நாட்டின் கடல் கண்காணிப்பை பலப்படுத்துவது கட்டாயம்! | தினகரன்

நாட்டின் கடல் கண்காணிப்பை பலப்படுத்துவது கட்டாயம்!

நாட்டின் வடபகுதிக் கடலில் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது. வடபகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் இவ்வாறான பாதுகாப்பை சமீப காலமாக வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர்.

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான பொருட்கள் கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்தி வரப்படும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருவதனாலேயே, வடபகுதி கடல் பாதுகாப்பை தீவிரப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை சமீப காலமாக பலராலும் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

முன்னரெல்லாம் தென்னிந்தியாவில் இருந்து தங்கம், புடவைகள் போன்றவைதான் கூடுதலாகக் கடத்தப்படுவது வழக்கமாக இருந்தது. தங்கம் புடவைகள் போன்றன கடத்தப்படுவதால் எமது அரசாங்கத்துக்கு வருமான இழப்பு ஏற்படுகின்றதே தவிர, அக்கடத்தல்களால் சமூக சீரழிவு இடம்பெறுவதில்லை. ஆனால் இன்றெல்லாம் தென்னிந்தியாவில் இருந்து கடத்தி வரப்படுகின்ற பொருட்களைப் பார்க்கின்ற போது, எமது நாட்டின் சமூக சீரழிவுகளுடன் அக்கடத்தல்கள் நேரடியாகத் தொடர்புபட்டிருப்பது தெரிகின்றது.

தென்னிந்தியாவில் இருந்து சமீப காலமாக கூடுதலாகக் கடத்தப்படுகின்ற பொருளாக கேரள கஞ்சா இருக்கின்றது. இந்தியாவில் இருந்து படகுகளில் இலங்கைக்கு கடத்தி வரப்படுகின்ற கேரள கஞ்சா கைப்பற்றப்படுகின்ற செய்திகள் நாளாந்தம் இப்போதெல்லாம் ஊடகங்களில் வெளிவருகின்றன. இக்கடத்தல் எமது நாட்டின் சமூகத்தை நேரடியாக சீரழிப்பதாக உள்ளது. எனவே இக்கடத்தல்களை எவ்வாறாவது தடுத்து நிறுத்துவது அவசியம். கேரள கஞ்சா என்பது இயற்கையான கஞ்சா வகை தாவரமொன்றில் இருந்து பெறப்படுகின்ற போதைப்பொருள் ஆகும்.

முன்னரெல்லாம் எமது நாட்டில் சட்டவிரோதமாக கஞ்சா செய்கை பண்ணப்படுவது பெருமளவில் நடந்து வந்தது. ஆனால் கஞ்சா செய்கைக்கு எதிராக நாட்டில் பொலிசார் மேற்கொண்டு வரும் கடுமையான நடவடிக்கை காரணமாக உள்ளூர் கஞ்சா செய்கை ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. எனவேதான் கேரளாவில் இருந்து இலங்கைக்கு கஞ்சாவைக் கடத்தி வரும் சட்டவிரோத நடவடிக்கையில் சமூகவிரோதிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

அதுமாத்திரமன்றி, கேரளாவில் இருந்து கொண்டு வரப்படுகின்ற கஞ்சா கூடுதலான போதையை ஏற்படுத்துவதாகவும், அதனாலேயே அதற்கு இங்கு கிராக்கி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. ஆனால் சிலர் கூறுகின்ற தகவல்களை வைத்துப் பார்க்கின்ற போது. சாதாரண கஞ்சா இலைகளுக்கு ஒருவகை செயற்கையான போதைப்பொருளை விசிறிய பின்னர் அவற்றை இங்கு கடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன. சட்டவிரோத பொருட்களைக் கடத்துவதிலும் கூட எத்தனையோ தந்திரங்கள் கையாளப்படுவது இதிலிருந்து புரிகின்றது.

கேரள கஞ்சாவாகட்டும் அல்லது வேறெந்தவொரு போதை தரும் பொருளாகவிருக்கட்டும்... அவற்றை இலங்கைக்குக் கடத்தி வருவதற்கு ஒருபோதும் இடமளிக்கலாகாது. அக்கடத்தல்களை முற்றுமுழுதாகத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும். எனவேதான் வடபகுதியில் கடல் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டுமென பலரும் இப்போது கூறுகின்றனர்.

யாழ்குடாநாடு யுத்த காலத்துக்கு முன்னர் கல்வி, கடின உழைப்பு மற்றும் கட்டுக்கோப்பான வாழ்க்கை முறைகளில் உச்சத்தில் இருந்த பிரதேசமாகும். யாழ்குடா மக்கள் எப்போதுமே கடின உழைப்பாளிகளாக இருந்தவர்களாவர். கல்விப் புலமையில் பெரும் உச்சத்தையெல்லாம் எட்டிப் பிடித்தவர்கள் அவர்கள்.

அரசியல் செல்வாக்கினாலேயோ அல்லது பின்கதவு வழியாகவோ அவர்கள் பதவிகளையும் பட்டங்களையும் நாடிச் செல்ல வேண்டிய அவசியம் இருக்கவில்லை. கல்வியில் உச்சத் தகைமை பெற்றதனாலும் கடமை, விசுவாசம் காரணமாகவும் பதவிகளே அவர்களைத் தேடி வந்த காலமொன்று அன்று இருந்தது. ஆனால் 1983 ஜுலை வன்முறையானது அம்மக்களின் வாழ்க்கைக் கோலத்தையே தலைகீழாகப் புரட்டிப் போட்டது. 1983 கலவரத்தின் பின்னர் தீவிரமடைந்த யுத்தம் மக்களின் உள்ளங்களையும் படிப்படியாக மாற்றியமைத்தது.

நிச்சயமற்ற எதிர்காலத்தினால் வடக்குக் கல்வி அதல பாதாளத்துக்கு வீழ்ச்சியடைந்தது. நன்கு கட்டமைக்கப்பட்டிருந்த அம்மக்களின் பொருளாதாரம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சீரழிக்கப்பட்டது. சிந்துசமவெளி பிரதேசத்தில் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலப் பகுதியில் மேம்பட்ட நாகரிகத்துடன் வாழ்ந்த திராவிடக் குழுமத்தின் நிலவுகையானது ஆரியர்களின் பரம்பலினால் எவ்வாறு சிதைந்து போனதோ அதேபோன்று வடபகுதித் தமிழர்களின் நாகரிகமும் படிப்படியாகச் சீரழிந்து போனது.

மூன்று தசாப்த காலத்து வாழ்வு யுத்தத்தினால் சீரழிந்து போனது. யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு பத்து வருடங்களாகின்றது. கடந்த பத்து வருட காலத்தில் அம்மக்களின் வாழ்வு பழையபடி மீளக்கட்டியெழுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பத்து வருட காலமாக எதுவுமே நகரவில்லை. கல்வி, பொருளாதாரம், வாழ்க்கைத் தரம் போன்ற எதுவுமே முன்னேறியபாடாக இல்லை. யுத்த காலத்திலும், யுத்தத்துக்குப் பின்னரான பத்து வருடகாலப் பகுதியிலும் தனிநபர்கள் மாத்திரமே பெரும் நன்மை பெற்றுள்ளனர். அதேசமயம் விழுமியக் கட்டுக்கோப்புடன் திகழ்ந்த சமூகமொன்றுக்குள் ஒழுக்கக் கேடுகளும், போதைப்பொருள் பாவனையும் தாராளமாக உட்புகுந்து விட்டதாக அங்குள்ள சமூகநல ஆர்வலர்கள் வேதனைப்படுகின்றனர். வாள்வெட்டுகள், கொள்ளை, கொலை என்றெல்லாம் யாழ்குடாநாட்டில் அடிக்கடி இடம்பெறுகின்ற சம்பவங்கள் அங்குள்ள இன்றைய சமூக சீர்கேட்டை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. அவ்வாறான சமூக சீர்கேடுகளில் ஒன்றுதான் கேரள கஞ்சா போன்ற போதைப்பொருட்களின் ஊடுருவல்!

யுத்தம் நிலவிய காலப் பகுதியில் கடல் வழியாக கடத்தல் பொருட்கள் யாழ்குடாநாட்டைச் சென்றடைவது இலகுவான காரியமாக இருக்கவில்லை. எந்நேரமும் கடற்படையினரின் கண்காணிப்புக்குள் இருந்த கடல் பிரதேசம் வழியாக சட்டவிரோத படகுகள் நுழைந்து விட முடியாது. யுத்தம் ஓய்ந்த பின்னர் கடல் கண்காணிப்பு நடவடிக்கை பலவீனமாகிவிட்டதென்றுதான் அர்த்தம் கொள்ள வேண்டியிருக்கிறது. யுத்த ஓய்வுக்குப் பின்னரே வடபகுதி கடல் வழியாக சட்டவிரோத கடத்தல்கள் தாராளமாக இடம்பெறுகின்றன. கேரள கஞ்சா போன்றவை மன்னாரையும் வந்தடைகின்றன.

சமூகத்தைச் சீரழிக்கும் இவ்வாறான அபாயகரமான பொருட்கள் நாட்டுக்குள் கடத்தப்படுவதை எவ்வாறாயினும் முற்றாகத் தடுக்க வேண்டும்.தென்பகுதி கடலில் நேற்று கப்பலில் வைத்து போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதும் கடத்தல் பேர்வழிகளின் துணிச்சலையே காட்டுகிறது.இவை அனைத்துக்கும் முடிவு காணப்பட வேண்டும். இல்லையேல் சமூக சீரழிவுகளுக்கு மேலும் இடமளிப்பதற்கு வழியேற்பட்டு விடும்.


Add new comment

Or log in with...