திறமையான வீரர்கள் இனங்காணப்பட வேண்டும் | தினகரன்

திறமையான வீரர்கள் இனங்காணப்பட வேண்டும்

ஒப்சேர்வர் சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர் விருதின் மூலம் அரங்கத்துக்கு வந்த சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் முன்னாள் இலங்கை, தமிழ் யூனியன் மற்றும் ஆனந்தாக் கல்லூரி ஆகியவற்றுக்காக விளையாடிய முதுமுதலிகே புஷ்பகுமாரவும் ஒருவராவார்.

1981 செப்டம்பர் 26ஆம் திகதி கொழும்பில் பிறந்த புஷ்பகுமார ஒப்சேர்வர் விருதை வென்ற ஆறாவது ஆனந்தாக் கல்லூரி வீரராவார். 1999 ஆம் ஆண்டு ஒப்சேர்வர் விருதை வென்றதுடன் 2007/2008 இல் முன்னணி லீக் சுற்றுப்போட்டியின் சிறப்பாட்டக்காரராகக் கணிக்கப்பட்டு ஒரு இலட்சம் ரூபா பணப்பரிசை வென்றார்.

தமிழ் யூனியன் கழகத்திற்காக விளையாடிய முதல் வருடத்திலேயே அந்த அணியை மூன்றாவது இடத்துக்குக் கொண்டு வருவதில் புஷ்பகுமார பெரும் பங்கு வகித்தார். எஸ். எஸ். சி, முவர்ஸ் ஆகிய அணிகளின் பின் மூன்றாவது இடத்துக்கு தமிழ் யூனியன் அணி தெரிவாகியிருந்தது. அந்த அணிக்காக வினையாடிய முதல் வருடத்தில் 590 ஓட்டங்களை 49.14 என்ற சராசரியில் பெற்றதுடன் 34 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். அதனையடுத்து இலங்கையின் 19 வயதுக்குட்வபட்டவர்கள் அணியில் இடம் பிடித்த புஷ்பகுமார தேசிய அணிக்கான ஒரு வீரராக கருத்தப்பட்டார். எனினும் துரதிர்ஷ்டவசமாக அவ்வாறு இடம்பெறவில்லை.

அர்ஜுன ரணதுங்க (1980- 1982) சஞ்சீவ ரணதுங்க (1988) மார்வன் அத்தபத்து (1990) திலான் சமரவீர (1994- 1995) ஆகியோரையடுத்து 1999 இல் இந்த விருதை வென்ற ஆனந்தா கல்லூரி வீரர் முதுமுதலிகே புஷ்பகுமார ஆவார்.

சிறந்த சகலதுறை ஆட்டக்காரரான புஷ்பகுமார இடது கை துடுப்பாட்ட வீரர். அதேநேரம் வலது கை ஓப் ஸ்பின் பந்து வீச்சாளர். எந்த வரிசையிலும் துடுப்பெடுத்தாடக் கூடிய புஷ்பகுமார போட்டியை வென்று கொடுக்கக் கூடிய பந்து வீச்சாளர் ஆவார்.

1999 இல் பாடசாலை கிரிக்கெட் போட்டியில் இவர் காட்டிய திறமை இவரை ஒப்சேர்வர் விருதை வெல்லும் நிலைக்கு இட்டுச்சென்றது. சகலதுறை ஆட்டக்காரர் என்ற சொல்லுக்கு உண்மையிலேயே மதிப்பளிக்கும் வகையில் அவர் சிறந்த பந்து வீச்சாளர், சிறந்த சகலதுறை ஆட்டக்காரர் மற்றும் சிறந்த களத்தடுப்பாளர் என்ற அனைத்து விருதுகளையும் வெற்றி கொண்டமை சிறப்புக்குரியது.

1999 இல் பாடசாலை கிரிக்கெட் போட்டிகளில் அவர் மொத்தம் 650 ஓட்டங்களை எடுத்திருந்தார். இதில் சென். செபஸ்டியன் அணிக்கெதிராக அவர் ஆட்டமிழக்காமல் 122 ஓட்டங்கள் அதிக பட்ச ஒட்டங்களாக அமைந்தன. அத்துடன் பந்து வீச்சில் 63 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் 26 பிடிகளையும் பிடித்திருந்தார்.

1999 இல் அவர் காட்டிய திறமை 2000 ஆம் ஆண்டிலும் தொடர்ந்தது. 2000 டிசம்பரில் இலங்கை பாடசாலைகளின் விளையாட்டு விருதுகள் வழங்கலின் போது பாடசாலைகளுக்கிடையே சிறந்த விளையாட்டு வீரர் என்ற விருது முதுமுதலிகே புஷ்பகுமாரவுக்கே கிடைத்தது. அத்துடன் பாடசாலைகளுக்கிடையிலான 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் விரும் இவருக்கே கிடைத்தது. அதனையடுத்து கொழும்பில் இடம்பெற்ற இளைஞர் உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் புஷ்பகுமார இலங்கை அணிக்கு பெரும் பங்காற்றினார். அதன் மூலம் இலங்கை அணி இந்தியாவுக்குப் பின் இரண்டாவது இடத்தைப் பெற்றிருந்தது. அப்போது இலங்கையில் பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகராக இருந்து லின்டா டபிள்ட் புஷ்பகுமாரவிற்கு பிரின்ஸ் ஒப் வேல்ஸ் விருதை வழங்கினார்.

அதனையடுத்து இலங்கை தேசிய அணியில் புஷ்பகுமாரவுக்கு இடம் கிடைத்தது. 2000 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் பாகிஸ்தான் சென்ற இலங்கை அணியில் அவருக்கு இடம் கிடைத்தது. அப்போது அவருக்கு 18 வயதுதான் ஆகியிருந்தது. அணியில் இருந்த ஆகக் குறைந்த வயதுடைய வீரர் புஷ்பகுமார.

சனத் ஜயசூரியவின் தலைமையிலான பாகிஸ்தான் சென்ற அந்த அணியில் மஹேல ஜயவர்தன, மார்வன் அத்தபத்து ரொமேஷ் களுவிதாரண, ரஸல் ஆர்னல்ட், திலகரத்ன தில்ஷான், சாமர சில்வா, பிரமோதய விக்கிரமசிங்க, இந்திக்க கால்லககே மற்றும் முதுமுதலிகே புஷ்பகுமார ஆகியோரே அணியில் இடம்பெற்றனர். எனினும் புஷ்பகுமாரவுக்கு விளையாடும் பதினொருவரில் ஒருவராக இருக்க முடியவி்ல்லை என்பது துரதிர்ஷ்டமானது.

அப்போது அவர் பாடசாலை வீரராக இருந்ததும் இதற்கொரு காரணமாகும். பாடசாலை வீரராக இருக்கையிலேயே இலங்கை அணிக்காக தேர்வு செய்யப்பட்ட மூன்றாவது வீரர் புஷ்பகுமார ஆவார். ஆனந்தா கல்லூரியைச் சேர்ந்த அர்ஜுன ரணதுங்க, ரோயல் கல்லூரியை சேர்ந்த ரொஷான் ஜுரம்பதி ஆகியோரே பாடசாலையில் இருந்த போதே இலங்கை அணிக்காக தெரிவு செய்யப்பட்ட ஏனைய வீரர்களாவர். முதுமுதலிகே புஷ்பகுமார பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க சென்ற இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பிடித்தார். எனினும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட அவர் தெரிவு செய்யப்படவில்லை. எனினும் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான இலங்கை அணி இங்கிலாந்துக்கு விஜயம் செய்த போது அதில் விளையாடி முதுமுதலிகே புஷ்பகுமார இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் ஒன்றில் 134 ஓட்டங்களைப் பெற்றமை சிறப்பம்சமாகும்.


Add new comment

Or log in with...