நீர் அடிப்படை உரிமை; யாரும் புறக்கணிக்கப்படலாகாது | தினகரன்

நீர் அடிப்படை உரிமை; யாரும் புறக்கணிக்கப்படலாகாது

அறிவு வளர்ச்சி இருமடங்காக அதிகரித்து வரும் இன்றைய தொழில்நுட்ப உலகில் வர்த்தக ரீதியாக நோக்கப்படுகின்ற ஒன்றாகவும் அபிவிருத்திற்கு தேவையான தொடக்கநிலை வசதியாகவும் சுத்தமான நீர் கருதப்படுகின்றது. இது மனிதனின் ஆரோக்கியத்தில் ஆழமாக தாக்கம் செலுத்துவதனால் சுகதேகியாக வாழ்வதற்கான உயிர் நாடியாகவும் காணப்படுவதோடு அவனது சமூக பொருளாதாரத்திலும் செல்வாக்குச்செலுத்தும் ஒன்றாகவும் உள்ளது.

இன்றைய உலகில் 2.1பில்லியன் மக்கள் தமது வீடுகளில் சுத்தமான நீர் இன்றி வாழ்கின்றனர். உலகளாவிய ரீதியில் கிராமப்புறங்களில் வழும் 80சதவீதமான மக்கள் ஆரோக்கியமற்ற மற்றும் பாதுகாப்பற்ற நீர் மூலங்களிலிருந்து பெற்றுக்கொள்ளும் நீரினையே பாவிக்கின்றனர். மேலும் நான்கில் ஓரு ஆரம்ப பாடசாலைகளில் குடிப்பதற்கு நீர் இன்றிமாணவர்கள் பாதுகாப்பற்ற நீரினை பாவித்தல் அல்லது தாகத்தோடு வீடு செல்கின்ற நிலை காணப்படுவதாகவும் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. மேலும் 2050ம் ஆண்டளவில் தற்போதுள்ள நீருக்கான தேவையை விட 30சதவீதம் உயர்ந்து காணப்படும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

உலகளாவியரீதியில் இனம்,மதம்,சாதி,மொழி,பிராந்தியம்,தேசியம்,சமூக பொருளாதார அந்தஸ்து மற்றும் வருமை போன்ற பல்வேரு காரணிகளால் தமக்கான சுத்தமான மற்றும் போதுமான குடிநீரினை பெற்றுக்கொள்வதில் மக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். மேலும் தனிநபருக்குக் கிடைக்கின்ற நீரின் அளவுக்கும் ஒரு தேசத்தின் வறுமை அளவிற்கும் நெருக்கமானதொடர்பு இருகின்றது என பொருளியல் துறைசார்ந்த அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

தமக்குத் தேவையான சுத்தமான குடிநீரின்றிவாழ்கின்ற மக்கள் இன்னும் எமது நாட்டிலும் உள்ளனர். சில பிரதேசங்களில் அதனை பெறுவதற்காக பல முயற்சிகள் போராட்டங்கள் என முன்னெடுக்கப்பட்டு வருவதனை காண்கின்றோம். மேலும் சுத்தமான நீர் இன்மையால் நீர் தொடர்பான நோய்கள் மற்றும் அதன் காரணமாக ஆரோக்கிய குறைபாடுகளுக்குட்பட்ட நிலையில் வாழும் மக்களும் உள்ளனர். அத்துடன் பாடசாலை கணக்கெடுப்பின் படி இலங்கையிலுள்ள 10,000க்கு மேற்பட்ட பாடசாலைகளில் இன்னும் 1223பாடசாலைகள் எதுவித குடிநீர் வழங்கல் வசதியுமின்றிஉள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22ம் திகதி உலக நீர் தினம் குறித்ததோர் தொனிப்பொருளுடன் அனுஷ்டிக்கப்படுவருகின்றது. அதாவது சுத்தமான நீர் மற்றும் சுத்தமான நீர் வளத்தை முகாமைத்துவம் செய்வதன் முக்கியத்துவத்தை முழு பூகோளத்திற்கும் எடுத்துக்கூறி தெளிவுபடுத்துவதற்கும் மற்றும் அதற்கான செயல்முறை திட்டங்களை மேற்கொள்வதற்கும் மக்களை ஊக்குவிப்பதன் பொருட்டு உலக நீர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் குறிக்கோளாக சுத்தமான நீர் குறித்தான உலகில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்வது குறித்த மக்களின் கவனம் ஈர்க்கப்படுவதேயாகும். இவ்வாய்வுக்கு அமைவாக எடுக்கப்படும் பொதுவான தீர்மானத்தின் அடிப்படையில் குறித்த ஆண்டில் அதிகமாக முன்னுரிமையளிக்கப்படவேண்டியது எத்துறைக்கு என்ற அம்சம் தொடர்பாக தீர்மானிக்கப்படும். அந்த வகையில் இந்த வருடத்திற்கான தொனிப்பொருளாக ''அனைவருக்கும் நீர் யாரும் புறக்கணிக்கப்படலாகாது'' என்ற விடயம் முன்வைக்கப்பட்டுள்ளது. இது நிலையான அபிவிருத்தி இலக்குகளின் (இலக்குகள் 17) அடிப்படையில்  முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த இலக்குகள் அனைவருக்கும் சிறந்த மற்றும் நிலையான எதிர்காலத்தை 2030ம் ஆண்டளவில் அடையும் நோக்கில் 2014ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட செயல் திட்டமாகும். அவைகளில் ஆறாவது இலக்கு சுத்தமான மற்றும் போதுமான அளவிலும் நிலையான முகாமைத்துவத்தின் அடிப்படையில் அனைவருக்கும் நீரினை கிடைக்கச்செய்வதாகும். இதன் மறுவடிவமே அனைவருக்கும் நீர் யாரும் புறக்கணிக்கப்படலாகாது என்பதாகும்.

தற்போதைய நிலையில் நாட்டில் 65சதவீதத்திற்கு மேற்பட்ட மக்கள் சுத்தமான குடிநீரை பெற்றுவருகின்றனர். மொத்த சனத்தொகையில் 48சதவீதமானவர்களுக்கு குழாய் நீர் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளதோடு அதனை 2020ம் ஆண்டிக்குள் 60சதவீதமாக உயர்த்துவதற்கான வேலைத்திட்டங்களும் உரிய அமைச்சு மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் முன்னெடுக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

யாராக இருந்தாலும் எங்கிருந்தாலும் சுத்தமான குடிநீர் மனிதர்களின் உரிமையாகும். மக்கள் சுத்தமான நீர் மற்றும் பொது சுகாதாரத்தை பெறுவதில் பாதிப்பு காணப்படுமாயின் நிலையான அபிவிருத்தி மற்றும் செழிப்பான உலகம் என்பதனை அடைவதில் பாரிய தேக்கநிலை தோன்றும். இன்னும் குறிப்பிட்ட மக்கள் தொகையினர் தமக்கான சுத்தமான குடிநீர் இன்றி வாழும் நிலையில் எங்களால் ஒரு பூகோளமயமான சமூகமாக முன்னோக்கி செல்லவதில் இடைவெளியும் தோன்றும். எனவே பின்வரும் விடயங்களை கவனத்திற் கொள்வதன் மூலமும் இவ்வாண்டிற்கான தொனிப்பொருளின் இலக்கினை அடைவதற்குரிய வழிவகைகளை காணலாம்.

வைப்பக படம்

அடிப்படை தேவைகளில் ஒன்றான சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்வதற்காக முயற்சிக்கும் மற்றும் கோரிக்கைகளை முன்வைக்கும் இன்னும் சவால்களுக்கு உட்பட்டுள்ள மக்களின் குரல்கள் தட்டிக்கழிக்கப்படமுடியாத ஒன்றாகும். அதனை அம்மக்களின் பிரதிநிதிகள்,தீர்மானம் நிறைவேற்றுவோர் மற்றும் திட்டங்களை வகுப்போர் தங்களது நிகழ்ச்சிநிரலில் உள்வாங்குதல் மற்றும் தேவையானபோது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்அவர்களது தார்மீக பொறுப்பாகும்.

நகர மக்களின் வேகமான சனத்தொகை அதிகாரிப்பு,கைத்தொழில் மயமாக்கல்,காலநிலை மாற்றத்தினால் ஏற்படுகின்ற அனர்த்தங்கள் (உலக பருவநிலை கண்டறியும் அமைப்பு(IPCC)கூறுவது போல பருவநிலை வேகமாக மாறி வருகின்ற காரணத்தினால் மழை பொழியும் நாட்களும் அதன் அளவும் கணிசமாக குறையக்கூடும்),சிபாரிசு செய்யப்பட் அளவை மீறி பல்வகைப்பட்ட இரசாயண உர வகைகள் மற்றும் பீடைநாசினிகளை பாவித்தல்,கழிவுகள் திட்டமிடப்படாத வகையில் நீரேந்து பகுதிகளில் கொட்டப்படுதல் மற்றும் இயற்கை அழிவுகள் காரணமாக ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை நீர் வள வலையமைப்பில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்திவருகின்றது.

நிலைத்து நிற்கும் அபிவிருத்திக்குஇணங்க அனைவருக்கும் நீர் என்ற வகையில் அதற்கான திட்டங்கள்,செயற்பாடுகள் போன்றன முன்னெடுக்கப்பட்டு வந்தாலும் அனைவருக்கும் நீரினை வழங்க அடிப்படையாக காணப்படும் நீர் மூலங்கள் மற்றும் நீரேந்து பகுதிகளை பாதுகாக்க வேண்டியது மிக முக்கியமானதாகும். மேலே குறிப்பிடப்பட்ட காரணிகள் நீரின் தரம் மற்றும் அளவில் தாக்கத்தினை தோற்றுவிக்கவல்ல விடயங்களாகும். அவைகளை கட்டுப்படுத்துவதற்கு உரிய பங்குதாரர்களின் அல்லது பொறுப்புவாய்ந்த நிறுவனங்களின் வகிபாகம் தட்டிக்கழிக்க முடியாத ஒன்றாகும். ஆனால் அவைகளுக்கிடையே நடைமுறையில் பாரிய இடைவெளி காணப்படுவதனால் உரிய பயனை அடையமுடியாதுள்ளது. 

இந்த விடயங்களை கருத்திற்கொண்டு நாட்டிலுள்ள அனைத்து நீர் ஆதாரங்கள்,சதுப்பு நிலங்கள் மற்றும் வெள்ளத்தை தாங்கக்கூடிய இடங்கள் போன்றன நிலைத்துநிற்கும் அபிவிருத்தியின் அடிப்படையில் பாதுகாப்பதற்குரிய பொறுப்பு வாய்ந்த தனித்துவமான அதிகாரம் பொருந்திய நிறுவனம் ஒன்றினை ஸ்தாபிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

வைப்பக படம்

அத்துடன் தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களினால் வெளியிடப்படும் மாசுகலந்த கார்பன்டை ஆக்ஸைடால் வளிமண்டலம் பாதிக்கப்படுகிறது. இது பாரியளவில் மாற்றம் ஏற்படுவதற்கு ஒரு முக்கியமான காரணமாகும். இதனை சரிசெய்வதற்குப் புதிய மரங்களை நட்டுக் காடுகளை உருவாக்கி பச்சை அகக்கட்டுமானங்களை பெருக்குவதும் முக்கியமாகிறது. இவ்வாறான ஒரு திட்டத்தினை பாகிஸ்தானின் புதிய பிரதமர் இம்ரான் கான் முன்னெடுத்து நடைமுறைப்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் நீரேந்து பகுதிகளின் எல்லைகள் அடையாளப்படுத்தப்படுவதுடன் அவற்றிக்கு இடையூறாக காணப்படும் அம்சங்களை இனம் கண்டு அவைகளுக்கான சாத்தியமான மாற்று வழிகளை முறையான பொறிமுறையுடாக கைக்கொள்ள வேண்டியதும் பொறுப்பு வாய்ந்த அரசாங்கத்தின் அலட்சியம் செய்யமுடியாத கடமையாகும். அத்துடன் நீர் மூலங்களை செம்மைப்படுத்துவதற்கும் தேவையான புதிய நீர் ஆதாரங்களை பெருக்குவதற்குமான வேலைத்திட்டங்களை ஒரு முறைப்படுத்தப்பட்ட அமைப்பில் முன்னெடுத்துச் செல்லல். இதற்காக நீர் மற்றும் அது சார்ந்த வல்லுநர்களிடமிருந்து உரிய வழிகாட்டல்களை பெற்றுக் கொள்ளுதல் அவசியமானதாகும்.

அத்துடன் இவ்வாறான திட்டங்களுக்கான பணிகள் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட முறையான கண்காணிப்பின் அடிப்படையில் முன்னெடுத்து செல்லப்படவேண்டியதும் இங்கு குறிப்பிட்டாகவேண்டும்.

பொதுமக்கள் நீரினை வீண்விரையமின்றி பாவித்தல்மற்றும் சேமித்தல் இவற்றுக்குமேலாக நீர் ஆதாரங்களை மாசுபடுத்தும் நேரடியான மற்றும் மறைமுகமான செயற்பாடுகளை முழுமையாக கைவிடல் மற்றும் அதற்காக பணியாற்றும் அனைத்து அரச,அரச சார்பற்ற மற்றும் சமூக நல அமைப்புக்களின் அர்ப்பணிப்புமிக்க செயற்பாடுகளுக்குபூரண ஓத்துழைப்பினை நல்குதல்.

மேலும் அனைவருக்கும் நீர் யாரும் புறக்கணிக்கப்படலாகாது என்ற இவ்வாண்டிற்கான உலக நீர் தினத்தின் தொனிப்பொருளின் இலக்கினை எட்டுவதற்கு சிறந்த அரசியல் கொள்கையும் அதற்கான வலிமையான திட்டமிடலும் கண்காணிப்பும் அடிப்படையாக நோக்கப்படுகின்றன.

ஐக்கிய நாடுகளினால் 2010ம் ஆண்டு சுத்தமான போதியளவான குடிநீரை பெற்றுக்கொள்வது மனிதர்களின் உரிமை என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதனை ஞாபகமூட்டிய நிலையில் இன்னும் தமக்கான சுத்தமான குடிநீரை பெறுவதற்காக காத்திருக்கும் மக்களை இலக்குவைத்து நிலையான அபிவிருத்தியின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடுகளையும் வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்கவேண்டியது அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் என்றவகையில் தலையாயகடமையாகும். அத்துடன் இது தொடர்பாக சமூக மட்டத்தில் பணிசெய்கின்ற இதர நிறுவனங்களும் தங்களது முழுமையான பங்களிப்பினை நல்குவதற்கும் முன்வரவேண்டும். மேலும் மக்களின் வினைத்திறன் மிக்க பங்கேற்பும் அதற்காக சிவில் சமூகத்தின் மனோநிலையில் மாற்றங்களை கொண்டுவருவதில் சிவில் அமைப்புக்களின் ஈடுபாடும் இன்றியமையதாதாகும்.

எம்.எஸ்.எம். சறூக்
சிரேஷ்ட சமூகவியலாளர்,பிராந்திய முகாமையாளர் காரியாலயம்
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை - மட்டக்களப்பு.


Add new comment

Or log in with...