40 வருட நிறைவை கொண்டாடிய பிறிமா | தினகரன்

40 வருட நிறைவை கொண்டாடிய பிறிமா

- நான்கு தசாப்தங்களில் 240 மில்லியன் டொலர் முதலீடு 

- உணவுத்துறை புத்தாக்கங்களை கௌரவிக்க விசேட திட்டம்

1977ஆம் ஆண்டு இலங்கையில் தனது செயற்பாடுகளை ஆரம்பித்திருந்த பிறிமா குழுமத்தின் 40 வருட நிறைவுக் கொண்டாட்டம் அண்மையில் இடம்பெற்றது. திருகோணமலையில் அமைந்துள்ள பிறிமாவின் அதிநவீன மா ஆலைத் தொகுதியில் நடைபெற்ற நிகழ்வுகளில் விசேட அறிவிப்புக்களும் வெளியிடப்பட்டன. இலங்கை பட்டதாரிகளுக்கு சிங்கப்பூரின் முகாமைத்துவ பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை தொடர்வதற்கு 2 மில்லியன் சிங்கப்பூர் டொலர்கள் மதிப்பிலான புலமைப்பரிசில் திட்டம் வழங்கப்படவுள்ளது. இந்நிதியத்துக்கு மேலும் சிங்கப்பூர் அரசாங்கத்தினால் 1 மில்லியன் சிங்கப்பூர் டொலர்கள் உதவியாக வழங்கப்பட்டுள்ளதுடன், மொத்த புலமைப்பரிசில் தொகை 3 மில்லியன் சிங்கப்பூர் டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

முதலாவது வெளிநாட்டு முதலீடாக ஆரம்பிக்கப்பட்ட பிறிமா சிலோன் நிறுவனத்தின் தற்போதைய முதலீடு 240 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அமைந்துள்ளது. இந்த ஆண்டு சிங்கப்பூர் - இலங்கை இடையிலான ஒன்றிணைவின் 40 வருட பூர்த்தியை குறிப்பதுடன், இலங்கையில் 40 வருட வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் நாட்டு மக்களுடன் பிறிமா முன்நோக்கி பயணிக்கின்றமை மகிழ்ச்சியளிப்பதாக பிறிமா குழுமத்தின் தலைமை அதிகாரியும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான பிறிமஸ் செங் தெரிவித்தார்.  

நான்கு தசாப்த காலமாக, இலங்கையின் உணவு பாதுகாப்பு, வெளிநாட்டு இருப்புகள், தொழில் வாய்ப்புகள், உள்நாட்டு வெதுப்பக துறை மற்றும் தொடர்புடைய துறைகள் போன்றவற்றை மேம்படுத்துவதற்கு பிறிமா முக்கிய பங்களிப்பை வழங்கிவருகிறது.

40 வருட பூர்த்தியை குறிக்கும் வகையில் நாட்டின் உணவுத் துறையைச் சேர்ந்த வெற்றிகரமாக இயங்கும் இலங்கையர்களை தெரிவு செய்து அவர்களின் புத்தாக்கமான செயற்பாடுகளை கௌரவிக்கும் திட்டமொன்றையும் அறிமுகம் செய்யவுள்ளது. இதனூடாக எதிர்கால தொழில்முயற்சியாளர்கள் மற்றும் வியாபாரங்களை ஊக்குவித்து, நாட்டின் வெதுப்பகம் மற்றும் கோதுமை மா அடிப்படையிலான தொழிற்துறைகளின் தரங்களை உயர்த்தக்கூடியதாக இருக்கும் என்பது பிறிமாவின் எதிர்பார்ப்பாகும்.  

‘உங்கள் முன்னேற்றம் எமது பெருமை’ எனும் தலைப்பில் இடம்பெறும் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், இதில் கடந்த 40 வருட காலத்தில் வியாபார நடவடிக்கைகளை கட்டியெழுப்பிய, தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திய, உள்நாட்டு பொருளாதாரத்துக்கு பங்களிப்பு வழங்கிய, உள்நாட்டு சமூகங்களுக்கு உதவிகளை வழங்கும், துறைக்கு புத்தாக்கங்களை சேர்க்கும் உள்நாட்டு தொழில்முயற்சியாளர்கள் உள்வாங்கப்படவுள்ளனர். நாட்டின் புகழ்பாடாத துறைசார் நிபுணர்களின் வாழ்க்கை சரிதம், முயற்சிகள், கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் வெற்றிகரமான பயணம் போன்ற விடயங்கள் அடங்கலாக கதைகள் பகிர்ந்து கொள்ளப்படும். 

இந்த மைல்கல் தொடர்பாக பிறிமா குரூப், பொது முகாமையாளர் டான் பெங்க் சுவான் கருத்துத் தெரிவிக்கையில், “கோதுமை மா உற்பத்தியாளர் என்பதற்கு அப்பால் சென்று இலங்கைக்கு எவ்வேளையிலும் சேவையாற்றுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டிருந்தோம்.

வெதுப்பக செயற்பாடுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளைச் சேர்ந்த இலங்கையர்களுடன் நாம் எப்போதும் நெருக்கமாக செயலாற்றுவதுடன், திறன், சாதனங்கள் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி நடவடிக்கைகளினூடாக அவர்களின் வியாபாரங்களை மேம்படுத்திக் கொள்ள உதவிகளை வழங்குகிறோம்” என்றார்.   


Add new comment

Or log in with...