24 மணிநேரத்தில் 4 பலஸ்தீனர் இஸ்ரேலால் சுட்டுக் கொலை | தினகரன்

24 மணிநேரத்தில் 4 பலஸ்தீனர் இஸ்ரேலால் சுட்டுக் கொலை

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் கடந்த 24 மணி நேரத்தில் நான்காவது பலஸ்தீனர் இஸ்ரேலிய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார்.

பெத்லஹாம் நகருக்கு அருகில் உள்ள இஸ்ரேலிய சோதனைச் சாவடியில் இஸ்ரேல் படையினரால் சுடப்பட்ட ஒருவரின் இரு துப்பாக்கிச் சூட்டு காயங்களுக்கு தமது குழுவைச் சேர்ந்த ஒருவர் சிகிச்சை அளித்ததாக பலஸ்தீன செம்பிறை சங்கம் குறிப்பிட்டுள்ளது.

பெத்லஹாமுக்கு அருகில் வாதி புகின் கிராமத்தைச் சேர்ந்த 26 வயது அஹமது மனஸ்ரா என்பவரே கொல்லப்பட்டிருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மனஸ்ராவின் நெஞ்சு மற்றும் தோள் பகுதியில் துப்பாக்கிக் காயம் ஏற்பட்டுள்ளது. மற்றொரு பலஸ்தீனர் படுகாயத்திற்கு உள்ளாகியுள்ளார்.

சோதனைச்சாவடியில் இருந்த இஸ்ரேலிய படையினர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் காரில் இருந்த பலஸ்தீனர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சம்பவத்தை பார்த்தவர்கள் விபரித்துள்ளனர். அலா கயதா என்ற அந்த பலஸ்தீனரின் வயிற்றில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது.

கயதாவின் கார் வண்டிக்குப் பின்னால் தனது வாகனத்தை செலுத்தி வந்த மனஸ்ரா, தனது வாகனத்தில் இருந்து இறங்கி கயதாவுக்கு உதவிக்குச் சென்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தனது கார் வண்டிக்குத் திரும்பிய மனஸ்ரா மீது இஸ்ரேலிய படையினர் சூடு நடத்தியுள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை 19 வயது பலஸ்தீனர் ஒருவரை சுட்டுக் கொன்ற இஸ்ரேல் படை, மற்றொரு சம்பவத்தில் மேலும் இரு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.


Add new comment

Or log in with...