கிழக்குப் பாடசாலைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆசிரிய நியமனம் | தினகரன்

கிழக்குப் பாடசாலைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆசிரிய நியமனம்

கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக தமிழ் மொழிமூல பட்டதாரி பயிலுனர்கள் மற்றும் ஆசிரியர் உதவியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி முத்துபண்டா அறிவித்துள்ளார். 

2019.04.11ம் திகதி அல்லது அதற்கு முன்பு பட்டம் பெற்ற பட்டதாரிகளை பட்டதாரி பயிலுனராகவும், 2017ம் ஆண்டு அல்லது அதற்கு முன்பு கா.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த பல்கலைக்கழகங்களுக்கு அல்லது தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு நுழைவினை பெறுவதற்கான சந்தர்ப்பங்களை இழந்த கா.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தியடைந்தவர்களை, ஆசிரியர் உதவியாளர்களாகவும், ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர் பணியில் இணைத்துக் கொள்வதற்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

ஆசிரியர் உதவியாளர்களாக விண்ணப்பிப்பவர்கள் 2017ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன்னர்  ஏதாவது ஒரு ஆண்டில் க.பொ.த. உயர்தர பரீட்சையில் ஒரே தடவையில் மூன்று பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும். அத்துடன் க.பொ.த சாதாரணதர பரீட்சையில் தமிழ் மொழி மூல உட்பட முதலாவது அமர்வில் ஐந்து பாடங்களில் மூன்று திறமைச் சித்தியுடன் கூடியதாக சித்தியடைந்திருப்பது கட்டாயமானதாகும். 

பட்டாதாரிப் பயிலுனர்களாக விண்ணப்பிக்கின்றவர்கள் 2019.04.11ஆம் திகதிக்கு 18வயதை விடக் குறையாதவராகவும் 40வயதிற்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். 

அதற்கமைவாக 2001.04.11ஆம் திகதி அல்லது அதற்கு முன், 1979.04.11ஆம் திகதிக்கு அல்லது அதற்குப் பின் பிறந்த தினத்தைக் கொண்டவர்கள் மாத்திரம் விண்ணப்பிக்க தகுதியுள்ளவர்களென அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆசிரியர் உதவியாளர்களாக விண்ணப்பிப்பவர்கள் 2019.04.11ஆம் திகதிக்கு 18வயதை விடக் குறையாதவராகவும் 35வயதிற்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். 

அதற்கமைவாக 2001.04.11ஆம் திகதி அல்லது அதற்கு முன் 1984.04.11ஆம் திகதிக்கு அல்லது அதற்குப் பின் பிறந்த தினத்தைக் கொண்டவர்கள் மாத்திரம் விண்ணப்பிக்க தகுதியுள்ளவர்களென அறிவிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பத்தினை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 11ம் திகதி அல்லது அதற்கு முன்னர் செயலாளர், கல்வி அமைச்சு, கிழக்கு மாகாணம், உட்துறைமுக வீதி, திருகோணமலை எனும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அறிவித்துள்ளார். 

(ஒலுவில் விசேட நிருபர்) 


Add new comment

Or log in with...