சுற்றுலா அதிகார சபையினால் ஒரே நாளில் அனுமதிப்பத்திரம் | தினகரன்

சுற்றுலா அதிகார சபையினால் ஒரே நாளில் அனுமதிப்பத்திரம்

சுற்றுலா அதிகார சபையினால் ஒரே நாளில் அனுமதிப்பத்திரம்-SLTDA promises to issue renewal licenses in one day

தங்குமிட மற்றும் சேவை வழங்குனர்களுக்கான புதுப்பித்தல் அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கையை ​​ஒரே நாளில் வழங்கவுள்ளதாக, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) அறிவித்துள்ளது.

இது தொடர்பில் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த சேவைகள் தொடர்பில், ஒவ்வொரு பிரிவிற்குமான விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமிடத்து, அது தொடர்பிலான நடவடிக்கை எடுக்கப்படும் என சபை அறிவித்துள்ளது.

மிக விரைவான சேவையை வழங்குவதன் அடிப்படையில், இது தொடர்பில் பங்குதாரர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும் வகையில், அடுத்த வாரம் அளவில், மும்மொழியிலுமான விளம்பரங்களை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு பிரிவிலும் பதிவு செய்வதற்கு அவசியமான ஆவணங்கள், அனுமதிப்பத்திரங்கள், புதுப்பித்தல் உள்ளிட்ட விடயங்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேவை வழங்குநர்களை திருப்திப்படுத்தும் வகையில், SLTDA ஆனது புதிய பதிவுகள், அனுமதிப்பத்திரம் வழங்கல் மற்றும் புதுப்பித்தல்களை மிக விரைவாக வழங்குவதை நோக்காகக் கொண்டு இச்செயற்பாட்டை மேற்கொண்டுள்ளதாக, சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) தலைவர் கிஷூ கோமஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மிகத் திறனான செயற்பாட்டுக்காக, தங்களது மனித வளத்தையும் வலுப்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பயனர்கள் இவ்விடயங்களை பயன்படுத்துவதற்கு இலகுவான வகையில், இதற்கென, கணனி மென்பொருள் கட்டமைப்பு சீரமைக்கப்பட்டு வருவதாக கிஷூ கோமஸ், மேலும் தெரிவித்தார்.

அதற்கமைய, ஒவ்வொரு பிரிவிற்கும் அவசியமான ஆவணங்களை www.sltda.lk/online-tourism-business-licensing-services எனும் தளத்தில் பார்வையிடலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...