புகைப்பிடித்தலினாலும் மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு | தினகரன்

புகைப்பிடித்தலினாலும் மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு

தற்போதைய காலத்தில் பெரும்பாலானோர் மத்தியில் மாரடைப்பு நோய் பாரிய பிரச்சினையாக காணப்படுவதோடு, மாரடைப்பு ஏற்படுதற்கு பல்வேறு காரணங்களும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

புகைப்பிடித்தல், அதிகமாக உணர்ச்சி வசப்படுதல், அளவுக்கதிமான கடின உழைப்பு உள்ளிட்டவற்றால் மாரடைப்பு ஏற்படுகின்றது.  அடைப்பு அதிகமாகும்போது, இறுக்கம் அல்லது தீவிர மாரடைப்பு ஏற்படுகின்றது.

இனி மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்களையும் அறிகுறியையும் விரிவாக நாம் அறிந்துகொள்ளலாம்.

இதய தசைகளுக்கும் தேவையான உணவையும், ஒக்சிஜனையும் எடுத்துச்செல்ல மூன்று முக்கிய இரத்தக்குழாய்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் இதயத்தின் வெவ்வேறு பாகங்களுக்கு ஒக்சிஜன் கலந்த இரத்தத்தை எடுத்துச் செல்கின்றன. இந்த இரத்தக் குழாய்களின் இரத்த ஓட்டத்திற்கு தடையாக முதலில் சிறியதாக தடைக்கற்கள் போல அடைப்புகள் ஏற்படுகின்றன.

சில காரணங்களால் இத்தடைக்கற்கள் பெரிதாகி உடைந்து, அதன் மேல் இரத்தம் உறைந்து இரத்தக்குழாயை முழுமையாக அடைத்து  விடுகிறது.  இதனால் இந்த இரத்தக் குழாய் மூலம் இரத்தத்தைப் பெறும் இதயத்தின் தசைப்பகுதிக்கு ஒக்சிஜனும் ஊட்டச் சத்துகளும் கிடைக்கப் பெறாததால் செயலிழக்கிறது. இதன் காரணமாக மாரடைப்பு ஏற்படுகின்றது.

உயர் இரத்த அழுத்தம், அதிகளவான கொழுப்புச் சத்து, சர்க்கரை நோய், புகைப்பிடித்தல், மன அழுத்தம் போன்றவற்றால் கூட இரத்த நாளத்தின் உட்சுவர் பாதிக்கப்படுகிறது. உட்சுவர் பாதிக்கப்பட்டு, அதன் மீது இரத்தத்தில் மிதக்கும் கொழுப்புத் திவலைகள்  படிந்து வரும். இரத்த ஓட்டத்துக்கான பாதை குறுகலாகி, இரத்த ஓட்டம் தடைப்படும். பிறகு இதய நாளத்தில் விறைப்பு அல்லது உறைகட்டி  ஏற்பட்டால், இரத்த ஓட்டம் முழுவதுமாகத் தடைப்படும். இதயத் தசைக்கு இரத்த ஓட்டம் தடைப்படுவதால், அவை செயலிழக்கின்றன.

அறிகுறிகள்:

ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கும் ஒருவருக்கு அவருடைய இரத்த நாளங்களில் 50சதவீதம் அடைப்பு இருந்தால் கூட இதயத்துக்குத் தேவையான சுத்த இரத்தம் கிடைத்து விடுகிறது. அதனால் அவருக்கு எந்த விதமான அறிகுறியும் தெரியாது.

கடினமான உழைப்பில் ஈடுபடும்போது குறுகிப்போன நாளங்கள் வழியாகப் போதுமான இரத்தம் இதயத்துக்கு கிடைப்பது இல்லை. அப்போது மார்பு இறுக்கம் போன்ற அறிகுறி தோன்றும். ஓய்வு எடுத்துக்கொண்டால், இதயத்துக்குத் தேவையான இரத்தமும்  பிராண வாயுவும் கிடைக்கும். நெஞ்சு வலியும் மறைந்துவிடும்.

மாரடைப்புக்கு ஆரம்ப அறிகுறியே மார்பு இறுக்கம்தான். மார்பு இறுக்கம் மார்பின் நடுப்பகுதியில் நெஞ்சு எலும்புக்குப் பின்புறம்  தோன்றும். இரு தோள்களில் முக்கியமாக இடது தோளில் ஆரம்பித்து கைகள், கழுத்து, தாடை, முதுகு போன்ற பகுதிகளுக்கும்  வலி பரவலாம். சில சமயங்களில் குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே வலி தோன்றலாம். பொதுவாக நோயாளிகள் இதை வாயுக் கோளாறு என்று அசட்டையாக இருந்துவிடுவார்கள். இந்த மார்பு இறுக்கத்தால் இதய தசைகள் சேதம் அடைவதில்லை. ஆனால் எந்த நேரத்திலும் இரத்த நாளங்கள் தடைப்பட்டு மாரடைப்பு ஏற்படலாம். சாதாரண மார்பு இறுக்கமா அல்லது மாரடைப்பு என்று மருத்துவரால்தான் கண்டறிய இயலும்.

கடுமையான மார்பு இறுக்கம் போன்ற வலி 15நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும். மார்பு வலியுடன் உடல் எங்கும் திடீர் வியர்வை, மூச்சுத்திணறல், வாந்தி, பலவீனம், தலைச்சுற்றல், மயக்கம், வேகமான நாடித்துடிப்பு ஆகியனவும் ஏற்படலாம்.

இதேவேளை, அறிகுறிகளே  இல்லாமலும் மாரடைப்பு ஏற்படுவதும் உண்டு என தெரிவிக்கப்படுகின்றது.


Add new comment

Or log in with...