பணிப்பெண்களின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும்! | தினகரன்

பணிப்பெண்களின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும்!

வெளிநாடுகளில் தொழில் புரிகின்ற இலங்கையர்கள் மூலமே எமது நாடு இப்போது கூடுதலான அந்நிய செலாவணியை ஈட்டிக் கொண்டிருக்கிறது.

முன்னரெல்லாம் உள்நாட்டு உற்பத்தித் துறை மூலம் எமது நாடு கூடுதல் வருமானம் ஈட்டி வந்தது. ஆனால் இலங்கையின் உள்நாட்டு உற்பத்தித் துறையானது காலப்போக்கில் படிப்படியாக வீழ்ச்சியடையத் தொடங்கியது. உள்நாட்டு உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி மூலம் கிடைத்த அந்நிய செலாவணி வீழ்ச்சியடைந்தது. அதேசமயம் வெளிநாட்டில் தொழில் புரிகின்ற இலங்கையர்கள் ஊடாகக் கிடைக்கின்ற வருமானம் அதிகரிக்கத் தொடங்கியது.

வெளிநாடுகளில் தொழில் புரிகின்ற இலங்கையர்கள் எனக் கூறுகின்ற போது, மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரிபவர்களே பிரதானமாகக் குறிப்பிட வேண்டியவர்களாவர். மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரிகின்ற இலங்கையர்களின் எண்ணிக்கை சுமார் பத்து இலட்சம்.

பணிப்பெண்கள், சாரதிகள், இயந்திர இயக்குநர்கள், கட்டடத் தொழிலாளர்கள் என்றெல்லாம் பல்வேறு தொழில்களிலும் இவர்கள் ஈடுபடுகின்றனர். மத்திய கிழக்கு நாடுகளில் தொழில்புரிகின்ற இலங்கையர்களில் பெண்களே அதிகமானவர்களாவர்.

எமது நாட்டுக்கு அதிக வருமானத்தை ஈட்டித் தருகின்ற மேற்படி தொழிலாளர்கள் உண்மையிலேயே இலங்கையின் நன்றிக்குரியவர்களாவர். அவர்களது தொழில் மற்றும் பாதுகாப்பு போன்றவை உத்தரவாதமுடையதாக பேணப்படுதல் வேண்டும். அவர்கள் அந்நாடுகளில் கௌரவமாக தொழில் புரிகின்ற நிலைமையும் இருக்க வேண்டும். இவற்றையெல்லாம் கவனமாக மேற்கொள்வது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அவர்கள் நிம்மதியுடனும் மனநிறைவுடனும் அந்நாடுகளில் தொழில் புரிகின்ற சூழல் நிலவ வேண்டும்.

ஆனால் மத்திய கிழக்கு நாடுகளில் எமது நாட்டு மக்கள் உண்மையிலேயே திருப்தியுடன் தொழில் புரிகின்றனரா என்ற வினாவுக்கு மகிழ்ச்சியான பதிலைக் காண முடியாதிருக்கிறது.

மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரிவோர் தொடர்பாக எமக்குக் கிடைக்கின்ற செய்திகள் கவலை தருகின்றன. அவர்கள் அங்கு நடத்தப்படுகின்ற விதம் வேதனை தருகின்றது. இவ்விடயத்தில் பிரதானமாகக் குறிப்பிடப்பட வேண்டியவர்கள் எமது நாட்டின் பணிப்பெண்களாவர்.

குடும்ப வறுமை காரணமாக, பணமீட்ட வேண்டுமென்ற ஒரேயொரு நோக்கத்தில் தமது குடும்பத்தினரைப் பிரிந்த நிலையில் ஏராளமான பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக தொழிலுக்குச் சென்றுள்ளனர். குடும்பத் தலைவிகள் வெளிநாடு செல்வதால் அக்குடும்பத்துக்கு ஏற்படுகின்ற பாதிப்புகளும், எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளும் ஏராளம். இப்பெண்களின் பிள்ளைகள் தாயன்பு கிடைக்காமலும், உரிய பராமரிப்பு இன்றியும் பாதிக்கப்படுகின்றனர். அதேசமயம் இப்பிள்ளைகளைப் பாதுகாப்பாகப் பேணி வளர்ப்பதற்குப் பொருத்தமான உறவினர்கள் கிடைக்காத நிலையில் அப்பிள்ளைகளின் வாழ்க்கையே பாழாகிப் போகின்றது.

இப்பிள்ளைகள் உறவினர்களால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகும் சம்பவங்களும் ஆங்காங்கே இடம்பெற்று வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவருகின்றன. வெளிநாட்டுத் தொழில்வாய்ப்பை நாடி பெண்கள் செல்வதனால் சமூகத்தில் பெரும் சீர்கேடு ஏற்படுகின்றது. இதுபற்றி சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குரலெழுப்பி வருகின்ற போதிலும், பணிப்பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்வது குறைந்தபாடாக இல்லை. இதற்கான ஒரேயொரு காரணம் குடும்ப வறுமை!

அன்றாட ஜீவனோபாயத்துக்கு வேறு தொழில் மார்க்கங்கள் இல்லாத நிலையிலேயே இப்பெண்கள் மத்திய கிழக்குக்கு பணிப்பெண் வேலையை நாடிச் செல்கின்றனர்.

இலங்கைப் பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாகச் செல்ல வேண்டுமென்பது அரசாங்கத்தின் கொள்கை அல்ல! பெண்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் செல்வதை அரசாங்கம் ஒருபோதுமே ஊக்குவித்தது கிடையாது.

ஆனால் வெளிநாட்டுத் தொழில் வாய்ப்புக்காக பெண்கள் செல்வதைத் தடுத்து நிறுத்துவதற்கான சட்ட ஏற்பாடுகள் இலங்கையில் இல்லை. குடும்ப வறுமைக்கு எதிராகப் போராடுகின்றவர்களின் முயற்சியை எவ்வாறுதான் தடுத்து நிறுத்த முடியும்?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமீபத்தில் நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போது இது தொடர்பான கருத்தொன்றை வெளியிட்டிருந்ததையும் இவ்விடத்தில் சுட்டிக்காட்டுவது பொருத்தமாகும்.

இலங்கைப் பெண்கள் பணிப்பெண்களாக வெளிநாடுகளுக்குச் செல்வதில் தனிப்பட்ட முறையில் தனக்கு உடன்பாடு இல்லையென குறிப்பிட்டிருந்தார் ஜனாதிபதி.

மத்திய கிழக்கு நாடுகளில் உடல் உள ரீதியாக சித்திரவதைக்கு உள்ளாகி சில பெண்கள் தாயகம் வந்து சேருகின்ற பரிதாபக் கோலத்தைப் பார்க்கின்ற போது, எமது நாட்டுப் பெண்கள் அந்நாடுகளில் தொழில் புரிவது ஆபத்தான காரியமென்பது நன்றாகவே புரிகின்றது.

ஆனாலும் எமது பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாகச் செல்வது தடுக்கப்பட வேண்டுமென்று எழுந்தமானமாக கருத்துத் தெரிவிப்பதனால் மாத்திரம் எதுவித பலனும் ஏற்பட்டு விடப் போவதில்லை. இதற்காக மாற்று ஏற்பாடுகளாக முதலில் விரிவான வேலைத்திட்டங்களை வகுத்து செயற்படுத்த வேண்டும். அவ்வாறான திட்டங்களின் வெற்றியின் பின்னரே எமது நாட்டுப் பெண்கள் பணிப்பெண்களாக வேலைக்குச் செல்வது படிப்படியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும்.

இலங்கை வளமற்றதொரு நாடு அல்ல. உலகில் அனைத்து வளங்களும் நிறைந்ததொரு நாடென்று இலங்கை போற்றப்படுகின்றது. பல்வேறு தொழில்துறைகளை மேற்கொள்வதற்கான இயற்கை வளங்கள் நிறைந்த நாடாக இலங்கை விளங்குகின்றது. விவசாயம் சார்ந்த நேரடி, மறைமுக தொழில்துறைகள், ஆடையுற்பத்தி, கைத்தொழில் துறை என்றெல்லாம் ஏராளமான தொழில்துறைகள் எமது நாட்டுக்குள் மறைந்து கிடக்கின்றன.

ஆனால் இலங்கையின் கடந்தகால அரசாங்கங்கள் எதுவுமே உள்நாட்டு தொழில் முயற்சிகளைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டதில்லை. அரசாங்கங்களின் அலட்சியம் காரணமாக நாட்டின் சிறந்த தொழில்துறைகள் கூட வீழ்ச்சியடைந்து போய்விட்டன என்பதே உண்மை.

உள்நாட்டு தொழிற்சாலைகள் முடங்கிப் போனதால் முற்றாகவே இல்லாமல் போன தொழில்துறைகள் ஏராளம்.

இவ்வாறு தொழில் முயற்சிகள் மங்கிப் போனதன் காரணமாகவே எமது நாட்டுப் பெண்கள் மத்திய கிழக்கை நாட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டது எனலாம். இலங்கைப் பெண்கள் பணிப்பெண் வேலைவாய்ப்புக்குச் சென்று துன்பப்படுவது நிறுத்தப்பட வேண்டுமானால் உள்நாட்டுத் தொழில்வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும். இல்லையேல், ‘பணிப்பெண் அவலம்’ என்பது தொடர்கதையாகவே தொடரப் போகின்றது.


Add new comment

Or log in with...