை நாடு கடந்து செல்ல வேண்டியது அவமானகரமான ஒன்று” என்று தெரிவித்துள்ளார். 2016ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு பின்புலத்தில் ரஷ்யா உள்ளதா என்ற கேள்விக்கான பதிலை தேடி கடந்த இரண்டு ஆண்டுகளாக பல கட்ட விசாரணை நடத்தி வந்தார் ரொபர்ட் முல்லர். அதன் ஒரு பகுதியாக டிரம்பின் பல நெருங்கிய முன்னாள் உதவியாளர்கள் கைதுசெய்யப்பட்டனர், சிறையில் அடைக்கப்பட்டனர்.

“இந்த அறிக்கையில் ஜனாதிபதி குற்ற செயலில் ஈடுபட்டார் என்று குறிப்பிடப்படாத அதே சூழ்நிலையில், அவர் குற்றமற்றவர் என்றும் குறிப்பிடப்படவில்லை” என்று அந்த அறிக்கையில் முல்லர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி டிரம்ப் குற்றம் ஏதும் செய்யவில்லை என்றபோதும் அந்த வழக்கிலிருந்து அவர் முழுவதுமாக இன்னும் விடுவிக்கப்படவில்லை என்று அமெரிக்க பாராளுமன்ற நீதிபதிகள் குழுத் தலைவர் ஜெப்ரி நட்லர் குறிப்பிட்டுள்ளார்.

2016ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஹிலாரிக்கு எதிராக, அரசால் அங்கீகரிக்கப்பட்ட சைபர் தாக்குதல்கள், சமூக வலைதளங்களில் போலி செய்திகளை ரஷ்யா வெளியிட்டது என அமெரிக்க உளவு அமைப்புகள் தெரிவித்திருந்தன.

இந்த நடவடிக்கையில் டிரம்பின் அணியைச் சேர்ந்தவர்கள் இருந்தனரா என்பதை முல்லரின் சிறப்பு விசாரணைக் குழு கடந்த இரண்டு ஆண்டுகளாக விசாரித்தது.

டிரம்ப் தேர்தல் குழுவின் மூத்த அதிகாரிகள், ரஷ்ய அதிகாரிகளை சந்தித்தனர் என தெரியவந்துள்ளது. ஆனால் முதலில் அது வெளிப்படையாக கூறப்படவில்லை.

இதுவரை டிரம்பின் தேர்தல் பிரச்சாரம் மற்றும் டிரம்பின் பதவியுடன் தொடர்புடைய நான்கிற்கும் மேற்பட்டவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் இதுகுறித்து டிரம்ப் தொடர்ந்து மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் அவர் மீது குற்றம் சுமத்த வலுவான ஆதாரங்கள் ஏதும் இல்லை.


Add new comment

Or log in with...