இஸ்லாமிய அரசு குழுவின் ‘கலீபத்’ முற்றாக வீழ்ந்தது | தினகரன்

இஸ்லாமிய அரசு குழுவின் ‘கலீபத்’ முற்றாக வீழ்ந்தது

சிரியாவின் பாகூஸ் கிராமத்தில் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) கட்டுப்பாட்டில் இருந்த கடைசி நிலப்பகுதியில் இருந்தும் அந்தக் குழு தோற்கடிக்கப்பட்டதாக அமெரிக்க ஆதரவு சிரிய ஜனநாயகப் படை அறிவித்துள்ளது.

இதன்மூலம் ஒரு தருணத்தில் ஈராக் மற்றும் சிரியா எங்கும் பரவி இருந்த ஐ.எஸ் குழு தன்னிச்சையாக அறிவித்த கலீபத் பேரரசு முடிவுக்கு வந்துள்ளது. “கலீபத் பிரதேசம் முழுமையாக முடிவுக்கு வந்ததை சிரிய ஜனநாயகப் படை பிரகடனம் செய்வதாக அந்த படையின் ஊடக அதிகாரியான முஸ்தபா பாலி குறிப்பிட்டுள்ளார்.

“பாகூஸ் விடுவிக்கப்பட்டுவிட்டது. ஐ.எஸ்ஸுக்கு எதிராக இராணுவ வெற்றி பூர்த்தியாகிவிட்டது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈராக் எல்லையை ஒட்டி இருக்கும் இந்த பாகூஸ் கிராமத்தை கைப்பற்ற குர்திஷ் தலைமையிலான சிரிய ஜனநாயகப் படை கடந்த பல வாரங்களாக போராடியது.

அப்பகுதியில் அதிக அளவிலான பொதுமக்கள் இருந்ததினால் தாக்குதல் தடைபட்டது. அங்கிருந்து ஆயிரக்கணக்கான பெண்களும், குழந்தைகளும், வெளிநாட்டினரும் இந்த சண்டையில் இருந்து தப்பித்து சிரிய ஜனநாயக படைகளின் இடம்பெயர்ந்தோருக்கான முகாம்களுக்கு சென்றனர்.

பல ஐ.எஸ் அமைப்பினரும் பாகூஸ் கிராமத்தை விட்டுச் சென்றனர். ஆனால், அங்கேயே தங்கியிருந்தவர்கள் தற்கொலை தாக்குதல்கள் மற்றும் கார் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தினார்கள்.

இந்த வெற்றியை கொடிகளை உயர்த்தி போராளிகள் கொண்டாடி வருகின்றனர்.

தனது பிராந்தியத்தை அந்த அமைப்பு இழந்து வந்தாலும், இக்குழு சர்வதேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவே பார்க்கப்படுகிறது.

எனினும், நைஜீரியா, யெமன், ஆப்கானிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற பல நாடுகளில் ஐ.எஸ் அமைப்பு தனது இருப்பை தக்கவைத்துள்ளது.


Add new comment

Or log in with...