அநீதியின் பக்கம் சாராத 'பலராமன்' ரஜினிகாந்த் | தினகரன்

அநீதியின் பக்கம் சாராத 'பலராமன்' ரஜினிகாந்த்

இந்திய பொதுத் தேர்தல் தமிழகத்தில் களைகட்டத் தொடங்கி விட்டது. யார் யாருடன் கூட்டணி சேர்வது, யாருக்கு போட்டியிட ஆசனம் கொடுப்பது என்று அரசியல் கட்சிகளும் ரொம்ப பரபரப்பாக நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றன. சில பிரதான கட்சிகள் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்காத நிலையிலும் தங்களது பிரசாரங்களை தொடங்கி விட்டன. கொள்கை, கூட்டணி தர்மம் ஆகியவற்றைப் பற்றி கட்சிகள் கவலைப்படாமல், எதையாவது சொல்லி மக்களை ஏமாற்றி விடலாம் என்ற நம்பிக்கையோடு வலம்வருகின்றன.

போர்க்களத்தைப் போன்றதொரு தோற்றத்தை தேர்தல் களம் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த அணியிலிருந்து அந்த அணிக்கு ஒருவர் தாவிச் செல்வது, அந்த அணியிலிருந்து ஒருவரை இந்த அணிக்கு இழுப்பது, தான் நினைத்தது நடக்காத வெறுப்பில் எதிர் தரப்பில் சேர்வது, தான் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே தன்னைச் சார்ந்தவர்களுக்கு குழிபறிப்பது போன்ற எல்லா போர்த் தந்திரங்களும் களமிறக்கப்பட்டிருக்கின்றன. எந்த விதிமுறைகளும் பின்பற்றப்படாமல் நடைபெறும் போரை 'சங்குல யுத்தம்' என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட சங்குல யுத்தத்தை நோக்கி தமிழகம் நகர்ந்துகொண்டிருப்பதை உணரமுடிகிறது.

மகாபாரதத்தின் குருக்ஷேத்திர போரைப் பற்றி அனைவருக்கும் தெரியும். அப்போரில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியிருந்தவர்கள் மூன்று பேர். அவர்கள் கிருஷ்ணரின் அண்ணன் ‘பலாராமன்’, திருதிராஷ்டிரனின் சகோதரர் ‘விதுரர்’, ருக்மணியின் அண்ணன் ‘ருக்மன்’. இவர்கள் ஏன் போரில் கலந்து கொள்ளவில்லை?

பலராமன், கிருஷ்ணரின் அண்ணன். ஆதிசேஷனின் அவதாரம். பீமனுக்கும் துரியோதனனுக்கும் கதாயுத பிரயோகத்தின் குரு. இவருக்கு கெளரவர்களிடம் அன்பு அதிகம். மனத்தளவில் கெளரவர்களுக்கு ஆதரவாக இருந்தாலும், நேரடியாக கெளரவர் தரப்பில் களமிறங்கவில்லை. பாண்டவர்களுக்கு கிருஷ்ணரின் ஆதரவு இருக்கும்போது அவரை எதிர்த்து எப்படி போரிட முடியும்? அதனால், போரின்போது தீர்த்த யாத்திரைக்கு சென்று விடுகிறார் பலராமன். போரின் முடிவில் பீமனுக்கும் துரியோதனனுக்கும் நேரடி யுத்தம் நடக்கும்போது ஒரு பார்வையாளனாக தனது சீடர்களின் வீரத்தை கண்டுகளித்தார்.

பலராமன், விதுரர்,ருக்மன் ஆகிய மூன்று பேர்களையும் இன்றைய தேர்தல் திருவிழா கண் முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறது.

பலராமனைப் பற்றி நாம் படிக்கும்போது நம் நினைவுக்கு வருவது ரஜினிகாந்த். காரணம், பலராமனைப் போலவே அமைதியானவர். தன் பலத்தை முழுமையாக அறிந்திருந்த போதும் அதை அநீதியின் பக்கம் சாய்வதற்கு அனுமதித்ததில்லை. போரின் போது யுத்த தர்மத்தை மீறி துரியோதனனை வீமன் தாக்கிய போது, அதைத் தவறு என்று சுட்டிக்காட்டி வீமனை கொல்வதற்கும் துணிந்தார். இதைப்போலவே ரஜினிகாந்த், நியாயம் என்று கருதிய விஷயங்களை ஒளிவுமறைவின்றி சொல்லத் தவறியதில்லை. இதற்குப் பல தருணங்களை உதாரணமாகச் சொல்லலாம்.

பலராமன் விவசாயிகளின் கடவுள். விவசாயிகளின் மீது மிகுந்த அக்கறை கொண்டவர். பூமியைக் குடைந்து யமுனை ஆற்று நீரை பிருந்தாவனத்துக்குக் கொண்டு வந்தவர். விவசாயத்தை நம்பி வாழ வேண்டும் என்ற சிந்தனையை ஏற்படுத்தியவர். ஆறுகள் பற்றிய ரஜினிகாந்த் சிந்தனையும் கிட்டத்தட்ட பலராமனின் அணுகுமுறையோடு ஒத்துப்போகிறது. தன்னுடைய பலத்தை மறைத்து சாதாரண மனிதனாக இருக்கும் ரஜினிகாந்தை பலராமனோடு செய்யும் ஒப்பீடு மிகச்சரியானது. அமைதி, மனத்தில் பட்டதை பளிச்சென்று சொல்லும் குணம், நேர்மை ஆகியவை ரஜினிகாந்தின் பலம்.

ஒருவேளை இன்று பலராமனும், விதுரரும் இருந்திருந்தால், அவர்கள் இந்து மதத்தை கேவலப்படுத்துபவர்களுக்கு எதிராக களமிறங்கியிருப்பார்கள். இதே கருத்தை மனத்தில் கொண்டு ரஜினிகாந்த்,மு.க. அழகிரி ஆகியோர் தேர்தல் களத்தில் குரலெழுப்ப வேண்டும் என்று இன்று பலரும் நினைக்கிறார்கள். இந்து உணர்வுகளுக்கு இவர்கள் அளிக்கும் ஆதரவு எதிர்ப்பாளர்களுக்கு ஒரு பாடத்தை புகட்டும்.

 

சாது ஸ்ரீராம்


Add new comment

Or log in with...