திருமலை துறைமுகத்தின் ஏற்றுமதிப் பணியால் இளைஞர், யுவதிகளுக்குத் தொழில்வாய்ப்பு | தினகரன்

திருமலை துறைமுகத்தின் ஏற்றுமதிப் பணியால் இளைஞர், யுவதிகளுக்குத் தொழில்வாய்ப்பு

கொழும்பு துறைமுகத்தில் முன்னெடுக்கப்படும் ஏற்றுமதிகளின் ஒரு பகுதியை திருகோணமலை துறைமுகத்துக்கு கொண்டு செல்வதன் மூலம் அங்குள்ள இளைஞர்கள், யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பை பெற்றுக் கொடுக்கவுள்ளோமென துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.  திருகோணமலை துறைமுகம் இயற்கையானது. இதன் நிர்மாணப்பணிகளுக்காக எவ்வித செலவும் செய்யப்படவில்லை.

இத்துறைமுகத்தை மேலும் அபிவிருத்தி செய்து கொழும்பு துறைமுகத்தின் ஏற்றுமதியின் ஒருபகுதியை அங்கே முன்னெடுப்பதன் மூலம் அப்பகுதியையும் அங்குள்ள மக்களையும் முன்னேற்ற திட்டம் தீட்டப்பட்டுள்ளதென்றும் அவர் கூறினார்.   பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு,துறைமுகங்கள்,கப்பல்துறை அலுவல்கள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கூறியதாவது-  ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்காக அரசாங்கம் பாரிய திட்டங்களை வகுத்துள்ளது. எனினும், எதிர்க்கட்சியினர், அரசாங்கம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்ததாகவே கூறுகின்றனர். கொழும்பு துறைமுகத்தின் வருமானத்திலிருந்தே ஹம்பாந்தோட்டைக்கான செலவினம் ஆரம்பத்தில் ஈடுசெய்யப்பட்டது.செலவினங்களை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே அரசாங்கம் ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளனர்.  காலி துறைமுகம் சுற்றுலாத்துறை மற்றும் வர்த்தக ரீதியில் பாரிய முன்னேற்றம் கண்டுள்ளதுடன் இது கடந்த வருடத்திலும் பார்க்க 20சதவீத அதிகரிப்பாகும். காலி துறைமுகத்திலிருந்து 2018ஆம் ஆண்டில் 70மில்லியன் கொள்கலன்கள் ஏற்றி இறக்கப்பட்டுள்ளன.இது 2017ஆம் ஆண்டிலும் பார்க்க 09இலட்ச அதிகரிப்பைக் காட்டுகின்றது என்றும் தெரிவித்தார்.   

(லக்ஷ்மி பரசுராமன், மகேஸ்வரன் பிரசாத்)


Add new comment

Or log in with...