போதைப்பொருள் சுற்றி வளைப்புகள் ஏப்ரல் 03 முதல் மேலும் தீவிரமாகும் | தினகரன்

போதைப்பொருள் சுற்றி வளைப்புகள் ஏப்ரல் 03 முதல் மேலும் தீவிரமாகும்

முப்படையினரும் பொலிஸாரும் களமிறக்கம் பொலன்னறுவையில் ஜனாதிபதி தெரிவிப்பு

கொழும்பு நகரிலும் கரையோரப் பிரதேசங்களை அண்டிய பகுதிகளிலும் போதைப்பொருள் சுற்றி வளைப்பு நடவடிக்கைகளை ஏப்ரல் 03ஆம் திகதி முதல் மேலும் விரிவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

முப்படையினரும் பொலிஸாரும் இணைந்து மிகவும் பலமான முறையில் இந்த சுற்றி வளைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

ஹிங்குரக்கொட ஆனந்த மகளிர் கல்லூரியின் புதிய நீச்சல் தடாகத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று (25) முற்பகல் இடம்பெற்றது.இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

மாவட்டத்தில் உள்ள பாடசாலை பிள்ளைகளின் விளையாட்டுத்துறையை மேம்படுத்தும் நோக்குடன் “எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 450 இலட்சம் ரூபா செலவில் இந் நீச்சல் தடாகம் இக்கல்லூரிக்கு வழங்கப்பட்டுள்ளது. நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து நீச்சல் தடாகத்தை மாணவர்களிடம் கையளித்த ஜனாதிபதி , மாணவர்களின் நிகழ்ச்சிகளையும் பார்வையிட்டார். வட மத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க உள்ளிட்ட அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதேநேரம் “எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 600 இலட்சம் ரூபா செலவில் மின்னேரிய தேசிய பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய வகுப்பறை கட்டடத்தையும் கேட்போர் கூடத்தையும் ஜனாதிபதி நேற்று மாணவர்களிடம் கையளித்தார்.

பாடசாலைக்குச் சென்ற ஜனாதிபதி மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

நினைவுப் பலகையைத் திரைநீக்கம் செய்து மூன்று மாடி வகுப்பறை கட்டடத்தையும் கேட்போர் கூடத்தையும் மாணவர்களிடம் கையளித்த ஜனாதிபதி, அதனைப் பார்வையிட்டார்.

இதேநேரம், பாடசாலையின் குறைபாடுகள் தொடர்பாக மாணவர்கள் முன்வைத்த கோரிக்கையின் பேரில் பாடசாலைக்கு நீர் சுத்திகரிப்பு தொகுதி ஒன்றையும் பேன்ட் வாத்திய குழுவினருக்குத் தேவையான சீருடைகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளையும் எதிர்வரும் இரண்டு வாரங்களில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது உறுதியளித்தார்.

பிரதேசத்தில் வீடுகளற்ற சில குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள வீட்டு உறுதிப் பத்திரங்களையும் ஜனாதிபதி இதன்போது வழங்கி வைத்தார். அதிபர் ஈ.எம்.சுவர்ணா குமாரி உள்ளிட்ட ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்

ஹிங்குரக்கொட கல்வி வலயத்தில் அலுத்ஓய கனிஷ்ட பாடசாலையின் புதிய வகுப்பறை கட்டடம் ஜனாதிபதியினால் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது. இப்பாடசாலைக்கு சென்ற ஜனாதிபதியை மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து புதிய வகுப்பறை கட்டடத்தை மாணவர்களிடம் கையளித்த ஜனாதிபதி, பாடசாலையின் ஏனைய குறைபாடுகள் பற்றியும் கேட்டறிந்தார்.

பிரதேசத்தில் உள்ள மக்களின் பிரச்சினைகள் குறித்தும் ஜனாதிபதி இதன்போது கவனம் செலுத்தினார்.

இதேநேரம் அலுத்ஓய கல்லூரிக்கு முன்னால் நிர்மாணிக்கப்பட்டுள்ள அலுத்ஓய மினிகிரிகம சுதேச உணவகம் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது.


Add new comment

Or log in with...