மக்கள் உள்ளத்தில் என்றும் வாழும் நளீம் ஹாஜியார் | தினகரன்

மக்கள் உள்ளத்தில் என்றும் வாழும் நளீம் ஹாஜியார்

தேசத்துக்கும் சமூகத்துக்கும் பெரும்பணியாற்றிய மக்கள் சேவகன்

இலங்கை வரலாற்றில் நன்றியோடு நினைவு கூரப்படும் ஒரு ஆளுமை நளீம் ஹாஜியார்.தனது செல்வத்தால் தனது சமூகத்தையும் தேசத்தையும் வளப்படுத்தியதன் மூலம் வரலாறு படைத்தவர் அவர்.

1933.04.04ஆம் திகதி பேருவளை, சீனன்கோட்டை முஹம்மத் இஸ்மாஈல் , ஷரீபா உம்மா தம்பதிகளுக்கு மகனாக நளீம் ஹாஜியார் பிறந்தார்.இளம்வயதில் தந்தையை இழந்த அவரது குடும்பத்தை தாய் தன்னந்தனியே சுமந்தார்.கல்விக்கு ஐந்தாம் வகுப்பில் முற்றுப்புள்ளி வைத்தார் நளீம். பால்ய பருவத்தில் அவர் கூலி வேலையும் செய்துள்ளார்.

மாணிக்கக்கல் வர்த்தகத்தின் மீது சிறுவயதிலேயே நளீமுக்கு ஈர்ப்பிருந்தது. தனது வாலிப வயதில் மாணிக்கக்கல் பட்டை தீட்டும் தொழிலில் ஈடுபட்டு பின்னர் மாணிக்க வியாபாரத்தில் ஈடுபட்டார். குறுகிய காலத்தில் மாணிக்கக்கல் வணிகத் துறையில் தனி இடத்தை அவரால் பெற்றுக் கொள்ள முடிந்தது. 1958 ஆம் ஆண்டு ஸித்தி ரபீகா எனும் பெண்மணியோடு திருமண வாழ்வில் இணைந்தார். தனது முதலாவது ஹஜ் பயணத்தை 1960 ஆம் ஆண்டு நிறைவேற்றினார்.

தான் சம்பாதிக்கின்ற செல்வத்தின் ஒரு பகுதியை ஏழை எளியவர்களுக்கு தர்மம் செய்வதை தனது கொள்கையாகக் கொண்டு செயற்பட்ட அவர் கொடை வள்ளலானார். இரத்தினக்கல் வணிகத்துறையில் 'இரத்தினக்கல் அரசன்' என்று அழைக்கப்பட்டார்.

அவரிடம் இயல்பாக இருந்த கொடைத் தன்மை, சமுதாயப் பற்று மற்றும் தேசப்பற்று ஆகிய குணாதிசயங்கள் அவரை ஒரு மகத்தான மனிதராக்கின.

இரத்தினக்கல் வர்த்தக வளர்ச்சிக்காக நளீம் ஹாஜியார் காத்திரமான பங்களிப்புகளை வழங்கியுள்ளார். 1970 ஆம் ஆண்டு இலங்கை இரத்தினக்கல் கூட்டுத்தாபனம் உருவாக்கப்பட்ட போது அரசாங்கம் அவரது ஆலோசனைகளை உள்வாங்கியதுடன் ஏற்றுமதிக்கான முதலாவது கல்லை அவர் வழங்கி வைத்தார். கூட்டுத்தாபனம் குறுகிய காலத்தில் பெருமளவு இலாபத்தை ஈட்ட அவரது ஆலோசனைகள் முக்கிய காரணமாக அமைந்தன.

1974 ஆம் ஆண்டளவில் இலங்கை பொருளாதார நெருக்கடி நிலைக்கு முகம் கொடுத்த போது, நளீம் ஹாஜியார் தேசத்துக்கு உதவினார். 15 இலட்சம் ரூபா பெறுமதியான தனது வெளிநாட்டு செலாவணியை அவர் தாய்நாட்டுக்கு அன்பளிப்பு செய்தார்.

அதே ஆண்டு டிசம்பரில் அவர் பாரிய சோதனையொன்றுக்கு முகம் கொடுத்தார். வெளிநாட்டுச் செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி 47 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். ஆனால் இறுதியில் அவர் நிரபராதி என்பது நிரூபிக்கப்பட்டு விடுதலையானார். அவருக்கான நியாயத்தை வேண்டி அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜே.ஆர் ஜெயவர்தன பாராளுமன்றத்தில் குரல்கொடுத்துப் பேசியிருந்தார்.

கல்வித்துறையில் அவரது பிரதான பங்களிப்புகளில் முதன்மையானதாக ஜாமிஆ நளீமிய்யா கலாபீடம் திகழ்கின்றது. நவீன யுகத்திற்குப் பொருத்தமான மார்க்க அறிஞர்களை உருவாக்கும் நோக்கில் இஸ்லாமிய அறிஞர்களது ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின்படி நளீம் ஹாஜியார் அவர்களால் ஜாமிஆ நளீமிய்யா கலாபீடம் 1973 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. குறுகிய காலத்தில் பாரிய வளர்ச்சி கண்ட அக்கலாபீடத்தில் கற்றுத் தேர்ந்த பட்டதாரிகள் தேசத்திற்கும் சமூகத்திற்கும் அறிவுசார் மற்றும் ஆன்மீக பங்களிப்புகளை வழங்குபவர்களாக பரிணமித்துள்ளனர். இன்று அக்கலாபீடம் நாட்டில் தனித்துவமான உயர் கல்வி நிறுவனமாக தலைநிமிர்ந்து நிற்கிறது.

அதே போன்று, இலங்கை முஸ்லிம்களின் பல்கலைக்கழக உயர் கல்விக்கு துணை புரியவென அவரால் 1981ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இலங்கை இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கம் அவரது இன்னுமொரு சாதனையாகும். நாடு தழுவிய ரீதியில் இவ்வியக்கம் நடாத்திய ஏராளமான வகுப்புக்களால் பயனடைந்து பல மாணவர்கள் பல்கலைக்கழக பிரவேசம் பெற்றனர்.

மறுமலர்ச்சி இயக்கத்தின் கல்விப் பணியின் மிக முக்கிய அடைவாக இக்ரஃ தொழில் நுட்பக் கல்லூரியின் தோற்றம் அமைந்திருந்தது.

முஸ்லிம்களுக்கு தமது பூர்வீக வரலாற்றை ஆதாரபூர்வமாக நிறுவும் வரலாற்று நூலொன்று காணப்படாத குறையை நிவர்த்தி செய்ய நளீம் ஹாஜியார் முன்வந்தார். 'இலங்கை முஸ்லிம்கள்-பூர்வீகப் பாரம்பரியத்திற்கான பாதைகள்' எனும் பெயரில் அந்நூல் 1986 ஆம் ஆண்டு அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தனவின் பங்கேற்புடன் வெளியிட்டு வைக்கப்பட்டது.

விளையாட்டுத் துறையின் வளர்ச்சியில் நளீம் ஹாஜியார் பரந்தளவில் பங்களிப்பு செய்துள்ளார்.

பேருவளையில் 'நளீம் ஹாஜியார் ஸ்டேடியம்' எனும் பிரமாண்டமான விளையாட்டரங்கை உருவாக்கியமை, சுகததாச உள்ளக அரங்கின் புனர்நிர்மாணத்திற்காக ஐந்து இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பண உதவிகள் வழங்கியமை,எஸ்.எஸ்.ஸி விளையாட்டரங்கின் அபிவிருத்திக்காக செய்த பண உதவிகள், 'பைரஹா பெவிலியன்' எனும் பார்வையாளர் அரங்கொன்றின் நிர்மாணம் ஆகியவற்றை அவரது பணிகளாக அடையாளப்படுத்தலாம்.

தேசிய மட்டத்தில் செய்த பொதுநலப் பணிகளில் 'சுசரித்த' கட்டட அன்பளிப்பைக் குறிப்பிடலாம். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச உள்ளூராட்சி அமைச்சராக இருந்த காலத்தில் இந்த நிகழ்வு நடந்தது.

நளீம் ஹாஜியார் செய்த பொதுப் பணிகள் விசாலமானவை. அதன் விளைவாக தேசிய மட்டத்தில் பல கௌரவப் பதவிகளும் பட்டங்களும் அவரைத் தேடி வந்த போதும் அவற்றை கண்ணியமான முறையில் புறக்கணித்தார்.

நளீம் ஹாஜியார் தனது அந்திம காலத்தில் சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறிது காலம் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2005 செப்டம்பர் 26ஆம் திகதி தனது 72 ஆவது வயதில் காலமானார்.

தாய்நாட்டை நேசிக்கும் தேசாபிமானியாக வாழ்ந்து இந்நாட்டுக்கு அளப்பரிய சேவையை ஆற்றிய அவரது நாமம் சரித்திரத்தில் என்றும் நிலைத்திருக்கும்.

 

(நளீம் ஹாஜியார் ஞாபகார்த்தப் பேருரை போரம் நடாத்திய ஆய்வுக் கட்டுரைப் போட்டியில் முதலிடம் பெற்ற கட்டுரையின் சுருக்கம்)

பாரிஜ் ஜாபிர்,
இஸ்லாமிய கற்கைகள் பீடம் ,
ஜாமிஆ நளீமிய்யா

 


Add new comment

Or log in with...