வேட்பாளர் சண்முகத்தின் 'சொத்து மதிப்பு ரூ.192 கோடி' | தினகரன்

வேட்பாளர் சண்முகத்தின் 'சொத்து மதிப்பு ரூ.192 கோடி'

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் ‘சொத்து மதிப்பு ரூ.192 கோடி’ என்று வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க கூட்டணியில புதிய நீதிக்கட்சிக்கு வேலூர் நாடாளுமன்றத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், தி.மு.க பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்தை எதிர்த்து ‘இரட்டை இலை’ சின்னத்தில் போட்டியிடுகிறார். ஏ.சி.சண்முகம் நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல்செய்தார். வேட்புமனுவில் ஏ.சி.சண்முகம் மற்றும் அவரின் மனைவியின் பெயரில் மொத்தம் ரூ.192 கோடிக்கும் அதிகமான சொத்துகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ஏ.சி.சண்முகம் பெயரில் ரூ.28 கோடியே 42 இலட்சத்து 18 ஆயிரத்து 320 மதிப்பில் அசையும் சொத்துகளும் ரூ.81 கோடியே 41 இலட்சத்து 11 ஆயிரத்து 600 ரூபாய் மதிப்பில் அசையா சொத்துகள் என மொத்தம் ரூ.109 கோடியே 83 இலட்சத்து 29 ஆயிரத்து 920 மதிப்பிலான சொத்துகள் உள்ளன. அவரின் மனைவி லலிதா லட்சுமி பெயரில் ரூ.21 கோடியே 14 இலட்சத்து 42 ஆயிரத்து 682 மதிப்பிலான அசையும் சொத்துகளும், ரூ.61 கோடியே 23 இலட்சத்து 96 ஆயிரத்து 776 மதிப்பிலான அசையா சொத்துகளும் என மொத்தம் ரூ.82 கோடியே 38 இலட்சத்து 39 ஆயிரத்து 458 மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கையிருப்பு, வங்கியிருப்பு, பங்கு பத்திரங்களில் முதலீடு மற்றும் காப்பீடு முதலீடு உட்பட இதர முதலீடுகளின் மீதான வருவாய், நகைகள், வாகனங்கள் போன்றவை அசையும் சொத்துகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. சென்னை, திருவண்ணாமலை, வேலூர், திருப்பூர், திருச்சி, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் பெங்களூர் உட்பட பல்வேறு பெருநகரங்களில் அசையா சொத்துகளாக நிலங்கள் இருப்பதாகவும் வேட்புமனுவில் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...