கடன் சுமையிலிருந்து மீளும் முயற்சிகள் வெற்றியளிப்பு | தினகரன்

கடன் சுமையிலிருந்து மீளும் முயற்சிகள் வெற்றியளிப்பு

ஹம்பாந்தோட்டையில் பிரதமர்

கடன் சுமையிலிருந்த நாட்டை கட்டியெழுப்பி வருவதாகத் தெரிவித்த பிரதமர், திட்டமிட்ட அடிப்படையில் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.  

ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவிலை வர்த்தக வலயத்தில் ஆரம்பிக்கவுள்ள "சில்வர்பார்க்" பெற்றோலிய சுத்திகரிப்பு நிலையம் மற்றும் லங்கா சீமெந்து கம்பனி ஆகியவற்றிற்கான அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.   பிரதமர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றும் போது தெரிவித்ததாவது, 

ஆட்சியைப் பொறுப்பேற்ற போது ஹம்பாந்தோட்டையில் வெள்ளை யானைகளையே  எமக்கு வழங்கினர். இன்று வெள்ளை யானைகளை பெரஹராவில் செல்லும் யானைகளாக மாற்றியுள்ளோம்.   பொருளாதார  அபிவிருத்தியை எம்மால்  மாத்திரமே செய்யமுடியும். இது ஆரம்பம் மாத்திரமே.எமது அபிவிருத்திகள் அனைத்தும் கொள்கை அடிப்படையிலேயே முன்னெடுக்கப் படும். 2015ஆம் ஆண்டு தேர்தலுக்கு வரும் போது வெறுமையான துறைமுகமும், கைவிடப்பட்ட நிலையில் இருந்த மத்தளை விமான நிலையமுமே இருந்தன. அமைச்சர் சஜித் பிரேமதாஸவிற்கு  இது ஞாபகமிருக்கும்.

ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தை கப்பல்களால் நிரப்புவோமென நாம் அன்று கூறியதை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தத் திட்டங்களைஆரம்பிப்தற்கு 2017ஆம் ஆண்டு ஜனவரியில் இங்கு வருகை தந்த போது எங்களைக் கல் எறிந்து விரட்டினர்.

இவற்றைப் பொருட்படுத்தாது அபிவிருத்தி களை முன்னெடுத்ததால்,ஹம்மாந்தோட்டை துறைமுகத்தை வினைத்திறனுடையதாக ஆக்கியுள்ளோம். சீனமேர்சன்ட் கம்பனியுடன் இணைந்து எமது துறைமுக அதிகார சபை இயங்குகிறது. இந்தப் பிரதேசத்தில் வாயுமின் நிலையம் ஒன்றும் நிறுவப்படவுள்ளது. எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கான அடிக்கல்லும் எம்மால் நடப்படவுள்ளது.

இன்னும் மூன்று மாதங்களில் எமது சிவில் விமானசேவை அதிகார சபையும் இந்திய அதிகார சபையுடன் இணைந்து மத்தளை விமான நிலையத்தை  செயற்படுத்தும்

இன்று நாட்டில் சீன, இந்திய முதலீடுகளும் உள்ளன. நாட்டுக்கு  தேவையான அனைத்தும் எமது ஆட்சியில் பூர்த்தியாக்கப்படும் என்றார். இந் நிகழ்வில் அமைச்சர்களான சஜித் பிரேமதாச,  மங்கள சமரவீர, பிரதி அமைச்சர் நளின் பண்டார மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்  விஜித் விஜிதமுனி சொய்ஸா, கட்டார் எண்ணெய்வள மற்றும் வாயு அமைச்சர்  கலாநிதி மொஹமட் பின் அல் ஹமத் ரூமி ஆகியோரும் உரையாற்றினர்.

முதலீட்டாளர்களினால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் 70வது  பிறந்த தினத்தை முன்னிட்டு நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டன. இங்கு வருகை  தந்த மக்களுக்கு பிரதமர் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

ஹம்பாந்தோட்டை வீரவிலையில் நடைபெறவுள்ள இவ் வருடத்திற்கான  யொவுன்புர நிகழ்விற்கு அமைச்சர் சஜித் பிரேமதாஸவினால் வழங்கப்பட்ட 3,50,000ரூபா நிதியும், இளைஞர் கழக பிரதிநிதிகளிடம் பிரதமரால் கையளிக்கப் பட்டது.  

(ஹம்பாந்தோட்டைகுறூப் நிருபர்) 


Add new comment

Or log in with...