மனித இனம் பெருமையுறும் மங்கள வார்த்தை திருவிழா | தினகரன்

மனித இனம் பெருமையுறும் மங்கள வார்த்தை திருவிழா

கிறிஸ்து பிறப்பின் முன் அறிவிப்பின் விழாவினை நாம் நேற்று 25ம் திகதி கொண்டாடினோம். மனித வரலாற்றின் மிக முக்கியமான நிகழ்வாக இது கருதப்படுகின்றது. ஆதாமின் கீழ்ப்படியாமையினால் இறைவனின் நம்பிக்கையை இழந்த மனிதன் மீண்டும் அதனைப் பெறுகிறான்.

ஆண்டவர் காட்டும் அளப்பரிய கரிசனையின் விளைவாக அந்த இறைவனின் மகனே மனித அவதாரம் எடுத்திட்ட  நாள் இது. 

இது திருச்சபையினால்   நினைவு கூரப்பட்ட ஒரு நிகழ்வாகும். இன்று நம் ஆலயங்களில் திரிகால மணி ஒலிப்பதும் அவ் வேளையில் நாம் திரிகால செபம் சொல்லுவதும் இதனை நினைவு கூரவே. 

முற்காலங்களில் திருப்பலி பூசை முடிவில் இரண்டாம் முறையாக ஒரு நற்செய்தி வாசகம் வாசிக்கப்படும். இது யோவான் நற்செய்தியின் முதல் 14 வசனங்களாகும். இங்கே வார்த்தையானவர் மாம்சமாகி எங்களுடனே வாசமாயிருந்தார்” என்ற வார்த்தை வரும்போது குருவானவர் உட்பட அனைவரும் முழங்கால்களிலிருப்பர். 

இவ்விழாவினை ‘மங்கள வார்த்தை’ விழா என்றழைப்பர்.  இறைவனும் மனித இனமும் கொள்ளும் திருமண உறவிற்கு வழிகோலும் நாளே இது.

இறைவன் மனிதன்பால் கொண்ட அன்பின் உச்சக்கட்ட நிறைவு நாள் இது.  அத்தோடு மனிதன் இறைவனின் திருச் சித்தத்திற்குத் தன்னை எவ்வித நிபந்தனையுமின்றி பணித்துக்கொண்ட நாளும் இதுவே. “இதோ ஆண்டவரின் அடிமை. உமது சித்தத்தின் படியே ஆகக் கடவது” என்று அன்னை மரியாள் தன்னைத் தாழ்த்திக்கொண்ட போது மனித இனம் பெருமையுறுகின்றது. இதனால் மனித இனத்தின் தனியொரு பெருமை என மரியாள் கருதப்படுகின்றார். 

இந் நாளை வைத்தே ஆண்டவர் இயேசுவின் பிறப்பின் பெருநாள் கணிக்கப்படுகின்றது. சில கிறிஸ்தவ எதிர்ப்பாளர்கள் நாம் கொண்டாடும் கிறிஸ்மஸ் தினமானது உரோமையின் சூரியக் கடவுளின் விழா எனக் கூறி நம்மை சிறுமைப் படுத்துகின்றனர்.

ஆனால் உண்மையில் திருச்சபை தன் மேலான ஞானத்தினால் ஆசேர் குலத்தவராகிய எலிசபெத்தின் கணவர் சக்கரியாஸ் ஆலயத்தில் தூபம் காட்டின நாள் எது என்பதை எபிரேய நாட்காட்டியின் மூலம் அறிந்து அது செப்டெம்பர் 24ம் திகதியளவு என நிச்சயிக்கின்றது.

அதன் பின்னரே எலிசபெத்து கருவில் ஸ்நாபக அருளப்பரைத் தாங்குகிறார். எனவே அத்தினத்திலிருந்து ஆறாவது மாதமாகிய மார்ச் 25ம் திகதியை மங்கள வார்த்தையின் நாள் என்றும் அதிலிருந்து இன்னும் 9 மாதங்கள் கடந்த பின் வரும் டிசம்பர் 25ம் திகதியை கிறிஸ்து பிறப்பின் நாள் என்றும் கணிக்கின்றோம்.  

(சகோ டிவோட்டா)


Add new comment

Or log in with...