அதிகரித்துள்ள வாகன நெரிசலால் நாளொன்றுக்கு 10 மில். வீண்விரயம் | தினகரன்

அதிகரித்துள்ள வாகன நெரிசலால் நாளொன்றுக்கு 10 மில். வீண்விரயம்

அதிகரித்துள்ள வாகன நெரிசல் காரணமாக நாளொன்றுக்கு 10 மில்லியன் ரூபாய் வீண்விரயமாக்கப்படுகின்றன. இது வீதி அபிவிருத்திக்கு ஒதுக்கப்படும் நிதியைவிட அதிகமானது என பெருநகரங்கள் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

அதிகரித்துள்ள வாகன நெரிசல்களால் எரிபொருள் மற்றும் வேலைமணித்தியாலங்கள் என 10 மில்லியன் ரூபாய்கள் வீண்விரயமாகவதாக மொரட்டுவை பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் அமைச்சு மற்றும் துறைமுகங்கள், கப்பற்துறை அலுவல்கள், தெற்கு அபிவிருத்தி அமைச்சு ஆகியவை மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் சம்பிக்க ரணவக்க இதனைத் தெரிவித்தார்.

இலங்கையில் பொதுப் போக்குவரத்துக்குக்குப் பயன்படுத்தப்படும் பஸ்கள் லொறிகளுக்கான அடிப்பாகத்தைக் கொண்டவையே. இதனால் பயணிகள் சிரமங்களுக்கு முகங்கொடுக்கவேண்டியுள்ளது.

எனவே சிறந்த பயண அனுபவத்தை வழங்கும் வகையில் உயரம் குறைந்த பயணிகள் பஸ்கள் பயன்படுத்தப்பட வேண்டும். பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதை விட தனிப்பட்ட வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

இலங்கையின் சனத்தொகையுடன் ஒப்பிடுகையில் 1970களில் ஒட்டு மொத்தமாக 50 ஆயிரம் மோட்டார் வாகனங்களே காணப்பட்டன. எனினும் தற்பொழுது நாட்டில் 7 மில்லியன் வாகனங்கள் உள்ளன. 220 இலட்சம்போரைக் கொண்ட சனத்தெகையில் 7 மில்லியன் வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. வாகன நெரிசல்களால் 10 மில்லியன் ரூபாய் வீண் விரயமாகின்றது. கொழும்பில் மணித்தியாலத்துக்கு 30 கிலோமீற்றர் வேகத்தில் வாகனம் பயணிக்க வேண்டுமாயின் தற்பொழுது உள்ள வீதிக் கட்டமைப்பைவிட மூன்று மடங்கு விஸ்தரிக்கப்பட்ட வீதிக் கட்டமைப்பொன்று தேவை என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

லக்ஷ்மி பரசுராமன், மகேஸ்வரன் பிரசாத்


Add new comment

Or log in with...