நியூசிலாந்தில் இராணுவ பாணி ஆயுதங்களுக்கு தடை விதிப்பு | தினகரன்

நியூசிலாந்தில் இராணுவ பாணி ஆயுதங்களுக்கு தடை விதிப்பு

கிரைஸ்ட்சர்ச் தாக்குதலை அடுத்து அரை தனியங்கி அயுதங்கள் மற்றும் தாக்குதல் துப்பாக்கிகளுக்கு தடை விதிக்கப்படும் அறிவிப்பை நியூசிலாந்து பிரதமர் ஜெசின்டார் ஆர்டர்ன் வெளியிட்டுள்ளார்.

துப்பாக்கிதாரி ஒருவர் இரு பள்ளிவாசல்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு ஒரு வாரத்திற்குள்ளேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த புதிய சட்டம் வரும் ஏப்ரல் 11 ஆம் திகதிக்கு அமுலுக்கு கொண்டுவர எதிர்பார்ப்பதாக ஆர்டர்ன் குறிப்பிட்டுள்ளார். “எப்போதுமில்லாதவாறு எமது வரலாறு மாறிவிட்டது. தற்போது எமது சட்டமும் மாற வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டார்.

கிரைஸ்ட்சர்ச் தாக்குதலில் கொல்லப்பட்ட அனைவரும் தற்போது அடையாள காணப்பட்டதாக பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.

தம்மை வெள்ளை மேலாதிக்கவாதியாக அடையாளப்படுத்திக் கொண்ட தாக்குதல்தாரியான பிரென்டன் டர்ரன்ட் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருப்பதோடு மேலும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் இந்த சம்பவத்தில் உயிருடன் இருப்பவரை உயிரிழந்தவர் எனத் தவறுதலாய்ப் பெயர் குறிப்பிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீதிமன்றத்தில் துப்பாக்கிதாரி மீது குற்றம் சுமத்தப்பட்டபோது, அந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் பட்டியல் ஒப்படைக்கப்பட்டது.

அதில் உயிரோடு இருந்த ஒருவரின் பெயர் தவறுதலாய் இடம்பெற்றுவிட்டது என்பதை பொலிஸார் ஒப்புக்கொண்டனர். அவரைத் தொடர்புகொண்டு, அவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டதாகக் பொலிஸ் தெரிவித்தது.

“தாக்குதலுக்கு ஆறு தினங்களின் பின்னர் இராணுவ வடிவிலான அனைத்து அரை தானியங்கி அயுதங்கள் மற்றும் தாக்குதல் துப்பாக்கிகளுக்கு நியூசிலாந்தில் தடை விதிக்கும் அறிவிப்பை வெளியிடுகிறோம்” என்று நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஆர்டர்ன் குறிப்பிட்டார். அத்துடன், துப்பாக்கிகளின் செயல்பாட்டு வேகத்தை அதிகரிக்கும் மேகசின்கள், பம்ப் ஸ்டொக் போன்றவற்றுக்கும் தடை விதிப்பதாக அவர் கூறியுள்ளார்.

துப்பாக்கி விற்பனையாளர்கள் மற்றும் ஏற்கனவே துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அரசிடம் திரும்ப அளித்தால் சலுகை விலையில் ஏற்றுக் கொள்வதாக நியூசிலாந்து பிரதமர் அறிவித்துள்ளார். மீறி துப்பாக்கியை வைத்திருப்பவர்களுக்கு 4 ஆயிரம் நியூசிலாந்து டொலர் அபராதமும் 3 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார். கிரைஸ்ட்சர்ச் தாக்குதல்தாரியை தீவிரவாதியென குறிப்பிட்ட ஆர்டர்ன், தான் அவரது பெயரை ஒருபோதும் உச்சரிப்பதில்லை என்று தெரிவித்திருந்தார்.

கிரைஸ்ட்சர்ச் துப்பாக்கிதாரி தாக்குதலின்போது ஒரு ஏ.ஆர்15 உட்பட அரை தானியங்கி துப்பாக்கிகளை வைத்திருந்ததோடு அதிக துப்பாக்கி குண்டுகளை வைத்திருப்பதற்கு வசதியாக அதிக திறன்கொண்ட மேகசின்களை பொருத்தி இருந்ததாக நம்பப்படுகிறது.

இதனிடையே தாக்குதலுக்கு இலக்கான அல் நூரி பள்ளிவாசல் இன்று வெள்ளிக்கிழமை தொழுகைக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளது. துப்பாக்கிச் சூட்டால் பாதிக்கப்பட்ட அந்தப் பள்ளிவாசல் சுத்தம் செய்யப்பட்டு வண்ணம் பூசப்பட்டுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை முஸ்லிம்களின் ஜும்மா தொழுகை தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் என அந்நாட்டுப் பிரதமர் ஆர்டன் குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரம், தாக்குதலின்போது உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் 2 நிமிடங்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

வெள்ளிக்கிழமை தொழுகைக்குச் செல்லும் முஸ்லிம்களுக்கு உத்தரவாதம் கொடுக்கும் வகையில் திடமான பாதுகாப்பு முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என அவர் உறுதியளித்தார்.


Add new comment

Or log in with...