நாணயக்குற்றிகளை விநியோகிக்க மத்திய வங்கியில் புதிய கருமபீடம் | தினகரன்

நாணயக்குற்றிகளை விநியோகிக்க மத்திய வங்கியில் புதிய கருமபீடம்

பொதுமக்களுக்குத் தேவையான நாணயக் குற்றிகளைப் பரிமாற்றம் செய்வதற்காக, இலங்கை மத்திய வங்கியின் தலைமைக் கிளையில் நாளை (27) புதிய பிரிவொன்று திறந்து வைக்கப்படவுள்ளது. 

இல. 30, ஜனாதிபதி மாவத்தை, கொழும்பு -1 எனும் முகவரியில்  அமைந்துள்ள மத்திய வங்கியிலேயே, இப்பிரிவு திறந்து வைக்கப்படவுள்ளது. இதற்கமைய பொது மற்றும் வங்கி விடுமுறை நாட்கள் தவிர்ந்த, புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் காலை 9.00 மணி முதல் முற்பகல் 11.00 மணிவரை பொதுமக்களின் நலன் கருதி இப்பிரிவு  திறந்திருக்கும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.

ஒரு ரூபா, இரண்டு ரூபா, ஐந்து ரூபா, பத்து ரூபா ஆகிய நாணயக்குற்றிகள் விநியோகிக்கப்படும்  என்பதோடு, அவை 100 நாணயக்குற்றிகளைக் கொண்ட பொதிகளாக விநியோகிக்கப்படவுள்ளன. அதிகபட்சமாக 20,000 ரூபா வரை நாணயக்குற்றிகளை மாற்றிப் பெற்றுக்கொள்ள முடியும். 

நாணயக்குற்றிகளை மொத்தமாகப் பெற்றுக்கொள்ள விரும்பும் தனிப்பட்ட நபரோ அல்லது நிறுவனங்களோ, இரு வேலைநாட்களுக்கு முன்னர் நாணயக்குற்றி விநியோகம் தொடர்பான அத்தியட்சகருக்கு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மேலும், இது தொடர்பான விண்ணப்படிவங்கள் மற்றும் அறிவுறுத்தல் படிவங்களை காசாளர் கருமபீடத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என்பதோடு, தரவுகளை மத்திய வங்கியின்  www.cbsl.gov.lk எனும் முகவரி ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் எனவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...