தாய், சேய் ஆரோக்கியத்தில் அவதானம் தேவை | தினகரன்

தாய், சேய் ஆரோக்கியத்தில் அவதானம் தேவை

தென்னாசியப் பிராந்தியத்தில் கருப்பையில் வளரும் சிசுவின் பாதுகாப்பு மற்றும் பிரசவத்தின் பின்னரான தாய் சேய் பாதுகாப்பு தொடர்பான ஆரோக்கியத்துறையில் இலங்கை மிகச் சிறந்த இடத்தை பெற்றுள்ளது. அதன் பயனாக இந்நாட்டில் வருடா வருடம் 3,35,000பிரசவங்கள் இடம்பெறுகின்ற போதிலும் கர்ப்ப காலம் மற்றும் பிள்ளைப் பிறப்புடன் தொடர்பான தாய் சேய் மரணம் பெரிதும் குறைவடைந்து காணப்படுகின்றது. 

ஆனால் இவ்வகை மரணம் உலகில் அதிகளவில் இடம்பெறும் நாடாக சியாரலியோன் உள்ளது. அங்கு ஒரு இலட்சம் குழந்தைகள் பிறக்கும் போது 1360தாய்மார் உயிரிழக்கின்றனர். ஆனால் கிறீஸ், பின்லாந்து போன்ற நாடுகளில் ஒரு இலட்சம் குழந்தைகள் பிறக்கும் போது மூன்று தாய்மாரே மரணமடைகின்றனர். இலங்கையின் அயல் நாடான பங்களாதேசத்தில் ஒரு இலட்சம் குழந்தைகள் பிறக்கும் போது 176தாய்மார் மரணமடைகின்றனர். இவற்றுடன் இலங்கையின் நிலைமையை ஒப்பிட்டுப் பார்க்கும் போது வளர்முக நாடு என்ற வகையில் இந்நாட்டின் நிலை சிறப்பாக காணப்படுகின்றது. ஆனாலும் இதனை மேலும் குறைப்பதற்கும் அதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இலங்கை மருத்துவர்கள் விஷேட கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். 

'இலங்கை வளர்முக நாடு என்றாலும் கர்ப்பகாலம் மற்றும் பிள்ளைப் பிறப்புடன் தொடர்பான தாய் மரணம் தொடர்பில் மிக சிறந்த நிலை காணப்படுகின்றது. இங்கு இடம்பெறும் பிரசவகால மரணங்கள் ஒவ்வொன்றும் கடந்த இரு தாப்தங்களாக மிக ஆழமாக ஆராயப்பட்டுள்ளன. இம்மரணங்களுக்கான காரணம் என்ன? அவற்றை எவ்வாறு தவிர்க்கலாம்? என்பன தொடர்பிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளன என்று குறிப்பிட்ட கொழும்பு பல்கலைக்கழகத்தின் மகப்பேறு மற்றும் பெண் நோயியல் பீடப் பேராசிரியர், இங்கு மிக சிறந்த நிலை காணப்படுகின்ற போதிலும் இம்மரணங்களை மேலும் குறைப்பது தொடர்பிலேயே விஷேட கவனம் செலுத்தப்படுகின்றது' என்று கூறியுள்ளார். 

'இந்நாட்டில் இலகுவாகக் குணப்படுத்தக்கூடிய நோய்களால் ஏற்படுகின்ற கர்ப்ப காலம் மற்றும் பிள்ளைப் பிறப்புடன் தொடர்பான தாய் மரணங்கள் குறைவடைந்துள்ள போதிலும் ஏனைய நோய்களால் ஏற்படும் மரணங்களில் அதிகரிப்பை அவதானிக்க முடிவதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  

இந்நாட்டில் கர்ப்பகாலம் மற்றும் பிள்ளைப் பிறப்புடன் தொடர்பான தாய் மரணங்களில் 50வீதத்திற்கு தாய்மார் தமது நோய்க்காக சிகிச்சை பெறத் தீர்மானம் எடுப்பதற்கு தாமதமடைவதே பிரதான காரணமாக அமைந்துள்ளதாகவும், தவிர்த்துகொள்ளக் கூடிய குருதிச்சோகை, குருதிப்பெருக்கு, இருதய நோய்கள், சுவாசத் தொகுதி, நோய்த் தொற்றுக்கள் என்பனவும் இவ்வித மரணங்களுக்கு துணைபுரிவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்தோடு இன்புளுவென்ஸா எச்.1என்.1காரணமாகவும் கர்ப்பகால மற்றும் பிள்ளைப் பிறப்புடன் தொடர்பான தாய் மரணங்களும் இந்நாட்டில் அவதானிக்கப்பட்டுள்ளன. 

அதேநேரம் தடிமல், இருமல், இன்புளுவென்ஸா போன்ற நோய்கள் கர்ப்பிணிகளுக்கு ஏற்பட்டால் அவை குறித்து விஷேட கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் அவை நியூமோனியா வரையும் செல்லக் கூடியவையாகும். 

பொதுவாக ஒரு கருத்தரிப்பு இடம்பெற்றதும் அக்கருவின் வளர்ச்சி வாராவாரம் மாற்றமடையும். அதற்கேற்ப அளிக்கப்படும் பராமரிப்புக்களும், சிகிச்சைகளும் வேறுபடும். ஒரு சிசு 40வாரங்களில் குழந்தையாகப் பிறக்கும். இக்காலப்பகுதியில் பலவித மாற்றங்கள் ஏற்படும். அவற்றில் 28வாரங்கள் முதல் பிரசவம் இடம்பெறும் வரையும், பிரசவத்தின் பின்னரான முதல் ஏழு நாட்கள் வரையுமான காலப்பகுதியே பிள்ளைப்பிறப்பை அண்மிய காலம் (Perinatal period – கருத்தரித்து 28வாரங்கள் முதல் பிள்ளை பிறந்து முதல் ஒரு வார காலப் பகுதி) எனப்படுகின்றது. கருத்தரித்தது முதல் 28வாரங்களின் பின்னரான காலப்பகுதியில் குழந்தையும் குறிப்பாகத் தாயும் உடல் ரீதியில் சில சில மாற்றங்களுக்கு உள்ளாவர். குறிப்பாகப் பொதுவான நோய்களுக்கு உள்ளானவர்களுக்கு அவை தீவிரமடையலாம். அவற்றில் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்றன குறிப்பிடத்தக்கவை. இந்நோய்களின் அச்சுறுத்தலுக்கு கருப்பையில் வளரும் சிசுவும் கூட முகம் கொடுக்கலாம். 

அதேவேளை மிகவும் சிக்கல் மிக்கதாக பிரசவ சந்தர்ப்பம் விளங்கினாலும் இந்நாட்டில் 99வீதமான பிரசவங்கள் நல்ல நிலையில் இடம்பெறுகின்றன. ஆனால் பிரசவத்திற்கு பின்னரான காலப்பகுதியில் தாயிலும்,குழந்தையிலும் ஏற்படக் கூடிய மாற்றங்கள் குறித்தும் அதிகம் கவனம் செலுத்தப்படுவது அவசியமானது. 

2001ஆம் ஆண்டு வரையும் கர்ப்பகாலம் மற்றும் பிள்ளைப் பிறப்புடன் தொடர்பான தாய் மரணம் வீதம் பெரிதும் குறைவடைந்திருந்தது. அதாவது ஒரு இலட்சம் குழந்தைகள் பிறக்கும் போது 47தாய்மார் தான் மரணமடைந்தனர். அதேபோன்று ஆயிரம் குழந்தைகள் பிறக்கும் போது 13குழந்தைகள் தான் உயிரிழந்தன. இது இப்பிராந்திய நாடுகள் மத்தியில் காணப்படும் மிக சிறப்பான நிலையாகும். 

இந்நாட்டில் கர்ப்பகாலம் மற்றும் பிள்ளைப் பிறப்புடன் தொடர்பான தாய் மரண வீதம் பெரிதும் குறைவடைந்துள்ள போதிலும் பிள்ளைப் பிறப்பை அண்மிய காலப்பகுதியில் அதாவது, கருப்பையில் சிசு இருக்கும் போதும், பிரசவத்திற்கு பின்னரான முதல் ஏழு நாட்களுக்குள்ளும் இடம்பெறும் மரணங்களுக்கிடையிலான இடைவெளி ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு அதிகரித்து காணப்படுகின்றது. 

அந்தவகையில் இந்நாட்டில் 2015இல் ஒரு இலட்சம் குழந்தைகள் பிறந்த போது கர்ப்பகாலம் மற்றும் பிள்ளைப் பிறப்பு தொடர்பில் 33.7வீதத் தாய்மார் உயிரிழந்தனர். ஆனால் இந்நாடு சுதந்திரமடைந்த போது ஒரு இலட்சம் குழந்தைகள் பிறந்த போது 1600தாய்மார் உயிரிழந்தனர். இது இன்று 33.7வீதம் வரைக் குறைவடைந்துள்ளது. ஆயினும் 2008முதல் கர்ப்ப காலம் மற்றும் பிள்ளைப்பிறப்புடன் தொடர்பான தாய் மரணம் குறைவடையவில்லை. அது அதே இடத்தில் ஸ்தம்பித நிலையில் தான் காணப்படுகின்றது. 

மேலும் குழந்தை மரண வீதமும் இந்நாட்டில் பெரிதும் குறைவடைந்துள்ளன. அதாவது பிரசவத்தின் பின்னரான ஒரு வருடத்திற்குள் இடம்பெறும் மரணம் பெரிதும் வீழ்ச்சியடைந்துள்ளன. ஆனால் இந்நாட்டில் இடம்பெறும் குழந்தை மரணங்களில் 71வீதமானவை பிரசவத்தின் பின்னரான முதல் 28நாட்களுக்குள்ளேயே இடம்பெறுகின்றன. இவற்றில் 60வீதமான குழந்தைகள் முதல் வாரத்தில் உயிரிழக்கின்றன. அதிலும் 40வீதமான குழந்தைகள் பிறந்த முதல் நாளிலேயே மரணமடைகின்றன. 

இவை இவ்வாறிருக்க, 2014இல் 3,35,000குழந்தைகள் பிறந்த போது 1306குழந்தைகள் கருப்பையிலேயே இறந்து பிறந்துள்ளன. இதனை சர்வதேச மட்டத்திலும், பிராந்திய மட்டத்திலும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது இலங்கையின் நிலைமை 04வீதம் தான். இதன்படி ஆயிரம் பிள்ளைகள் பிறக்கும் போது 04பிள்ளைகள் தான் இவ்வாறு கருப்பையில் இறந்து பிறப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 

புள்ளி விபரங்களின் படி இலங்கையில் கர்ப்பகால மற்றும் பிள்ளை பிறப்புடன் தொடர்பான ஆரோக்கிய நிலைமை நல்ல நிலையில் உள்ளது. ஆனால் தாய் சேய் மரணங்களை மேலும் குறைக்க வேண்டும். கருப்பையினுள் பிள்ளை இறந்து பிறப்பதை எவரும் விரும்புவதில்லை. குறிப்பாக கருப்பையில் குழந்தை இறந்து பிறப்பதற்கு பல காரணங்கள் துணைபுரியலாம். சில சமயம் இவ்வகை மரணங்களுக்கான காரணங்களை அறிய முடியாத நிலைமையும் ஏற்படலாம். அதிலும் இவ்வகை மரணங்களில் 40வீதமானவற்றிற்கு இன்னும் காரணங்கள் கண்டு பிடிக்கப்படவில்லை. 

அதன் காரணத்தினால் உலகலாவிய ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள நியமங்களுக்கு ஏற்ப பிரசவ காலத்திற்கு அண்மித்த காலப் பகுதியிலான தாய் சேய் பராமரிப்பு சேவையை மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்து விஷேட கவனம் செலுத்தப்பட்டுள்ளன. இதன் நிமித்தம் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவமும் அவசியமும் மருத்துவத் துறையினரால் உணரப்பட்டுள்ளன. 

ஆகவே இலங்கையின் கர்ப்பகாலம் மற்றும் பிள்ளைப் பிறப்புடன் தொடர்பான ஆரோக்கிய சேவை மேலும் மேம்பாடு அடைவதற்கான வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன. அவை நம்பிக்கை தரக்கூடிய முன்சமிங்சையாக அமையும் என்பதில் ஐயமில்லை. 

 

முஹம்மத் மர்லின்


Add new comment

Or log in with...