'சமாதானச் சமர்' கிரிக்கெட் போட்டி: பதுளை சரஸ்வதி அணி சம்பியன் | தினகரன்

'சமாதானச் சமர்' கிரிக்கெட் போட்டி: பதுளை சரஸ்வதி அணி சம்பியன்

பதுளை சரஸ்வதி – சென்ட்ரல் பாடசாலை அணிகளுக்கிடையிலான 10 வது தடவையான நடைபெற்ற மாபெரும் 'சமாதானச் சமர்' கிரிக்கெட் விழா கடந்த வெள்ளிக்கிழமை (15) அன்று கோலாகலமாக சமாதான நடைபவனிடன் ஆரம்பமாகி திங்கட்கிழமை ஒருநாள் போட்டியுடன் 4 நாட்களாக சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டு நாள் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இரண்டிலுமே சரஸ்வதி அணி வெற்றியீட்டி வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.

பதுளை சரஸ்வதி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை அதிபர் கே. திருலோகசங்கர், மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) அதிபர் புபுது ஜயசிங்க தலைமையில் இச் சமாதான சமர் கிரிக்கெட் விழா பதுளை கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றது.

ஆரம்ப நிகழ்வில் ஊவா முதல்வர் சாமர சம்பத் தசநாயக்க பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

இருநாள் டெஸ்ட் போட்டியின் போது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுக்களையும் இரு அணிகளும் இழந்த நிலையில் சரஸ்வதி அணி 172 ஓட்டங்களையும், சென்ரல் அணி 142 ஓட்டங்களையும் பெற்றன.

இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு சரஸ்வதி அணி 183 ஓட்டங்களையும், சென்ட்ரல் அணி 4 விக்கெட் இழப்புக்கு 90 ஓட்டங்களையும் பெற்று சரஸ்வதி அணி வெற்றிக்கிண்ணத்தை தன்வசமாக்கிக் கொண்டது.

சிறந்த துடுப்பாட்ட வீரராக, ஆர். குணேசிகன் சிறந்த பந்துவீச்சாளராக சந்தோஷ் ஆட்ட நாயகனாக சி. கிங்ஸ்டன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

ஒருநாள் போட்டியின் போது சரஸ்வதி 48 ஓவருக்கு எல்லா விக்கெட் இழப்புக்கு 192 ஓட்டங்களையும், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்ரல் 35 ஓவர்களில் 131 ஓட்டங்களை எடுத்தன. இதன்போது போதிய வெளிச்சமின்மையால் போட்டி இடைநிறுத்தப்பட்டு 'பெரபோல் அடிப்படையில் 31 ஓட்டங்களால் சரஸ்வதி அணி வெற்றீட்டியது.

இதன்போது சிறந்த துடுப்பாட்டக்காரராக 50 ஓட்டங்களைப் பெற்ற அசோக், சிறந்த ஆட்ட நாயகனாக 57 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டை கைப்பற்றிய சி. கிங்ஸ்டன் ஆகியோர் தெரிவாகினர்.

இரு போட்டிகளிலும் கப்டன்களாக சந்தோஷ், குணசீலன் ஆகியோர் சரஸ்வதி வீரர்களை வழிநடத்தினர்.

பழைய மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே நடந்த இரு கிரிக்கெட் போட்டி இரண்டிலும் சென்ரல் அணி வெற்றியீட்டியது.

8 வருடங்களாக உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றும் கிரிக்கெட் பொறுப்பாசிரியர் சதீஷின் தலைமையிலும் வழிகாட்டலிலும் பயிற்றுவிப்பாளர் கோபிநாத்தின் பங்களிப்பில் சரஸ்வதி அணியினர் திறமையாக விளையாடி வெற்றிவாகை சூடியிருந்தனர்.

இவ் விழாவில் பிரதேச அதிபர்கள், பிரதியதிபர்கள், சமய சமூக வர்த்தகப் பிரமுகர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

பதுளை தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...