Thursday, March 28, 2024
Home » டெங்கு தொற்று தீவிரமடைவதால் அவதானம் பேணுவது அவசியம்!

டெங்கு தொற்று தீவிரமடைவதால் அவதானம் பேணுவது அவசியம்!

by sachintha
December 30, 2023 6:14 am 0 comment

இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்ைக வேகமாக அதிகரித்து வருகின்றது. இந்த வருடத்தில், அதாவது இவ்வருட ஜனவரி மாதத்தில் இருந்து டிசம்பர் மாதத்தின் இறுதி வரையான 12 மாத காலப்பகுதியில் நாட்டில் டெங்கு தொற்றுக்கு இலக்கான சுமார் ஐம்பது பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் டெங்கு தொற்றுக்கு உள்ளானோரில் ஏராளமானோர் சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில் வீடு திரும்பியுள்ளனர்.

நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்ைக சமீப நாட்களாக அதிகரித்து வருவதாக மருத்துவத்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் டெங்கு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். ஆனாலும் மேல்மாகாணத்திலேயே டெங்கு நோயாளர்கள் அதிகளவில் இனங்காணப்பட்டுள்ளனர். தற்போது மாத்திரமன்றி, முன்னைய காலத்திலும் மேல்மாகாணத்திலேயே டெங்கு தொற்றாளர்கள் அதிகளவில் இனங்காணப்படுவது வழக்கமாகும்.

டெங்கு நோய் நாட்டில் அதிகரித்து வருவதன் காரணமாக சுகாதாரப் பிரிவினரால் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். டெங்கு நுளம்புகளை ஒழிப்பதற்கு பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

நாட்டில் மழைக்காலம் ஆரம்பமானால் நுளம்புகள் பல்கிப் பெருகுவது வழமையாகும். மழைநீர் தேங்கி நிற்கின்ற இடங்கள் நுளம்புகள் முட்டையிட்டுப் பெருகுவதற்கு வாய்ப்பான இடங்களாகும். எனவேதான் மழைக்காலம் ஆரம்பமானதும் நுளம்புகள் பல்கிப் பெருகுகின்றன. மழைக்காலத்தில் நுளம்புகள் பெருகுவதைக் கட்டுப்படுத்த முடியாதிருக்கிறது. பொதுமக்கள் தங்களது வீடு மற்றும் சுற்றுப்புறச் சூழல் தூய்மையில் கூடிய கவனம் செலுத்துவது மிகவும் அவசியமாகும். ஆனால் மக்கள் எவ்வளவுதான் கவனம் செலுத்தினாலும், நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவது இலகுவான காரியமல்ல.

மக்கள் இன்றைய காலத்தில் தங்களது வெளியூர்ப் பயணங்களின் போது, தங்களது பாதுகாப்புத் தொடர்பில் அதிகம் கவனம் செலுத்துவதும் அவசியமாகின்றது.

எமது சூழலில் உலவுகின்ற நுளம்புகள் யாவும் டெங்கு வைரஸ் கிருமிகளைப் பரப்புகின்ற நுளம்புகள் அல்ல என்பதை நாம் புரிந்து கொள்வது அவசியம். ஆனாலும், அனைத்து நுளம்புகளையும் நாம் சாதாரண நுளம்புகள் என்றெண்ணி ஏமாந்து விடவும் கூடாது. பொதுவாக நுளம்புகள் என்றாலே அவை ஆபத்தானவை என்ற எச்சரிக்ைகயுணர்வு நம் அனைவருக்கும் முதலில் அவசியம்.

உலக நாடுகளில் 19- ஆம் நூற்றாண்டில் அதிகமாகப் பரவ ஆரம்பித்த டெங்கு, இன்று 100 இற்கும் மேற்பட்ட நாடுகளில் நிலவும் பிரதான சுகாதாரப் பிரச்சினையாக விஸ்வரூபமெடுத்து நிற்கிறது.

டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதற்கு மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லாததே காரணம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். டெங்கு காய்ச்சல் வரக் காரணம் என்ன? அது எப்படி மற்றவருக்குப் பரவுகிறது? மற்றைய காய்ச்சல்களிலிருந்து எப்படி அதை வேறுபடுத்தி அறிவது? அதற்கான பரிசோதனைகள், சிகிச்சை முறைகள் எவை?

இவ்வாறான சந்தேகங்கள் தொடர்பாக மக்கள் போதிய விழிப்புணர்வையும் அறிவையும் கொண்டிருந்தால் டெங்கு நோய் ஆபத்திலிருந்து கூடியளவு பாதுகாப்புப் பெற முடியும் என்பது உண்மையாகும். ஆகவே டெங்கு நோய் தொடர்பான விடயங்களை ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொள்வதில் மக்கள் போதிய கவனம்செலுத்துவது அவசியம்.

தூயதண்ணீரில் பெருகக் கூடிய `ஏடிஸ் ஏஜிப்தி’ (Aedes Aegypti) என்ற ஒரு வகை நுளம்புகள் மூலம் டெங்கு வைரஸ் பரவுகிறது. `ஏடிஸ்’ நுளம்புகள் மூன்று வாரங்களுக்குமேல் உயிர்வாழக் கூடியனவாகும். டெங்கு நுளம்புகள் பெரும்பாலும் பகல் நேரங்களில் மட்டுமே மனிதரைக் குத்துகின்றன. உடல் மற்றும் கால்களில் கறுப்பு மற்றும் வெள்ளைநிறப் புள்ளிகள் கொண்ட உடலமைப்பை இந்நுளம்புகள் கொண்டுள்ளன.

வீட்டுச் சூழலில் சரியாக மூடப்படாத வெற்றுப் பாத்திரங்கள், தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்கள், தோண்டப்பட்ட குழிகள், மொட்டைமாடிகளில் வைத்திருக்கும் உபயோகமற்ற பொருட்கள், கண்டபடி கிடக்கும் பிளாஸ்டிக் கப்கள், பயனற்ற பொருள்கள், வீடுகளில் சரியாக மூடப்படாத தரைத் தொட்டிகள், மேல்நிலைத் தொட்டிகள், டயர்கள், பயன்படுத்தாத உடைந்த சிமெந்து தொட்டிகள், நீண்டகாலமாகக் கழுவப்படாத தொட்டிகள் போன்றவற்றில் தேங்கியிருக்கும் நல்ல தண்ணீரில் `ஏடிஸ்’ நுளம்புகள் முட்டையிட்டுப் பெருகுகின்றன. இது டெங்கு பாதிப்புள்ளவர்களைக் குத்திவிட்டு மற்றவர்களைக் குத்தும்போது ஒருவரிடமிருந்து மற்றவருக்கு டெங்கு பரவுகிறது.

எமது சூழலில் உள்ள நுளம்புகளை முற்றாக ஒழிப்பதென்பது இயலாத காரியமாகும். ஆனால் நுளம்புகள் எம்மைக் குத்தாமல் பாதுகாத்துக் கொள்வது ஓரளவு இயலுகின்ற காரியம். எனவே ஒவ்வொருவரும் நுளம்புகளில் இருந்து பாதுகாப்புப் பெறுவதில் கவனம் செலுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT