இராணுவ சதிப்புரட்சிக்கு பின்னர் தாய்லாந்து மக்கள் வாக்களிப்பு | தினகரன்

இராணுவ சதிப்புரட்சிக்கு பின்னர் தாய்லாந்து மக்கள் வாக்களிப்பு

தாய்லாந்தில் 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற இராணுவ சதிப்புரட்சிக்குப் பின்னர் இடம்பெறும் பொதுத் தேர்தலில் மக்கள் நேற்று வாக்களித்தனர்.

இராணுவத்திற்கு ஆதரவானவர்கள் மற்றும் பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவாத்ரா ஆதரவாளர்களிடையே நீடித்த மோதல் காரணமாக தாய்லாந்தில் கடந்த பல ஆண்டுகளில் அரசியல் ஸ்திரமற்ற சூழல் நீடித்து வந்தது.

ஆட்சியை கைப்பற்றிய இராணுவம் நாட்டில் மீண்டும் ஜனநாயகத்தை கொண்டுவருவதாக வாக்குறுதி அளித்தபோதும் தேர்தல் தொடர்ச்சியாக பிற்போடப்பட்டு வந்தது.

எனினும் இராணுவம் அறிமுகப்படுத்தியிருக்கும் அரசியல் அமைப்பு மூலம் தேர்தல் முடிவு எவ்வாறாயினும் இராணுவத்தின் செல்வாக்கு நீடிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். 2011 ஆம் ஆண்டுக்கு பின்னர் இடம்பெறும் முதலாவது தேர்தல் என்பதால் வாக்காளர் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டதாக அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.

தாய்லாந்து வாக்காளர்கள் நாட்டை ஆள்வதற்கு நல்லவர்களைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்று மன்னர் மகா வஜ்ரலொங்கோன் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதேவேளையில் நாட்டிற்குள் குழப்பம் விளைவிக்கவும் இடையூறு செய்யவும் முனையும் தீயவர்கள் கைகளில் அதிகாரம் இல்லாமலிருப்பதை வாக்காளர்கள் உறுதிசெய்யவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இராணுவம் ஆதரவு கட்சிகள் மற்றும் தக்சின் கூட்டணிகளிடையே இந்த தேர்தலில் கடும் போட்டி நிலவுகிறது. 2006 இராணுவா சதிப்புரட்சி மூலம் பதவி கவிழ்க்கப்பட்ட பின் நாட்டில் இருந்து வெளியேறி வாழும் தக்சினுக்கு கிராமப் பகுதிகளில் அதிக மக்கள் ஆதரவு உள்ளது.

தக்சின் ஆதரவாளர்கள் 2001க்கு பின்னர் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.


Add new comment

Or log in with...