குள்ள மனிதர்கள் நடமாடுவதாக வெளிவரும் ஊர்ஜிதமற்ற செய்திகள் | தினகரன்

குள்ள மனிதர்கள் நடமாடுவதாக வெளிவரும் ஊர்ஜிதமற்ற செய்திகள்

உண்மை நிலைமை என்ன?

இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் குள்ள மனிதர்கள் இரவு நேரங்களில் கண்களில் தென்பட்டதாக ஏராளமான மக்கள் தகவல் தெரிவித்துள்ளதாக இந்திய இணையத்தளமொன்று கட்டுரையொன்றை வெளியிட்டுள்ளது.

இந்த குள்ள மனிதர்கள் ஏலியன்களாக (வேற்றுகிரக வாசிகள்) இருக்கக் கூடுமென்று சிலர் அச்சம் காரணமாக கூறுவதாகவும் பலரும் தெரிவிக்கின்றனர்.

மேலும் வயல்களிலும் காடுகளிலும் இவ்வாறான குள்ள மனிதர்களை பலரும் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏலியன்கள் சென்றதாகவும் ஒரு சிலர் தெரிவித்து இருந்தனர்.

இரவு நேரத்தில் தங்களது வயல் காட்டிற்குச் செல்லும் போது குள்ள மனிதர்கள் ஆங்காங்கே நடமாடுவதை கண்டதாக பலரும் கூறியுள்ளனர். தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்கள் என்று பல தரப்பினரும் இவ்வாறான தகவல்களை சமீப காலமாக கூறி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மாத்தறை மாவட்டத்தில் வசிக்கும் தமிழர்கள் மற்றும் சிங்களவர்கள் இவ்வாறான குள்ள மனிதர்களைக் கண்டதாக இந்திய இணையத் தளம் கூறியுள்ளது. இதுகுறித்து இலங்கை பொலிசில் முறையிடப்பட்டுள்ளது. ஆனாலும் இச்செய்திகளை எவராலுமே ஊர்ஜிதம் செய்ய முடியாதுள்ளது.

சிகிரியா மலைத் தொடர் மட்டும் அல்லாமல் அப்பகுதியில் இரவு நேரங்களில் பறக்கும் தட்டுகளைப் போன்ற உருவங்களைக் கண்டதாக சிலர் கூறியுள்ளனர். அங்கு ஒரு சில ஓசைகளையும் கேட்டதாக சிலர் தெரிவித்துள்ளனர்.

அம்பாறை மாவட்டத்திலுள்ள கிராமம் ஒன்றில் கடந்த பெப்ரவரி 2-ம் திகதி சோளப் பயிர் பாதுகாப்புக்கு சென்ற கருணாதிலக்க என்ற விவசாயி, இரண்டடி உயரமும் நீண்ட தலைமுடியும் சிவந்த முகமும் கொண்ட ஒரு விசித்திர உருவம் வயலுக்குள் நடந்து செல்வதை கண்டதாக மிரண்டு ஓட்டம் பிடித்தார். ஊரில் உள்ளவர்களை அழைத்து வந்து பார்த்த போது அங்கு யாரும் இல்லை. இதன் பின்னர் சிலநாட்கள் கழித்து, அனுராதபுரம், பொலநறுவை பகுதிகளுக்கு அருகில் இரவு நேரம் வெளிச்சமான பொருள் ஒன்று தரையிறங்கியதை பலரும் பார்த்ததாக தெரிவித்துள்ளனர். இது பறக்கும் தட்டாக இருக்கலாம் என அவர்கள் ஊகிக்கின்றனர்.

இந்த இரண்டு தகவல்களையும் இணைத்து பரவும் தகவல்களால் இலங்கையின் சில இடங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாத்தறை மாவட்டத்தில் நேற்றைய தினம் குள்ள மனிதர்களினால் தாக்கப்பட்டதாக சிலர் கூறியுள்ளனர்.

மாத்தறை - தொட்டமுன பகுதியில் இரவில் சில குள்ள மனிதர்கள் தம்மீது தாக்குதல் நடத்தியதாக முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தாம் விசாரணைகளை நடத்திய போதிலும், தமக்கு எந்தவிதமான ஆதாரங்களையும் திரட்டிக் கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டதாக பொலிசார் கூறியதாக இணையத்தள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் குள்ள மனிதர்களின் நடமாட்டம் குறித்து வெளியான செய்திகள் தொடர்பில் தாம் விடயங்களை ஆராய்ந்ததாகவும் எனினும், நாட்டிற்குள் அவ்வாறு எந்தவொரு குள்ள மனிதரின் நடமாட்டங்கள் தொடர்பிலும் தமக்கு உறுதிப்படுத்தும் வகையிலான ஆதாரங்கள் கிடைக்கவில்லை எனவும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆய்வு பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன கூறியுள்ளார்.

ஊடக பிரபல்யத்தை பெற்றுக் கொள்ளும் நோக்குடன் சில தரப்பினர் இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், குள்ள மனிதர்களின் நடமாட்டம் குறித்து தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகின்ற கருத்தில் எந்தவித உண்மை தன்மையும் கிடையாது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆய்வு பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன குறிப்பிட்டார்.


Add new comment

Or log in with...