ஹம்பாந்தோட்டை உப்பளத்தில் அறுவடை ஆரம்பம் | தினகரன்

ஹம்பாந்தோட்டை உப்பளத்தில் அறுவடை ஆரம்பம்

ஹம்பாந்தோட்டை உப்புக் கம்பனியின் உப்பு அறுவடை நிகழ்வு அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது. அந்நிறுவனத்தின் தலைவர் ஐயூப் கான் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பணிப்பாளர்கள் சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். 

உப்புக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான ஹம்பாந்தோட்டை, பலடுபான, பூந்தலை மற்றும் கொஹொலங்கலை ஆகிய உப்பளங்களில் இந்த அறுவடை தற்பொழுது ஆரம்பமாகியுள்ளது.  

ஹம்பாந்தோட்டை உப்பளத்திலிருந்து 54,000மெற்றிக் தொன் உப்பும், பூந்தலை உப்பளத்திலிருந்து 17,000மெற்றிக்தொன்னும், பலடுபான உப்பளத்திலிருந்து 19,000மெற்றிக்தொன்னுமாக மொத்தம் 90ஆயிரம் மெற்றிக்தொன் உப்பு அறுவடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உப்பு உற்பத்திக்கு ஏற்ற உகந்த கால நிலை தொடர்ந்தும் காணப்படுமாக இருந்தால் எதிர்பார்த்ததைவிட அதிகமான உப்பை அறுவடை செய்யமுடியும் என அதன் தலைவர் ஐயூப் கான் நம்பிக்கை வெளியிட்டார். 

2014ஆம் ஆண்டிற்கு முன்னர் உப்பளங்களிலிருந்து 60ஆயிரம் மெற்றிக்தொன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டது. 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் முன்னெடுக்கப்பட்ட வினைத்திறனான திட்டங்களால் வருடாந்த உப்பு அறுவடை சராசரியாக 90ஆயிரம் மெற்றிக்தொன்னாக அதிகரித்துள்ளது. 

இலங்கையில் வருடாந்த உப்பு நுகர்வு 120,000 மெற்றிக் தொன்னாகக் காணப்படும் நிலையில், 30 ஆயிரம் மெற்றிக் தொன் உப்பு கைத்தொழில்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றது. இதற்கமைய நாட்டின் வருடாந்த மொத்த உப்புத் தேவை 150,000 மெற்றிக்தொன்னாகக் காணப்படுகிறது. எதிர்காலத்தில் நாட்டிற்கு தேவையான மொத்த உப்பையும் ஹம்பாந்தோட்டை உப்புக் கம்பனியிலிருந்து உற்பத்திசெய்யவே எதிர்பார்த்திருப்பதாக அதன் தலைவர் ஐயூப் கான் மேலும் தெரிவித்தார்.   


Add new comment

Or log in with...