ஆசிரியர் வெற்றிடங்களால் இடமாற்றங்களில் நெருக்கடி | தினகரன்

ஆசிரியர் வெற்றிடங்களால் இடமாற்றங்களில் நெருக்கடி

விரைவில் நடவடிக்கை

நாட்டில் சுமார் 10,000 ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் உள்ளதால் ஆசிரியர்களுக்கான இடமாற்றங்களை செய்வதில் சில நெருக்கடிகள் தற்போது எழுந்துள்ளன. அவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் பல்வேறு ஆசிரியர் நியமனங்களை மிக விரைவில் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். 

சம்மாந்துறைப் பிரதேச கல்வி அபிவிருத்தி தொடர்பான விஷேட கலந்துரையாடல் (23) மாலை அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயிலின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதன் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இந்நிகழ்வில் சம்மாந்துறைப் பிரதேசத்திலுள்ள அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகள், பாடசாலைச் சமூகத்தினர் என பலர் கலந்து கொண்டனர்.  

இதன்போது தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,   நாட்டில் தற்போது நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களால் பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளன.

அவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் சிலருக்கு தொண்டர் ஆசிரியர் நியமனங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை  கல்வி அமைச்சு மேற்கொண்டு வருகின்றது. இதற்கான அமைச்சரவைப் பத்திரத்திரமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

இது தவிர, கல்விப் பொதுத் தராதரப் பத்திரத்தில் உயர்தர தகைமையுள்ள ஒரு தொகுதியினருக்கும் அவர்களின் ஆளுமைகளுக்கு அமைய,மிக விரைவில்  நியமனங்கள் வழங்கப்படும். இதற்கு மேலாக பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கும் ஆசிரியர் நியமனங்களை வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு வடக்கு-கிழக்கு மாகாண ஆளுநர்களுக்கு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள பாடசாலைகளில் பாட ரீதியாக எத்தனை ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை உள்ளது என்பது பற்றிய உத்தியோகபூர்வ தகவல்கள் எமது அமைச்சுக்கு கிடைக்கவில்லை. அத்தகவல்கள் கிடைத்ததும் மிக விரைவில் தீர்வு வழங்கப்படும்.எது எவ்வாறாக அமைந்த போதிலும் எதிர்வரும் மூன்று நான்கு மாத காலப் பகுதிக்குள் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட கல்வித்துறைக்கான பிரச்சினைகளை சுமார் ஐம்பது சதவீதமளவில் தீர்ப்பதற்கான சாத்தியப்பாடுகள் காணப் படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

(அட்டாளைச்சேனை தினகரன் நிருபர்)    


Add new comment

Or log in with...