இலங்கையில் முதன்முதலில் பொழிந்த செயற்கை மழை | தினகரன்

இலங்கையில் முதன்முதலில் பொழிந்த செயற்கை மழை

காற்றழுத்தத்தை உருவாக்குதல், மழைமுகில்களை திரட்டுதல், முகில்களை குளிரச் செய்தல் ஆகிய மூன்றுமே அடிப்படை விடயங்கள்

செயற்கை மழை என்பது இதுவரை நாம் செய்திகளில் மட்டுமே கேள்வியுற்ற விடயம் ஆகும். ஆனால் செயற்கை மழை என்பது எமது நாட்டிலும் இப்போது சாத்தியமாகிப் போயுள்ளது.மவுசாகலையில் செயற்கை மழை பரீட்சித்துப் பார்க்கப்பட்டுள்ளது. இதன் பயனாக 45நிமிடங்கள் அங்கு செயற்கை மழை பெய்துள்ளது.

செயற்கை மழை என்றால் என்ன? அம்மழை எவ்வாறு பெய்விக்கப்படுகிறது? இதுபற்றிய விளக்கம் பலருக்குத் தெரியாத விடயம். இது விஞ்ஞானத்தின் விந்தை.

உண்மையில் செயற்கை மழை என்பது மேகங்களின் மீது வெளிப்புறத் துகள்களைத் தூவி மழையை பொழிய வைப்பது ஆகும். இச்செயல்பாடானது 'மேகவிதைப்பு' என்று கலைச்சொல்லில் அழைக்கப்படுகிறது. உலர் பனிக்கட்டி எனப்படும் திண்ம கார்பனீரொட்சைட், வெள்ளி அயோடைட், சாதரண கறி உப்பான சோடியம் குளோரைட், திரவ புரப்பேன் போன்றவை வெளிப்புறத் துகள்களாக மேகங்களின் மீது தூவப்படுகின்றன.

வெளிப்புறத் துகள்களை தூவுவதற்கு விமானங்கள், ​ெராக்கெட்டுகள் ஆகியன பயன்படுத்தப்படுகின்றன. இலங்கையில் செயற்கை மழையை பெய்விக்கும் முறை இப்போதுதான் அறிமுகமாகியுள்ளது.ஆனால் சில நாடுகளில் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக செயற்கை மழை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இயற்கை மழை பெய்யாது இருக்கும் போது செயற்கை மழை என்பதுதஒரு வரப்பிரசாதமாகவே கருதப்படுகிறது.

செயற்கை மழையை முயற்சிக்கும் போது சில சமயங்களில் மழை அவசியமான இடத்தை விட்டுவிட்டு வேறு இடங்களில் பெய்வதும் உண்டு. அதேசமயம் செயற்கை மழைப் பொழிவானது சில நேரங்களில் அதிக வெள்ளப் பெருக்கை குறைந்த நேரத்தில் உருவாக்கி விடும் அபாயமும் உண்டு.செயற்கை மழையின் அளவானது இயற்கை மழையின் அளவினை விட அதிகமாக இருக்கும். உலகிலேயே சீனாதான் அதிகளவு செயற்கை மழையை பெய்ய வைத்திருக்கிறது.

ஸ்ஷேபர், பெர்னார்ட், வென்னிகாட் ஆகிய மூவருமே செயற்கை மழை உருவாக்கத்திற்கான அடிப்படைக் காரணிகளை உருவாக்கியவர்களாவர்.செயற்கை மழைக்கான அடிப்படைக் காரணிகளில் பல உறுதியான மாற்றங்களை அமெரிக்க விஞ்ஞானி சிம்சன் ஏற்படுத்தினார். நவீன மாறுதல்களை சீன நிபுணர் சாங் சியாங் குழுவினர் செய்தனர்.

செயற்கை மழை உருவாக்கத்தில் மூன்று நிலைகள் உள்ளன. அவையாவன காற்றழுத்தத்தை உருவாக்குதல், மழை மேகங்களை திரட்டுதல், மழை மேகங்களை குளிரச் செய்தல், காற்றழுத்தத்தை உருவாக்குதல் என்பனவாகும்.

எந்த இடத்தில் மழையை உண்டாக்க விரும்புகிறோமோ அந்த இடத்தில் முதலில் காற்றழுத்தத்தை உருவாக்க வேண்டும்.காற்றழுத்தத்தை ஏற்படுத்த முதலில் கல்சியம் ஒக்ஸைட், கல்சியம் கார்பைட், யூரியாவும் அம்மோனியம் நைத்ரேட்டும் கலந்த கலவை, உப்பும் யூரியாவும் கலந்த கலவை போன்றவற்றை மேகங்களின் மீது தூவ வேண்டும்.கனரக துப்பாக்கிகள், பீரங்கிகள் மூலமாகவும், விமானங்கள் மூலமாகவும் அவை தூவப்படுகின்றன.

இந்த இரசாயனப் பொருட்கள் வானிலையில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சுகின்றன. இதனால் அவ்விடத்தில் காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்படுகிறது. காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக மழைமேகங்கள் அங்கு வந்து சேருகின்றன. இந்நிலையில் மழைமேகங்கள் ஒன்றுகூட்டி திரட்டப்படுகின்றன. அதாவது யூரியா,சோடியம்

குளோரைட், அம்மோனியம் நைத்ரேட், உலர்பனி ஆகியவற்றைத் தூவுவதால் மழைமேகங்களின் கனம் அதிகரிக்கப்படுகிறது.சில நேரங்களில் மழைமேகங்களை திரட்ட கல்சியம் குளோரைட்டும் பயன்படுத்தப்படுவதுண்டு.

மழைமேகங்களைக் குளிரச் செய்தல்:

ஒன்றுதிரட்டப்பட்ட மேகங்களின் மீது வெள்ளி அயோடைட், உலர் பனிக்கட்டி ஆகியவை தூவப்பட்டு மேகங்கள் குளிர்விக்கப்படுகின்றன‌. குளிர்ந்த மேகங்களில் இருந்து நீர்துளி ஒடுங்கிய பின்னர் மழையாகப் பெய்கிறது.

வெப்ப மேகங்களை குளிர்விக்கும் போது நீர்த் திவலைகளின் அடர்த்தி அதிகரித்து மேகங்களின் அடியிலிருந்து மழை பெய்கிறது.

மழை பெய்யாத, வரட்சி மிக்க பகுதிகளுக்கு செயற்கை மழை அவசியம் என்றாலும் செயற்கை மழையால் சில தீமைகளும் உள்ளன. செயற்கை மழைக்காக பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்களால் மனிதனுக்கும், பல உயிரினங்களுக்கும் சில பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு உண்டு. வெள்ளி அயோடைட் அதிகமானால் சருமத்தின் நிறத்தைப் பாதிக்கும். மறதியை உண்டாக்கலாம்.

செயற்கை மழையில் உள்ள இரசாயனப் பொருட்களால் தாவரங்களின் வளர்ச்சி நிலையிலும், பூப்பதிலும் மாற்றங்கள் ஏற்படுவதாகவும் அறியப்பட்டுள்ளது. இரசாயன அளவு மிகுதியாவதால் சுற்றுச்சூழல் பாதிப்பும் உருவாகிறது.

செயற்கை மழையை ஒரு குறிப்பிட்ட இடத்தில் பெய்ய வைக்கும் போது அது மற்ற இடத்தில் ஏற்படும் இயற்கை மழைப் பொழிவை பாதிக்கிறது.செயற்கை மழை செலவு மிக்கதாகும்.

மக்கள் தொகைப் பெருக்கம், வன அழிப்பு, அதிவேக தொழில்நுட்ப வளர்ச்சி, மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்களால் பருவமழை பொய்த்துப் போனது, பருவம் தவறி பெய்யும் சூழலும் ஏற்பட்டது. இது விஞ்ஞானிகளை செயற்கை மழை சிந்தனைக்குள் இழுத்துச் சென்றது. அந்த முயற்சி வெற்றி பெற்று, தேவையான இடங்களில் செயற்கை மழைப்பொழிவு செய்யப்படுகிறது.ஆனாலும், அதன் தீமைகளாலும், அதிக செலவு பிடிப்பதாலும் செயற்கை மழை சிறந்தது எனக் கூற முடியாது.

நன்மைகளும் தீமைகளும்:

வியட்நாம் போரில் ஒபரேசன் ‘பாப்ஐ’ என்ற பெயரில் செயற்கை மழை பொழிவித்து எதிரிகளின் போர்த்தளவாடங்கள் கொண்டு செல்லும் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டன.சீனா ஆண்டு தோறும் 55 பில்லியன் தொன் அளவு செயற்கை மழையை பெய்விக்கிறது. 2008-ம் ஆண்டு பிஜீங் ஒலிம்பிக் போட்டியின்போது அந்த பகுதியில் காற்று மாசுகளை சுத்தம் செய்யும் வகையில் செயற்கை மழையை பெய்வித்தது சீனா.

செயற்கை மழையில் உள்ள இரசாயன பொருட்களால் தாவரங்களின் வளர்ச்சி நிலையிலும், பூப்பதிலும் மாற்றங்கள் ஏற்படுவதாகவும் அறியப்பட்டுள்ளது. இரசாயன அளவு மிகுதியாவதால் சுற்றுச்சூழல் பாதிப்பும் உருவாகிறது.

அடிக்கடி செயற்கை மழையை பெய்ய அதிகளவு வேதிப்பொருட்களைப் பயன்படுத்துவதால் சுற்றுசூழல் பாதிப்பினைச் சந்திக்கலாம்.செயற்கை மழை பரிசோதனையில் கனடாவின் கியூபக் நகரில் மூன்று மாதங்களில் சுமார் 60 நாட்கள் மழை பெய்து அழிவை ஏற்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

செயற்கை மழை முயற்சியின் போது சிலவேளைகளில் வெள்ளி அயோடைட் குச்சிகளை ஏவுகணை குண்டுகள் மூலம் இந்த மேகங்களின் நடுவில் வீசுவதும் உண்டு.சிலநேரங்களில் இந்த முயற்சிகள் தோல்வியில் முடிவதும் உண்டு.

இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்...மழை வேண்டி யாகம் நடத்தப்பட்டதாக புராணங்களிலும் இதிகாசங்களிலும் படித்திருக்கிறோம்.நாம் தற்போது செயற்கை இரசாயனங்களை விமானங்கள் மூலம் மேகங்களுக்கு மேலாக கொண்டு சென்று தெளிப்பதன் மூலம் மேகங்களை ஒன்றுகூட்டுகின்றோம். ஒரு வேளை அன்றைய முனிவர்கள் அந்தப் புகையை வானத்தை நோக்கி நகர்த்துவதன் மூலம் மேகங்களை ஒன்றுகூட்டி இருக்கலாம்.மேகங்களை ஒன்று கூட்டக் கூடிய சக்தியுள்ள புகையை உருவாக்கத்தான் விசேட மரங்களும் திரவியங்களும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்!

இன்று இரசாயன திரவியங்கள் மூலம் கூட்டப்பட்டு பெய்யப்படும் மழை, அன்று 'யாகங்கள்' என்ற பெயரில் பெய்விக்கப்பட்டிருக்கும்.


Add new comment

Or log in with...