வற்றி வரண்டு போன நீர்நிலைகள்! | தினகரன்

வற்றி வரண்டு போன நீர்நிலைகள்!

ஆதிமனிதன் நெருப்பை உருவாக்கியதுதான் மின்சாரத்தில் ஆரம்பம் என்று கூறலாம். நெருப்பை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தனது தேவைகளை நிறைவேற்ற மனிதன் முற்பட்டதே மின்சாரம் உருவாவதற்கு அடிப்படை எனலாம். 

நாம் இன்று மின்சாரத்தை பல வழிகளில் உற்பத்தி செய்கின்றோம். இலங்கையைப் பொறுத்தவரையில் நீரைப் பயன்படுத்தியும், எரிபொருளைப் பயன்படுத்தியும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது.

எமது மின்சாரத் தேவையில் நீர் மின்னுற்பத்தி நிலையங்களான மொறகஹகந்த (25மொவோட்), லக்ஷபான (4.54%), மகவலி (3.77%), சமனல வெவ (1.16%), களுகங்கை (1.07%), சிறிய நீர் மின் நிலையங்கள் (0.08%) ஆகியவற்றின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது.

அனல் மின்னுற்பத்தி நிலையம் மூலம் 42.06%மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. எரிபொருள் மூலம் 18.143%பூர்த்தி செய்யப்படுகின்றது. இதைத் தவிர சூரிய மின்சக்தி, காற்றாலை மின்சாரம் என்பவற்றையும் நாம் சிறியளவில் பயன்படுத்துகின்றோம்.  

பூமியில் விழும் சூரிய சக்தியில் சிறிய பகுதியே ஆக்கபூர்வமாக பயன்படுத்தப்படுகிறது. சூரிய சக்தியில் இலிருந்து மின்சாரம் இரண்டு வகைகளில் தயாரிக்கப்படுகின்றது. ஒன்று சூரிய ஒளியிலிருந்து தயாரிக்கப்படும் மின்சாரம், இரண்டாவது சூரிய வெப்பத்திலிருந்து தயாரிக்கப்படும் மின்சாரம்.

இலங்கையில் ஹம்பாந்தோட்டையில் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக தேசிய மின் உற்பத்தி வலையமைப்புக்கு 737கிலோவாட் சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படுகின்றது. அது மாத்திரமல்ல, சிறியளவிலான சூரிய சக்தி தொகுதிகளை வீட்டுக் கூரைகளில் பொருத்துவதன் மூலம் மின்சாரம் பெற முடியும். காற்றாலை மின் உற்பத்தி மூலமும் எமது மின்சார வலையமைப்புக்கு மின்சாரம் பெறப்படுகின்றது.  

தற்போது நிலவும் வரட்சி காரணமாக மின்வெட்டு சில இடங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. தொடர்ந்து நாம் மின்சார உற்பத்தியை எவ்வளவுதான் அதிகரித்தாலும் சிக்கனமாக அதனை பாவிக்கா விட்டால் எமது தேவைகளை நாம் பூர்த்தி செய்ய முடியாது. தற்போது வரட்சியான காலநிலை காணப்படுவதால் குளிரூட்டி, காற்றாடி என்பவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அத்துடன் நீர் மின் உற்பத்தி செய்யப்படும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைந்து வருகின்றது. வரட்சியினால் மக்களின் நாளாந்த நீர் தேவையும் அதிகரித்துள்ளது.

மின்சாரத்தை சிக்கனமாகப் பாவிப்பதாயின் முதலில் வீட்டில் தேவையின்றி எரியும் மின்விளக்குகளை அணைத்து விடலாம். மேலும் நாம் பயன்படுத்தும் அறையில் மாத்திரம் மின்விளக்கைப் பயன்படுத்தலாம்.  

சில நேரங்களில் நாம் பாதைகளில் பகல் நேரங்களில் கூட ஒளிரும் மின்விளக்குகளைக் கண்டிருப்போம். அது பற்றியும் நாம் விழிப்புடன் இருக்கலாம். குளர்சாதனப் பெட்டியின் கதவை அடிக்கடி திறப்பதனால் அதிகளவு மின் விரயமாக்கப்படுகின்றது. அதனைத் தடுக்க நாம் திட்டமிட்டு பொருட்களை ஒரே நேரத்தில் எடுக்கவோ, சேமித்து வைக்கவோ முயற்சி செய்யலாம். சலவை இயந்திர பாவனையின்போது துணிகளை இயந்திரத்தில் உள்ளே உலரவிடாமல் வெளியே காற்றில் உலர்த்தலாம். அதேபோல் சலவை செய்யும் துணிகளையும் இயந்திரம் கொள்ளக்கூடிய உயர்ந்த பட்ச துணிகளை ஒரே தடவையில் சலவை செய்யலாம்.  

கல்வி கற்கும் மாணவர்கள் ஒரே மேசையில் அமர்ந்து மேசை விளக்கைப் பயன்படுத்தி கல்வி கற்பதன் மூலம் மின்சாரத்தைச் சேமிக்கலாம். மின்சக்தி சேமிப்பான்களை (எனர்ஜி சேவக) குளிர்சாதனப் பெட்டி, குளிரூட்டிகளில் கட்டாயம் பயன்படுத்தவும், நல்ல காற்றோட்டமான இடத்தில் குளிர்சாதனப் பெட்டியை வைத்திருக்கவும், எமது வீட்டிறகான மின் தொகுதியை வயரிங் செய்யும் போது தரநிர்ணயம் செய்யப்பட்ட பொருள்களையே பயன்படுத்தவும்.சேர்க்கியூட் பிரேக்கர், ஏர்த் லீக்கேஜ் சர்க்கியூட் பிரேக்கர்களை பொருத்தவும். மின் சாதனங்களை வாங்கும் போது நட்சத்திரக் குறிப்பீடுகளை பார்த்து வாங்கவும். ஏசி, டிவிடி போன்ற ரிமோட் உபயோகப்படுத்தும் சாதனங்களை பயன்படுத்தாத போது முற்றாக மின் இணைப்பைத் துண்டிக்கவும். மின்தூக்கிகளை (லிப்ட்) அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்கலாம். இவ்வாறான வழிகளை பின்பற்றினால் வீடுகளில் மின்சாரத்தை சேமிக்கலாம். மின்கட்டணத்தையும் கணிசமாகக் குறைக்கலாம். இதன் மூலம் நாம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஓரளவாவது பங்களித்தவர்களாவோம்.  

(வீ.ஆர்.வயலட்)   


Add new comment

Or log in with...