ஐ.பி.எல் ஆரம்ப போட்டியில் சென்னை அதிரடி வெற்றி | தினகரன்

ஐ.பி.எல் ஆரம்ப போட்டியில் சென்னை அதிரடி வெற்றி

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் பெங்களுர் ரோயல் சலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஆரம்பப் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் ஏழு விக்கெட்டுகளால் அதிரடி வெற்றியை பெற்றது.

சென்னை சிதம்பரம் அரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பொடுத்தாடிய பெங்களுர் அணி 70 ஓட்டங்களுக்கு சுருண்டது. சென்னை அணி 14 பந்துகளை மிச்சம் வைத்து இலக்கை அடைந்தது.

எனினும் இந்த ஆடுகளம் குறித்து அதிருப்தி வெளியிட்ட சென்னை அணித்தலைவர் மஹேந்திரா சிங் தோனி, “ஆடுகளம் சிறந்ததாக இருந்திருக்க வேண்டும்” என்றார்.

பெங்களுர் சார்பில் பார்திவ் படேல் அதிகட்சமாக 29 ஓட்டங்களை பெற்றதோடு, அந்த அணித் தலைவர் விராட் கொஹ்லி, இங்கிலாந்தின் மெயீன் அலி மற்றும் முன்னாள் தென்னாபிரிக்க நட்சத்திரம் ஏ.பி. டிவிலியர்ஸ் ஆகியோர் உட்பட ஏனையவர்கள் ஒற்றை இலக்கத்துடன் வெளியேறினர்.

சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் சென்னை அணி சார்பில் ஹர்பஜன் சிங் மற்றும் இம்ரான் தாஹிர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

முன்னாள் அவுஸ்திரேலிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷேன் வொட்ஸன் 10 பந்துகளுக்கு முகம்கொடுத்து டக் அவுட் ஆனபோதும் சென்னை அணி சார்பில் 19 ஓட்டங்களை பெற்ற சுரேஷ் ரெய்னா ஐ.பி.எல் போட்டிகளில் 5,000 ஓட்டங்களை பெற்ற முதல் வீரராக சாதனை படைத்தார்.


Add new comment

Or log in with...