இங்கிலாந்துடனான முதல் டி20: இலங்கை மகளிர் அணி தோல்வி | தினகரன்


இங்கிலாந்துடனான முதல் டி20: இலங்கை மகளிர் அணி தோல்வி

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி, நேற்று நடைபெற்ற இலங்கை மகளிர் அணியுடனான முதலாவது டி-20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இலகு வெற்றியை பெற்றது.

இங்கிலாந்துடனான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை முழுமையாக தோற்ற நிலையிலேயே சாமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை மகளிர் அணி 3 போட்டிகளைக் கொண்ட டி-20 தொடரில் களமிறங்கியது.

கொழும்பு பி. சரவணமுத்து மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணித் தலைவி சாமரி அத்தபத்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தார்.

இதன்படி, களமிறங்கிய இலங்கை மகளிர் அணி எதிரணியின் பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் 19 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 94 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

இலங்கை மகளிர் தரப்பில் துடுப்பாட்டத்தில் அதிகபட்ச ஓட்டங்களை ஓசதி ரணசிங்க 20 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது பெற்றுக்கொள்ள, ஹன்சிமா கருணாரத்ன 19 ஓட்டங்களை குவித்திருந்தார்.

இதேநேரம், இங்கிலாந்து மகளிர் அணியின் பந்துவீச்சு சார்பாக லின்சி ஸ்மித் 18 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும், ஆன்யா, ப்ரெயா டேவிஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதமும் கைப்பற்றியிருந்தனர்.

பின்னர், போட்டியின் வெற்றி இலக்கான 95 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி, வெற்றி இலக்கினை வெறும் 14.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 95 ஓட்டங்களுடன் அடைந்தது.

இங்கிலாந்து மகளிர் அணியின் துடுப்பாட்டத்தில் இறுதிவரை ஆட்டமிழக்காது இருந்து அவ்வணியை வெற்றிப்பாதையில் வழிநடாத்திச் சென்ற ஆரம்பத் துடுப்பாட்ட வீராங்கனையான டாமி பூமுண்ட் 50 ஓட்டங்களைப் பெற்று வலுச்சேர்த்தார்.

இலங்கை – இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி-20 போட்டி நாளை இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது.


Add new comment

Or log in with...