எதிரணி குற்றஞ்சாட்டினாலும் சர்வதேச நீதிமன்றம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் உறுதி | தினகரன்


எதிரணி குற்றஞ்சாட்டினாலும் சர்வதேச நீதிமன்றம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் உறுதி

நாட்டை காட்டிக் கொடுப்பதாக எதிரணி குற்றஞ்சாட்டுகையில் சர்வதேச நீதிமன்றம் அமைக்கவோ சர்வதேச நீதிபதிகளை நியமிக்கவோ மாட்டோம் என வெளிவிவகார அமைச்சர் உறுதியாக கூறியுள்ளதாக ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்   முஜீபுர் ரஹ்மான் தெரிவித்தார்.  

7 ஆவது நாளாக இடம்பெற்ற குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, ஜெனீவாவில் நாம் நாட்டை காட்டிக் கொடுக்கப் போவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. நாட்டின் ஸ்திரத்தன்மை இறைமை என்பன பறிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கைக்கு வெளிவிவகார அமைச்சர் பதில் வழங்கியுள்ளார்.வெளிநாட்டு நீதிபதிகள் நியமிக்கவோ வெளிநாட்டு நீதிமன்றங்களை நியமிக்கவோ தயாரில்லை என உறுதியாக கூறியுள்ளார். சர்வதேச மட்டத்தில் நாடு கீர்த்தியைப் பெற்றுள்ள நிலையில், ஆணையாளரின் குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் பதில் வழங்கியுள்ளார். இவ்வாறான நீதிமன்றங்களை அமைக்க அரசியலமைப்பில் இடமில்லை என அவர் அறிவித்துள்ளார்.

யுத்தம் முடிந்ததும் சர்வதேச தலையீடு இடம்பெற்றது. பான் கி மூனுடன் கூட்டறிக்கை விடுத்த மஹிந்த அரசு விசாரணை நடத்த உடன்பட்டது. 13 திருத்தத்தை முழுமையாக செயற்படுத்துவதாகவும் கூறியது.கடந்த ஆட்சிகளிலும் கொக்கட்டிச்சோலை கொலை, கிரிசாந்தி கொலை என்பன தொடர்பில் விசாரணை நடந்துள்ளது. மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சியில் மூதூர் 11 பேர் கொலை, 11 திருமலை இளைஞர்கள் கொலை தொடர்பில் விசாரணை நடத்தவில்லை. இதன் பின்னர் நாட்டுக்கு மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. 2015 இன் பின்னர் இந்த நிலைமை மாறியது. எமது நாடு குறித்த சர்வதேச நிலைப்பாட்டை பாதுகாத்து செயற்பட முடிந்துள்ளது. காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் அலுவலகம் அமைக்கப்பட்டதற்கு சர்வதேச சமூகம் வரவேற்பு தெரிவித்துள்ளது. 

(லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்)   


Add new comment

Or log in with...